'பேமலி ரிலேஷன்ஷிப்'பில் சூர்யா தான் ரோல்மாடல்! இயக்குநர் பிரம்மா 

Wednesday, March 15, 2017

"என் குடும்பத்தில் யாருக்கும் சினிமா பின்னணி இருந்ததில்லை. நாங்க எல்லோரும் நாடகம் போட்டுக்கிட்டு இருந்தோம். எனக்கும் என்னுடைய தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பனுக்கும் எந்தவொரு திரைப்பின்புலமும் கிடையாது. ஆனால், சினிமாவுக்கான சூழலை உருவாக்கிக்கிட்டு 'குற்றம் கடிதல்' படத்தை தயாரிச்சாரு. பல திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பி வைச்சோம். தேசிய விருதும் வாங்கிச்சு. தமிழ் சினிமாவில் உள்ள திரைக்கலைஞர்கள் பலரும் படத்தை பாராட்டிப் பேசினாங்க.

இன்று வரை கூட, அந்தப் படத்தை பற்றிய விமர்சனங்களும் அலைபேசி அழைப்புகளும் வந்துகிட்டே இருக்கு. 'மகளிர் மட்டும்' படத்தையும் பெற்றுத் தந்திருக்கு!" - ஷார்ப்பாக பேசுகிறார் இயக்குனர் பிரம்மா. தமிழ் சினிமாவின் நம்பிக்கை முகங்களில் ஒருவர். மகளிர் தினத்தையொட்டி அவரிடம் பேசினோம்!

 

படத்தின் தலைப்பே, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறதே?

"என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவத்தை ஒட்டிய கதைதான் 'மகளிர் மட்டும்'. அதை திரைக்கதையாக எழுத நினைத்தபோது, ஒரு வொர்க்கிங் டைட்டில் தேவைப்பட்டுச்சு. அதற்காக வைத்துதான் அந்தப் பெயர். ஏன்னா, கதை அப்படிப்பட்டது. எல்லோருக்கிட்டேயும் சொல்லும்போது 'மகளிர் மட்டும்'னே சொன்னோம். மக்களுக்கு பரிட்சயமான பெயராக இருக்கணும்னு நினைச்சோம். அதேபோல, கமல் சாரிடம் முறைப்படி அனுமதியும் வாங்கித் தந்தாரு சூர்யா சார். பிறகு, அந்த தலைப்பை மாற்றுவதற்கான சாத்தியங்கள் எங்களுக்கு ஏற்படலை!"

 

'மகளிர் மட்டும்' முழுக்க நட்சத்திரப் பட்டாளமாக இருக்கிறதே?

"நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி யாரை எல்லாம் பார்த்து வியந்தேனோ, அவங்க எல்லாரும் இந்தப் படத்தில் இருக்காங்க. அது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு. அவங்க மேல இருந்த பிரமிப்பு இன்னும் அதிகமாகியிருக்கு. படத்தில் ஜோதிகா, பானுப்பிரியா, சரண்யா பொன்வண்ணன், லிவிங்ஸ்டன், நாசர், பாவல் நவகீதன், அம்புலி கோகுல்நாத் உள்ளிட்ட நிறைய பேர் நடிச்சிருக்காங்க. 

பானுப்பிரியா மேடத்துக்கு, 'மகளிர் மட்டும்' 151வது படம். இந்தப் படத்தில் நடிக்கும்போதுதான், அது அவங்களுக்குத் தெரியும். தான் எத்தனை படங்களில் நடிக்கிறோம் என்கிற நினைப்பு கூட இல்லாமல் தொடர்ந்து நடிச்சிக்கிட்டு இருக்காங்க. ஷுட்டிங் ஸ்பாட்டில் சின்ன சின்ன விஷயங்களையும் கூட கேட்டு, தெரிஞ்சிப்பாங்க! அதேபோல ஊர்வசி மேடத்தை, ஒரு 'பார்ன் ஆக்டர்' ன்னு சொல்லலாம். எல்லா காட்சிகளிலும் சிறப்பாக நடிச்சிருக்காங்க. சக நண்பனுடன் பழகுவது போல பழகுவாங்க. சரண்யா பொன்வண்ணன் மேடம், தன்னுடைய பாத்திரத்தை எந்தளவுக்கு மேன்மைப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அதை மெருகூட்டியிருக்காங்க. இவங்க எல்லாருமே கிடைச்சது, இந்தப் படத்துக்கு பெரிய வெற்றியைக் கொண்டுவரும்னு எதிர்பார்க்கிறேன்!"

 

இந்தப் படத்துக்காக ஜோதிகா புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டது வைரலானதே?

"இந்தப் படத்துல ஜோதிகா மேடம் புல்லட் ஓட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதைப்பற்றி சொன்னவுடனே, அவங்க ஏத்துக்கிட்டாங்க. கொஞ்ச நாள், அவங்களோட தோழிதான் புல்லட் ஓட்ட சொல்லிக் கொடுத்தாங்க. அதன்பிறகு, இரண்டு வாரத்துக்கு சூர்யா சார்தான் ஜோதிகா மேடத்துக்கு பயிற்சி அளித்தார். பல இடங்களில், சூர்யா சார் பேசுகிற பத்து வார்த்தையில் இரண்டு வார்த்தை, "ஜோ..."வாகத்தான் இருக்கும். அதேமாதிரி ஜோ பேசும்போதும் சூர்யா சாரை மென்ஷன் பண்ணுவாங்க! அவங்க இரண்டு பேரின் காதலின் அடையாளமாகத்தான் எல்லாப் படங்களுமே உருவாகிட்டிருக்கு. காதல் என்பது ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளும் மரியாதை தான். என்னைப் பொறுத்தவரை, பேமிலி ரிலேஷன்ஷிப்பை மெயின்டெயின் பண்றதுல சூர்யா சார் தான் ரோல்மாடல்!"

 

"அடி வாடி திமிரா" பாடல் ஹிட்டடித்திருக்கிறதே?

"மகளிர் தினத்தையொட்டி 'அடி வாடி திமிரா...' என்கிற டைட்டில் பாடலை, பாடலாசிரியர் உமாதேவி எழுதியிருக்காங்க. இன்றைக்கு இருக்கிற இளைஞர்களுக்கு ஏற்றமாதிரியான இசையைத் தருவதில் ஜிப்ரான் வல்லவர். அவருடைய இசையில் பாடல் சிறப்பாக வந்திருக்கு. அது மட்டுமில்லாமல், தன்னோட இசை ரசிகர்களின் மனங்களுக்குள் ஆழமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைச்சிருக்கார். நிச்சயம் இந்தப் படத்தோட பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை ஆட்டுவிக்கும்!" - சந்தோஷமாக விடை கொடுத்தார் பிரம்மா!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles