போய் வா அன்னையே!

Thursday, May 18, 2017

இந்திய சினிமாவில் தாய் பாத்திரத்தில் நடித்து, புகழ்பெற்ற நடிகை ரீமா லகு, இன்று மாரடைப்பால் காலமானார்.'' து து மேன் மேன்'' என்ற ஹிந்தி சீரியலில், மாமியார் பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பரவலான வெளிச்சத்துக்கு வந்தவர் ரீமா லகு. பிறகு, தனது அசாத்தியமான நடிப்பால் பாலிவுட்டிலும் கால்பதித்தார். குணச்சித்திர பாத்திரங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலும் அவருக்கு கைகொடுத்தது அம்மா பாத்திரம் தான்.

அமீர்கான், சல்மான்கான், அக்ஷய்குமார், சஞ்சய் தத் உள்ளிட்ட பல ஸ்டார்கள் நடித்த படங்களில் தாய் பாத்திரத்தில் நடித்து பிச்சு, உதறினார். "மதர் கேரக்டரா... கூப்பிடு ரீமாவை...!"எனும் அளவுக்கு அவரது மார்கெட் இருந்தது. அவருடைய நடிப்பின் தாக்கம் மராத்தி, கன்னடம், மலையாளம், தமிழ் வரை நீண்டது!

அவருடைய புகழ்பெற்ற ''து து மேன் மேன்'' சீரியலைப் போன்றே, தமிழிலும் 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியல் எடுக்கப்பட்டது. ரீமா லகு சாயலில் இருந்த ஸ்ரீபிரியா மாமியார் பாத்திரத்தை ஏற்று நடித்தார். இந்த நகைச்சுவை கலாட்டா நெடுந்தொடரும் ஹிட்டடித்தது. இத்தகைய புகழுக்கு சொந்தக்காரரான ரீமா, இன்று காலை மரணம் அடைந்தார். இந்தச் செய்தியை அறிந்த இந்தியத் திரையுலகமே கண்ணீரால் நனைந்தது. 

மும்பையில் வசித்து வந்த ரீமா லகுவுக்கு, நேற்று இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் உடனடியாக கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அதிகாலை ஒரு மணிக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை அறிந்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், அவை எதுவும் பலனிக்காமல் அவரது உயிர் சுமார் 3.30 மணி அளவில் உடலை விட்டு பிரிந்தது. 

ரீமா லகு நடிப்பதோடு மாடலிங்கும் செய்து வந்தவர். 59 வயதான அவர், மும்பையில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அவருக்கு மிருன்மயி லகு எனும் பெயருடைய மகள் உண்டு. அவரும் நடிகையாக உள்ளார். சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதுகளை பல முறை பெற்றவர் ரீமா லகு. அவரின் மறைவால் மும்பை திரையுலகமே கவலையில் ஆழ்ந்துள்ளது. இந்தியா சினிமா உலகுக்கே பேரிழப்பு ரீமா லகுவின் மரணம் என்றால் அது மிகையில்லை!

- கிராபியென்  ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles