அடிப்படையிலேயே பெண் வீரமானவள் தான்! பாடலாசிரியர் உமாதேவி 

Wednesday, March 15, 2017

தமிழ் சினிமாவில் பெண் பாடலாசிரியர்கள் கோலோச்சுவது என்பது இருபத்தியோராம் நூற்றாண்டில் சாத்தியமாகியிருக்கிறது என்பதை வரவேற்கத்தான் வேண்டும். குறிப்பாக, மளமளவென பாடல்களை எழுதிக் குவிக்கிறார் பாடலாசிரியர் உமாதேவி. தற்போதைய நிலவரப்படி அதிகமான ஹிட் பாடல்களுக்கு சொந்தக்காரர் இவர்தான். அதற்கு சமீபத்திய உதாரணம் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற "மாயநதி..." பாடலுக்கு அவருக்குக் கிடைத்திருக்கும் சர்வதேச அங்கீகாரம். மகளிர் தினத்தையொட்டி அவரைச் சந்தித்தோம்!

சிறந்த பாடலாசிரியராக நார்வே உலகத் திரைப்பட விழாவில் தேர்வாகியிருக்கிறீர்களே?

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு (சொல்லிவிட்டு சிரிக்கிறார்). இது எதிர்பார்த்ததுதான். இசை ரசிகர்களும் தமிழ் நெஞ்சங்களும் கொண்டாடிய பாடல் அது. அதற்கான ஒரு வரவேற்பாக, இந்த விருதைக் கருதுகிறேன். "மாயநதி..." க்கான பாடலின் டியூனே ஒரு மெஸ்மெரிசத்தை நமக்குள் கொண்டுவருவதுதான். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் எழுத வேண்டும் என இயக்குநர் பா.ரஞ்சித்தின் தீர்மானம் தான் இதற்குக் காரணம். இவை எல்லாவற்றுக்குமான அங்கீகாரம் தான் நார்வே திரைப்பட விருது!"

 

உங்களுடைய பாடல்களில் இலக்கிய வார்த்தைகள் வருகிறதே. அதற்குக் காரணம், நீங்கள் ஒரு பேராசிரியை ஆக இருப்பதுதானா?

"ஒரு பாடலுக்குள்ளே இலக்கிய வரிகள் வருவதற்கு தமிழராக இருந்தாலே போதுமானது. தமிழ் இலக்கியங்களைப் படித்திருந்தாலே போதும் என நினைக்கிறேன்!"

 

'மகளிர் மட்டும்' படத்தின் "அடி வாடி திமிரா..." பாடல் வைரலாகியிருக்கிறதே?

"ஏற்கனவே 'குற்றம் கடிதல்' படம் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் இயக்குநர் பிரம்மா. 'மகளிர் மட்டும்' படத்தில் வரக்கூடிய "அடி வாடி திமிரா..." எனும் டைட்டில் பாடலை, நான்தான் எழுதணும்னு கேட்டுக்கிட்டாங்க. அந்தப் பாடல், மகளிர் தினத்தையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. சுதந்திரத்தை அனுபவிக்கக்கூடிய எல்லா பெண்களுக்கும் அந்தப் பாடலை சமர்ப்பணமாக்கி இருந்தாங்க. பெண்ணுடைய வீரம், தீரம், வலிமை என்று சொல்லக்கூடியதை எல்லாம் நாம் பெண் விடுதலையாகப் பார்க்கிறோம். ஆனால், அது அப்படியானதல்ல; அடிப்படையிலேயே பெண் வீரமானவள் தான்! முறத்தால் புலியை விரட்டியவள் தான். அது இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கு. அந்த ஆதி வீரத்தை இப்போது மீட்டெடுத்திருக்கிறோம். அதை, இந்தப் பாடலின் இரண்டாவது வரியிலேயே "புலி ஓட்டும் முறமா..." என்று சொல்லியிருக்கிறேன். ஜிப்ரான் இசையில் பாடல் நல்லா வந்திருக்கிறது."

 

பெண்கள் மீதான தாக்குதல்கள் சமீபகாலங்களில் அதிகரித்திருக்கிறதே?

"பெண்கள் மீதான வன்முறை என்பது புதிதல்ல; மீடியாக்கள் அதிகமாகிவிட்டதால் அதுகுறித்து அதிகமாக பேசுகிறோம். அது காலங்காலமாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கு. ஆனால், பெண்களுக்கான வெளி என்பது இப்போது சுருங்கியிருக்கு. அதற்கு குடும்பம் ஒரு காரணமாக இருக்கு. அதேபோல, பெண்களுக்கு அதிகமான சுதந்திரம் என்பது இப்போ கிடைச்சிருக்கு! அவர்கள் மீதான வன்முறையைத்தான் அதிகமாக மீடியாக்கள் வெளிக்காட்டுகின்றன. பெண்களின் சாதனைகள் குறைவாகவே காட்டப்படுகின்றன என்றுதான் சொல்வேன். தொடர்ந்து நல்ல விஷயங்களைக் காட்டும்போது வீட்டிலிருந்து பெண்கள் வெளியே வருவார்கள், சாதிப்பார்கள். தொடர்ந்து தொலைக்காட்சிகளில் 'நந்தினி' விவகாரத்தையே காட்டினால், அவர்களால் எப்படி வெளியே வர முடியும்?. எனவே மீடியாக்கள் மகளிர் சாதனைகளையும் அதிகமாகக் காட்ட வேண்டும்!"

 

தற்போது பாடல் எழுதி வரும் படங்கள் குறித்து?

" 'தப்பு தண்டா', 'நாகேஷ் திரையரங்கம்',  'அடங்காதே', இயக்குநர் ந.கோபியின் 'அறம்', 'மகளிர் மட்டும்', த்ரிஷா நடிக்கும் '96' மற்றும் பெயரிப்படாத படங்கள் பலவற்றுக்கு பாடல் எழுதிக்கிட்டிருக்கேன்!" அடிப்படையில் பெண்கள் நன்னம்பிக்கை அதிகம் உடையவர்கள் என்பதும், உமாதேவியில் பேச்சிலிருந்து நமக்குப் பிடிபடுகிறது.

-  கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles