போருக்குத் தயாராகுங்கள்! நடிகர் ரஜினி 

Friday, May 19, 2017

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த், கடந்த 4 நாட்களாக தன் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தின் உறுப்பினர்கள் (டோக்கன் உள்ளவர்களுக்கு மட்டும்) திரளாக பங்கேற்றனர். அவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த நான்கு நாட்களும் ரஜினி குறித்த பல்வேறு செய்திகள் றெக்கை கட்டிக்கொண்டு பறந்தன.

அவர் நடிக்கும் 'எந்திரன் 2.0' படத்துக்கான முன்னோட்டம் தான் இது. பாகுபலி 2 ஆயிரம் கோடி கல்லா கட்டியது. எனவே, தன்னுடைய படமும் வசூல் வேட்டை நடத்தவே இந்த போட்டோ ஷுட் எனவும் ஒருபக்கம் ட்வீட்டுகள் பறந்தன. ஒவ்வொரு நாளும் ரஜினி பேசினாலும், கடைசியாக இன்று அவர் பேசியது பலருக்கான பதிலாக அமைந்தது. 

நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது,

"என்னை வாழ வைத்த தெய்வங்களான என் ரசிக பெருமக்களே, ஊடக நண்பர்களே, பத்திரிக்கை நண்பர்களே அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். முதலில் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வளவு ஒழுக்கமாக, கட்டுப்பாடாக இங்கு வந்து இருந்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது. உங்களுடைய இந்த ஒழுக்கம் தான் வாழ்க்கையில ரொம்ப முக்கியமானது. ஒழுக்கமில்லாமல் எந்த ஒரு காரியத்திலும் நாம முன்னேற முடியாது.

முதல் நாள் நான் பேசியது என் ரசிகர்களுக்கு, நான் அரசியலுக்கு வந்தால் எப்படி இருக்கணும், சொன்னது. அது இவ்வளவு பெரிய சர்ச்சையாக வாதப்பொருளாக இருக்கும்னு நான் நினைக்கல. வாதங்கள், எதிர்ப்பு, ஆதரவு எல்லாமே இருக்கலாம். எதிர்ப்பு இல்லாம வாழவே முடியாது. அதுவும் அரசியல்ல எதிர்ப்புதான் மூலதனமே. வாத விவாதங்கள் இருக்கலாம், ஆனால் சமூக வலைத்தளங்களில் வெளியான விமர்சனங்களால் எனக்கு ஒரு சின்ன வருத்தம்.

நான் ஒரேயொரு விஷயம் மட்டும் தெளிவுபடுத்த விரும்புறேன். எனக்கு இப்போது 67 வயசு ஆகுது. ஆனால் 23 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன், 44 ஆண்டுகள், தமிழ்நாட்டில் உங்க கூடவே வளர்ந்தேன். கர்நாடகாவில் இருந்து வந்திருந்தாலும், என்னை ஆதரிச்சு, பெயர், புகழ், பணம் எல்லாம் அள்ளிக் கொடுத்து தமிழானகவே ஆக்கிட்டீங்க. எனவே நான் ஒரு பச்சைத் தமிழன். 
எங்க மூதாதையர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், நாச்சிக்குப்பம் ஊரில் பிறந்தவங்கன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். நீங்க என்னை தூக்கிப்போட்டா நான் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்துக்கும் போக மாட்டேன். என்னை வாழவைத்த தெய்வங்கள் என்னை மாதிரியே நல்லா இருக்கனும்னு நான் ஆசைப்படுவதுல என்ன தப்பு?ன்னு எனக்குத் தெரியலை. இங்கே உள்ள அமைப்பு கெட்டு போயிருக்கு. அரசியல் பத்தி, ஜனநாயகம் பத்தி மக்களோட கண்ணோட்டம் கெட்டு போயிருக்கு. எனவே முதலில் அமைப்பு சீர்படுத்தப்பட வேண்டும். ஜனங்களின் மனோபாவத்தை, சிந்தனையை மாற்ற வேண்டும், அதை எல்லாரும் சேர்ந்து செய்ய வேண்டும். அப்படியென்றால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும்!.

என்னை பற்றிய விமர்சனங்களுக்கு என் ரசிகர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம். ஏனென்றால் எதிர்ப்பு இருந்தால் தான் வளர்ச்சி அடைய முடியும். பழைய காலத்தில ராஜாக்கள் கிட்ட சேனை பலம் இருக்கும். லட்சக்கணக்கில் இருக்காது. ஆயிரக்கணக்கில் தான் இருக்கும். ஆனால், போர் வரும்போது நாட்டில் இருக்கும் ஆண் பிரஜைகளும் சேர்ந்து போரிடுவாங்க. அதுவரை அவர்கள் தன் கடைமைகளை செய்வார்கள். அதுபோல நாம் அனைவரும் அவரவர் கடைமைகளை இப்போது ஒழுங்காக செய்வோம். நேரம் வரும் போது போர்களத்தில் இறங்குவோம்!" என்றார். ரஜினியின் இந்தப் பேச்சு, ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, விரைவில் ரஜினி அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பேச்சும், இப்போதே கோலிவுட்டில் பற்றிக்கொண்டுள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவாரா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles