எல்லோருடைய மனதையும் பாதிக்கும் ‘விழித்திரு’! - நடிகர் விதார்த்

Wednesday, November 1, 2017

“நான் நடிக்கிற ஒவ்வொரு படமும் நாயகனுக்கான கதையாக இருக்காது. அது எப்போதும் இயக்குநரோட கதையாக மட்டுமே இருக்கும். ‘மைனா’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ வரை அப்படித்தான். என்னைப் பொறுத்தவரை இயக்குநர் எனக்காக எழுதிய பாத்திரத்தில் வாழணும்.

அப்படித்தான் ‘விழித்திரு’ படத்தில் திருடனாகவே வாழ்ந்திருக்கேன்!” ஒரு நட்சத்திரத்துக்கு உரிய எந்த அலட்டலும் இன்றி இயல்பான உடல்மொழியில் பேசுகிறார் விதார்த். தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர்.

“இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியுள்ள ‘விழித்திரு’ படத்தில் கதைதான் ஹீரோ. படத்தின் திரைக்கதை எல்லோராலும் பேசப்படும். நான்கு கதை மாந்தர்களை வைத்து, பின்னப்பட்ட கதை என்றாலும், இது விதார்த் படம், வெங்கட் பிரபு படம் இல்லை. இது முழுக்க முழுக்க இயக்குநரோட படம்!.  

ஓர் இரவில் நடக்கிற கதை என்பதால், ஷூட்டிங்கின்போது எல்லோருமே பிஸியாக இருந்தோம். அதனால், அப்போ படம் எப்படி வருமோன்கிற கேள்விகள் நிறைய இருந்தது. பிறகு, போஸ்ட் புரொடக்ஷன்ஸ் எல்லாம் முடிந்து, படத்தை முழுவதுமாக பார்த்த போதுதான் அதனோட அழகு, பிரம்மாண்டம் எல்லாம் புரிந்தது. படத்துல, சென்னையோட அழகை பார்க்கிறதுக்கே அவ்வளவு  பிரமிப்பாக இருந்தது!.

பொதுவாக வெங்கட் பிரபு சாரை நல்ல பாடகராகவும், இயக்குநராகவும் மக்களுக்கு தெரியும். ஆனால், அவர் நல்ல நடிகர் என ‘விழித்திரு’ படத்துக்கு பிறகு தெரிய வரும். இந்தப் படத்தில் தன்ஷிகா மற்றும் தம்பி ராமய்யா உடனான காம்பினேஷன் சீன் எனக்கு அதிகமா இருக்கு. எங்க மூன்று பேரோட பாத்திரப் படைப்பு நகைச்சுவை கலந்து இருக்கும். கதை நகர நகர எமோஷனல் அதிகமாகும். அதோட சுவாரசியமாகவும் இருக்கும். நிச்சயம் உங்க எல்லோருடைய மனதையும் ஈர்க்கிற, பாதிக்கிற படமாகவும் ‘விழித்திரு’ இருக்கும்!” நம்பிக்கையோடு முடித்தார் விதார்த்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles