ரெஜினா புகழ்பாடும் உதயநிதி!

Wednesday, May 3, 2017

தமிழ் சினிமாவில் கலகலப்பான கதைகளுக்கும் தலைப்புகளுக்கும் சொந்தக்காரர் இயக்குநர் எழில். 'துள்ளாத மனமும் துள்ளும்', 'மனம் கொத்தி பறவை', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' என அவருடைய படங்களின் தலைப்புகளே நம்மை வசீகரிக்கும். அந்தவரிசையில் அவருடைய இயக்கத்தில் வெளியாக உள்ள படம் 'சரவணன் இருக்க பயமேன்'.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும் கலந்துகொண்டு, சிறப்பித்தனர்.

இவ்விழாவில் இயக்குநர் எழில் பேசும்போது, "இசையமைப்பாளர் இமான் ஒரு உணவுப் பிரியர். பாடல் கம்போஸிங்குக்கு முன்பு அவருக்கு பிரியாணி ரெடி பண்ணிருவேன். இமானும், பாடலாசிரியர் யுகபாரதியும் சேர்ந்துட்டாலே தன்னால சூப்பர் ஹிட் பாடல்கள் வந்து விடும். நம் முன்னோடி இயக்குனர்கள் எல்லோரும் மிகவும் திறமையானவர்கள், புத்திசாலிகள், அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது ஒரு சிறப்பான அனுபவம். இப்போது இருப்பவர்கள் சினிமா வரலாற்றை, நம் மூத்த இயக்குநர்களை பற்றி தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கிறார்கள். அது தவறு, அவர்கள் மாற வேண்டும்." என்றார். அவரைத் தொடர்ந்து, படத்தின் நாயகன் உதயநிதி பேசும்போது, 

"சிருஷ்டி என்ன சொன்னாலும் நம்புவார், கொச்சினை தாண்டி ஒரு கடற்கரையில் ஷூட்டிங் நடந்தபோது சிருஷ்டிக்கு கேரவன் கூட இல்லை. ஆனாலும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். "எம்புட்டு இருக்குது ஆசை" பாட்டை பத்தி எல்லோரும் பேசுனாங்க. அந்த பாட்டு அவ்ளோ பெரிய அளவு பேசப்படறதுக்கு முக்கிய காரணம் ரெஜினா தான். நான் மூன்றாவதாக ஒப்பந்தமான படம் தான் 'சரவணன் இருக்க பயமேன்'. 

ஆனால், 'இப்படை வெல்லும்', 'பொதுவான எம் மனசு தங்கம்' ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தப் படம் வெளியாகிறது. அது தான் எழில் சாரின் வேகம். படம் பார்த்துட்டு நல்லா இருந்தா உடனே விமர்சனம் எழுதுங்க, இல்லைனா மூணு நாள் கழிச்சு எழுதுங்க!" என்றார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles