கேமிராவுக்குப் பின்னால் இயக்குநரின் முகம் வேறு’! - நடிகர் ராகுல்

Wednesday, November 1, 2017

“பொறியியல் படிப்பு படிச்சிருந்தாலும், சினிமாவின் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருந்தது. வடக்கு இந்தியாவுல வளர்ந்ததால், எனக்கு ஹிந்தி நல்லாத் தெரியும். ‘விழித்திரு’ படத்தில் பணியாற்றும்பொழுது ஹீரோயினுக்கு சீனை சொல்லிக்கொடுத்து, இயக்குநருக்கு உதவியாக இருந்திருக்கேன்.

நடிப்புன்னு இல்லாம, எனக்கு படம் இயக்கவும் ஆசை இருக்கு. நடிகர்கள் அஜீத், விஜய் சேதுபதி மாதிரி எனக்கு எந்த பின்புலமும் கிடையாது. அவங்களை மாதிரி கடுமையாக உழைக்கணும். மக்களின் ஆதாரவோட சினிமாவுல ஜெயிக்கணும்!” நம்பிக்கையுடன் ஆரம்பிக்கிறார் புதுவரவு நடிகர் ராகுல்.

‘விழித்திரு’ பட வாய்ப்பு குறித்து?

“இயக்குநர்  மீரா கதிரவன் எனக்கு நல்ல நண்பர். சினிமா வாய்ப்பு தேடிட்டு இருக்கும்பொழுது, அவருகிட்ட “உங்க படத்துல நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீங்கன்னா என்னுடைய சினிமா கேரியர்ல அது நல்ல பிரேக் கொடுக்கும்” சொன்னேன். ‘விழித்திரு’ படம் முடிவானதும், அதுல எனக்கு வாய்ப்பு தந்தாரு. அதற்கு நான் என்னோட நன்றியை தெரிவிச்சுக்குறேன்!”

படத்தில் பணியாற்றிய அனுபவம்?

“முதல்ல க்ளைமேக்ஸ் காட்சிகளைத் தான் படம் பிடிக்க திட்டமிட்டோம். அந்த காட்சியிலதான் எல்லா ஆர்டிஸ்ட்டும் இருப்பாங்க. படப்பிடிப்பின் முதல் நாளே எனக்கு ரொம்ப பதட்டமா இருந்தது. இயக்குநர் வெங்கட்பிரபு சார், கிருஷ்ணா சார் தான் என் பயத்தை போக்கினாங்க. போட்டோ ஷூட்ல இருந்தே எனக்கு உதவியா இருந்தாங்க. அதை மறக்க முடியாது!”

முதல் படம் என்பதால் நடிப்புக்கு பயிற்சி எடுத்தீர்களா?

“இல்லைங்க. நடிப்பு பயிற்சி மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. கண்ணாடி முன்னால நின்னுகிட்டு நடித்து பார்க்கிறதுதான் நல்ல பயிற்சின்னு நினைக்கிறேன். அதுமட்டுமில்லாம இயக்குநர் மீரா கதிரவன் சார் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்தார். அதனால ‘விழித்திரு’ படத்துல முக்கியமான பாத்திரத்துல நடிப்பது சுலபமாக இருந்தது!”

இயக்குநர் மீரா கதிரவன் பற்றி?

“என்னுடைய நீண்டகால நண்பர். நண்பர்கள் வட்டத்துல இயல்பாக சிரிக்க சிரிக்க பேசுவாரு. ஆனால் படப்பிடிப்புன்னு வந்துவிட்டால் ரொம்ப கண்டிப்பானவரு. வேலையை ரொம்ப சீரியஸாக எடுத்துக்கிட்டு நூறு சதவீதம் அர்ப்பணிப்போடு செய்வாரு. கேமிராவுக்குப் பின்னாடி அவருடைய முகமே வேறு!”

அடுத்தப் பட வாய்ப்பு ?

“சினிமா இண்டஸ்ட்ரிக்கு நான் புது வரவு. அதனால என்னை நிறைய இயக்குநருக்கு தெரியாது. ‘விழித்திரு’ படத்தை பலரும் பார்த்துட்டு  வாழ்த்தினாங்க. இந்தப் படத்துக்குப் பிறகு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்கும்னு நம்புறேன்!”

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles