பனிப்புயலுக்கு இடையே படப்பிடிப்பு! 'ரங்கா' படக்குழுவினரின் திகில் அனுபவம்!

Wednesday, May 10, 2017

பாஸ் மூவிஸ் சார்பில் விஜய் கே செல்லையா தயாரிக்கும் படம் "ரங்கா"  இப்படத்தில் சிபிராஜ், நிகிலா விமல் ஜோடியாக நடிக்கின்றனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளன. இப்படத்தை வினோத் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா பேசும்போது, 

" 'ரங்கா' படத்துக்கான படப்பிடிப்பை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று இயக்குநர் என்னை கேட்டார். 'அரசியல் ரீதியாகவும் பாதுகாப்பு ரீதியாகவும் சூழல் அங்கே சரியில்லை. இயற்கையும் ஆதரவாக இல்லை. அங்கே படப்பிடிப்பு நடத்துவது ரிஸ்க்' என பலர் எங்களை அச்சுறுத்தினர். ஆயினும் படத்தின் தரத்துக்காகவும், காட்சிகளின் உயிரோட்டதுக்காகவும் அந்த ரிஸ்க் எடுப்பதில் தவறு இல்லை என தோன்றவே ,உடனடியாக காஷ்மீர் சென்று விட்டோம்.

ஒரு தயாரிப்பாளராக படத்தின் தரத்தை உயர்த்த இதை செய்வது தான் நல்லது என எனக்கு தோன்றியது. முக்கியமான காட்சிகளை, காஷ்மீரில் யாரும் கண்டிராத இடங்களில் எல்லாம் படமாக்கி விட்டோம். உடல் ரீதியாகவும் மிக சிரமப்பட்டோம். அவலாஞ்சி எனப்படும் பனிப்புயல் எங்களை மிரட்டியது, துரத்தியது. நாங்கள் சற்றும் சளைக்காமல்  மிகுந்த சிரமத்துக்கு இடையே படப்பிடிப்பை முடித்தோம் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்து உள்ளன. 

படப்பிடிப்பின்போது, சிபிராஜ் சாரும் நிகிலாவும் மிகுந்த ஒத்துழைப்பு தந்தார்கள். சண்டை பயிற்சி இயக்குனர் திலீப் சுப்புராயன் சாரும், அவருடைய குழுவினரும் அந்தப் பனி பிரதேசத்தையே தங்கள் சண்டை காட்சி அமைப்புகளால் தீப்பிழம்பாக ஆக்கிவிட்டார்கள்!. படப்பிடிப்பு முடிந்து சென்னை வந்து விட்டோம், இங்கு அடிக்கும் வெயில் மிக கொடுமையாக இருக்கிறது" என்றார். ரிஸ்க் எடுத்தால் மட்டுமே எதிலும் வெல்லமுடியும் என்பதை ரங்கா படக்குழுவும் நிருபித்துள்ளது என்றால் மிகையில்லை!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles