சி.வி.குமார் தயாரிப்பில் சுதந்திரமாக படம் இயக்கலாம்! இயக்குநர் ரோகின் வெங்கடேசன்

Wednesday, March 15, 2017

"லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும்போது என்னுடைய சீனியர் லியோ ஜான்பால். அப்போதிருந்தே அவருடன் நல்ல பழக்கம் உண்டு. என்னுடைய முதல் புராஜெக்ட்டை எடிட் பண்ணியதும் அவர்தான். என் கதையையும், முதலில் அவரிடம் தான் டிஸ்கஸ் பண்ணினேன். கதை விவாதத்திலும் அவர் பங்கெடுத்தார்.

சரியான நேரம் பார்த்து சி.வி.குமார் சார்கிட்ட அறிமுகம் செய்து வைத்தார். அப்படித்தான் 'அதே கண்கள்' படம் உருவாச்சு. இப்போ உங்க முன்னாடி இயக்குநரா நிற்கிறதுக்கு லியோதான் காரணம். தாங்கஸ் நண்பா..!" என்று ஓபனிங்கிலேயே பின்னுகிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேசன். தமிழ் சினிமாவுக்கு லேட்டஸ்டாக வந்திருக்கும் புது வரவு!

 

முதல் படத்தை த்ரில்லராக அமைத்துக்கொண்டது ஏன்?

" 'அதே கண்கள்' படத்தின் கதையை எழுதும்போது, முதலில் காதல் கதையாகத்தான் இருந்தது. கண் தெரியாத ஒருத்தனுக்கு பார்வை கிடைத்து, அவன் காதலியை தேடிப்போனால் என்னவாகும்? என்கிற லைனை வைத்துக்கொண்டுதான் திரைக்கதையை எழுதினேன். அப்படி எழுதும்போது, படத்தில் வரக்கூடிய வில்லி பாத்திரம் உருவாக்கினேன். அதன்பின், அது த்ரில்லராக மாறிவிட்டது. பொதுவாக இந்த மாதிரியான ஜார்னரில் உருவாக்கும்போது கதை வேகமாக நகரும். 

அதேபோல, இன்று யூடியுபில் ஒரு நிமிட வீடியோவை பார்ப்பதற்கே ரசிகர்களுக்குப் பொறுமையில்லை. அதனால் நிறைய யோசிக்க வேண்டியிருக்கிறது. எனவேதான் த்ரில்லரை தேர்ந்தெடுத்தேன்!"

 

பிரபலமான இயக்குநர் ஒருவரின் படப்பெயரை, நீங்கள் மீண்டும் தேர்ந்தெடுத்தது ஏன்?

"இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தற்காக, தயாரிப்பாளருக்குதான் நன்றி சொல்லணும். படத்தின் ஷுட்டிங் முடிந்த பிறகும் கூட, தலைப்பை வைக்கவேயில்லை. இதனால் சி.வி.குமார் சாரிடம் திட்டு கூட வாங்கினேன். இயக்குநர் திருலோகசந்தர் இயக்கிய படத்தினுடைய டைட்டில் சரியான தேர்வாக இருந்தது. அந்தக் காலத்திலேயே 'அதே கண்கள்' படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருந்தாங்க. படமும் வெற்றி பெற்றது. அதே தலைப்பை மீண்டும் வைத்ததில் எங்க எல்லோருக்குமே சந்தோஷம். இந்த டைட்டிலுக்கு நேர்மையாக இருக்கணும்னு நினைச்சேன். அதேபோல கதையும் சரியா அமைஞ்சிடுச்சு!"

 

கண் தெரியாத பாத்திரத்தில் கலையரசன் எப்படி பொருந்தினார்?

"படத்தை சி.வி.குமார் சார்தான் தயாரிக்கிறார்னு முடிவானதும், அவர்தான் கலையரசன்கிட்ட போய் கதை சொல்லச் சொன்னார். நான் சொன்ன கதையை உள்வாங்கிக்கிட்ட கலையரசன், "நான் நடிக்கிறேன்"னுட்டார். எல்லா ஹீரோவும் இப்படி ஓகே சொல்லுவாங்களான்னு தெரியாது. ஏன்னா, 'அதே கண்கள்' ஹீரோவாக்கான கதை மட்டும் இல்லை. எல்லா பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படம். அதை கலையரசனும் ஏத்துக்கிட்டு, சிறப்பா நடித்துக் கொடுத்தார். தொடர்ந்து ஒரே தயாரிப்பு நிறுவனத்துல நடிக்கிறதுல அவருக்கு இருந்த ஈடுபாடும், படம் சிறப்பாக வெளிவரக் காரணமாக இருந்தது!"

 

பின்னணி இசையில் ஜிப்ரான் மிரட்டியிருந்தாரே?

"சி.வி.குமார் சார் இயக்கும் 'மாயவன்' படத்துக்கு ஜிப்ரான் தான் இசையமைச்சிருக்கிறார். அதனால, இந்தப் படத்துக்கும் அவரே மியூசிக் பண்ணினா நல்லாயிருக்கும்னு நினைத்தேன். முதலில் மறுத்த சி.வி. குமார் சார், பிறகு "அவருகிட்ட கதை சொல்லு. பிடிச்சிருந்தா அவரே இசையமைக்கட்டும்"னு பச்சைக்கொடி காட்டினார். அப்படியாக அமைந்த வாய்ப்புதான். படத்தின் கதை ஜிப்ரான் சாருக்கு ரொம்ப பிடித்திருந்ததால், பின்னணி இசையில் மிரட்டிட்டாருன்னு நினைக்கிறேன்!"

 

ஷிவ்தாவின் பாத்திரம் ஸ்பெஷலாக தெரிந்ததே?

"ஷிவ்தாவோட பாத்திரம் தான் மொத்தக் கதையையும் தாங்கி பிடிச்சது. அதனால, அது ஸ்பெஷலா தெரிஞ்சதுன்னு நினைக்கிறேன். அது மட்டுமில்லாமல், தன்னுடைய பாத்திரத்தை முழுமையாக உள்வாங்கிட்டு, நான் எதிர்பார்த்த அளவுக்கு நிறைவாகவே நடிச்சாங்க. அந்தவகையில் சந்தோஷம்!"

 

சி.வி.குமார் தயாரிப்பில் படம் இயக்கிய அனுபவம் எப்படி?

"வாய்ப்புகளைக் கண்டிப்பாக மதிக்கணும். அந்த வாய்ப்பை தந்த சி.வி.குமார் சாருக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டிருக்கிறேன். இவ்வளவு குறுகிய காலத்துல, இத்தனை இயக்குநர்களை தமிழ் சினிமாவுக்கு வேறு எந்த புரொடக்‌ஷன் ஹவுஸாவது காட்டியிருக்குமான்னு தெரியலை. 

இயக்குநர்கள் என்ன மாதிரியான கதையை தனக்குள்ளே வச்சிருக்காங்களோ, அதை சிதைக்காம அப்படியே ஸ்கீரின்ல சொல்ற சுதந்திரத்தை சி.வி.குமார் சார் தர்றார். அதேபோல, கதைக்கேற்ற பட்ஜெட்டிலும் கவனமாக இருக்கிறார். நீங்க சொல்ல நினைக்கிற கதையை, எந்த காம்பரமைஸும் இல்லாம அவருடைய கம்பெனியில் படமாக்க முடியும்!"

நேர்மையாகவும் நிதானமாகவும் பேசுகிறார் ரோகின் வெங்கடேசன். நீண்ட பயணத்தைத் தொடங்கிய மகிழ்ச்சி, அவரது பேச்சில் நிறைந்திருக்கிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles