வித்தியாச வில்லன் அனுராக் காஷ்யப்! 

Thursday, March 2, 2017

இந்தியாவில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அத்தகைய படங்களில் அதிக எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாவது பாலிவுட் திரைப்படங்களே. குறிப்பாக, இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியாகும் படங்களுக்கு, இந்தியாவைத் தாண்டியும் ரசிகர்கள் அதிகம்.

அத்தகைய இயக்குநர் அதிகமாக விரும்பிப் பார்ப்பது தமிழ் சினிமாவில் உருவாகும் தரமான படங்களைத் தான் என்றால் நம்ப முடிகிறதா!? ஆனால் அதுதான் உண்மை. தமிழ் சினிமாவின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ரசிக்கும் ஒரு பாலிவுட் இயக்குனர், தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் சும்மா இருப்பாரா?

தமிழில் முதன்முதலாக 'இமைக்கா நொடிகள்' படத்தின் மூலம் வில்லன் பாத்திரத்தில் களமிறங்குகிறார் அனுராக் காஷ்யப். அதர்வா, நயன்தாரா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கும் இந்தப் படத்தை 'கேமியோ பிலிம்ஸ்' சார்பில் சிஜே ஜெயக்குமார் தயாரிக்கிறார். இப்படத்தை 'அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். பேய்ப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களையே நடுங்க வைத்த 'டிமான்டி காலனி' படத்தின் இயக்குனர் இவர் தான். 

தமிழில் நடிப்பது குறித்து அனுராக் காஷ்யப் பேசும்போது,
"இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு முக்கியக் காரணம், என்னுடைய ருத்ரா கதாபாத்திரம் தான். குடி, சிகரெட், அடியாட்களை ஏவிவிடுவது என்று வழக்கமாக இருக்கும் வில்லன்கள் போல் இல்லாமல், புத்திசாலித்தனமாகவும் தந்திரமாகவும் செயல்படக்கூடிய ஒரு மிரட்டலான வில்லன் தான் இந்த ருத்ரா. மும்பையில் என்னுடைய பிற வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், இந்த ருத்ரா பாத்திரம் என்னை 'இமைக்கா நொடிகள்' படத்திற்குள் அழைத்து வந்துவிட்டது. இந்தப் படத்தை பார்க்கவரும் ரசிகர்களிடம் சிறிய அளவு பயத்தை என்னுடைய கதாபாத்திரம் வெளிக்கொண்டு வந்துவிட்டால், நான் செய்த பணி முழுமை பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வேன். 

இத்தகைய வலுவான கதையம்சம் கொண்ட படத்தை இயக்குவதற்கு, நிச்சயமாக அதிக அனுபவம் தேவை. அஜய் ஞானமுத்து அந்தப் பணியை கனகச்சிதமாகச் செய்து வருவதைப் பார்க்கும்பொழுது எனக்கு வியப்பாக இருக்கின்றது. ஒளிப்பதிவாளர் ஆர்டி ராஜசேகர் என்னுடைய நண்பர். ஏஆர் முருகதாஸின் 'அகிரா' படத்தில், ஏற்கனவே அவருடன் பணியாற்றி இருக்கின்றேன். என்னை நானே திரையில் பார்க்க மிகவும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றேன்" என்றார்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles