பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்! - போரினால் நாசமாவது பெண்கள் தான்..!

Wednesday, March 1, 2017

போரினால் ஏற்படும் விளைவுகள் மனித குலம் தாங்கவொன்னா துயரம் கொண்டவை. நாடுகள் மட்டுமல்ல; குடும்பங்களும் கூட சிதைந்து, நாலா திசைகளிலும் பிய்த்து எறியப்பட்டுவிடும். கூடு கலைந்த பறவைகள் திசை மாறி பறந்து, ஏதோ ஓரிடம் தங்கி, பின் தனக்கான வாழ்வாதாரத்தைத் தேடி, அதைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடும் வாழ்க்கை சபிக்கப்பட்டதே!

இரண்டு உலகப் போர்களை மட்டுமல்ல; இன்னும் பல போர்களை எதிர்நோக்கியே சுழன்றுகொண்டிருக்கிறது பூமி. எங்கோ ஒரு தேசத்தில், போருக்கான ஒத்திகைகள் இந்த நிமிடத்தில் நடந்துகொண்டிருக்கக்கூடும். ஏதோ ஒரு நாட்டில் துப்பாக்கிக் குண்டுகள் முழங்கிக்கொண்டிருக்கும். தோட்டாக்களின் சீறலுக்குப் பயந்து பறவைகள் காட்டைவிட்டு பறந்து கொண்டிருக்கலாம். இந்தப் பூமியில் நிம்மதியான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட முடியும் என்பது எளிய, வறிய, விளிம்பு நிலை மனிதர்களுக்கு எப்போதும் முடிந்ததில்லை. அதிலும், கைவிடப்பட்ட பெண்களின் நிலை கண்ணீர் காவியமே!

அந்த வகையில் போரினால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, கிராமத்தை விட்டு வெளியேறி, நகரத்தின் கோரப் பிடியில் சிக்கி, பாலியல் தொழிலாளியாக மாறி, இயல்பான ஒரு வாழ்க்கைக்கு ஆசைப்படும் பெண்ணின் வலியைப் பேசுகிறது 'ப்ளிஸ்' (தமிழில் பேரின்பம் என்று பொருள்) திரைப்படம். அதனாலேயே, இந்தப் படம் உலகம் முழுவதுமுள்ள திரை ரசிகர்களின் விமர்சனப் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்துள்ளது!

ஜெர்மனியின் அழகான மலைக்கிராமம் ஒன்றில் செம்மறி ஆடுகளுடன் வசிக்கிறது ஐரினாவின் குடும்பம். கம்பளி உற்பத்தி செய்வது அவர்களது தொழில். விருந்தும், கொண்டாட்டமுமாகக் கழிகிறது வாழ்க்கை. ஆனால், அந்தக் கிராமத்திற்குள் ராணுவம் நுழையும் கணத்தில் எல்லாமே திசைமாறிவிடுகிறது. ஐரினாவின் பெற்றோர் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரையாகிறார்கள். ராணுவ வீரர்களால் ஐரினா பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகிறாள். அனாதையாக்கப்பட்ட அவள், அங்கிருந்து தப்பி, பெர்லினுக்கு ஓடுகிறாள். தையல்தொழில் மட்டுமே தெரிந்த ஐரினாவினால், அந்த நகரத்தில் வாழ்வது சிரமமானதாகிறது. போரில் அவள் எதை இழந்தாலோ, அதையோ மூலதனமாக்கி, தனக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறாள்!

இரவுகளில் மட்டுமே அவளது வாழ்க்கை நகர்கிறது. பகல் முழுவதும் நட்சத்திர விடுதிகளில் தூங்கி வழிகிறாள் ஜரினா. அறையில் உள்ள தொலைக்காட்சியில் போர்க்காட்சிகள் வரும்போதெல்லாம், அதை அணைத்துவிட்டு, கழிவறையில் உட்கார்ந்துகொண்டு, தன்னைத்தானே குண்டூசிகளால் துன்புறுத்திக் கொள்கிறாள். கடந்த காலத்தின் வலியை, அதைவிடவும் அதிகமான வலிகொண்டு மட்டுமே அவளால் கடக்கமுடியும். இப்படியான அவளது தினசரி வாழ்வுக்குள், அந்த நகரத்தில் கைவிடப்பட்ட இளைஞன் (கேல்) ஒருவன் நுழைகிறான்.

நாய் ஒன்றுடன் பிளாட்பாரங்களில் ஒதுங்கி, எஞ்சியதைத் தின்று வாழ்ந்து வருகிறான் கேல். குளிருக்குப் போர்த்திக்கொள்ள, அவனிடம் பிய்ந்துபோன போர்வை கூட இல்லை. ஒருநாள் அவ்வழியே செல்லும் ஐரினா, அவனிடம் ஒரு பார்சலை தூக்கிப்போட்டுவிட்டு போகிறாள். அதைத் திறந்து பார்க்கும் கேல், உள்ளே ஒரு சிவப்பு நிற போர்வை இருப்பதைக் கண்டுகொள்கிறான். இப்படியாக, இருவருக்கும் இடையேயான நட்பு பூக்கிறது!

சில இரவுகளில், நட்சத்திர விடுதி காப்பாளருக்குத் தெரியாமல், தன்னுடைய அறையிலேயே கேலையும் அவனுடைய செல்ல நாயையும் தங்க வைக்கிறாள். அவனுடைய அருகாமை ஐரினாவிற்கு சின்ன ஆறுதலைத் தருகிறது. இந்தச் சூழலில், எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி கேலின் செல்ல நாய் இறந்துபோகிறது. இருவரும் சேர்ந்து, அதன் சடலத்தை நகரத்துக்கு வெளியே உள்ள காடு ஒன்றில் புதைக்கிறார்கள். தனக்குத் துணையாக இருந்த ஒரே ஜீவனும் மரித்துப்போனதை எண்ணி, கதறி அழுகிறான் கேல். ஆறுதல் சொல்ல முடியாமல், அவனை அணைத்துக்கொண்டு தானும் அழுகிறாள் ஐரினா. கைவிடப்பட்ட மனிதர்களின் துயரங்களும் வலிகளும் சொல்லில் அடங்காதவை. 

பாலியல் தொழிலில் இருந்து கிடைக்கும் வருவாய் முழுக்க ஓட்டல் வாடகைக்கும், உணவிற்கும் செலவாகிறது. இதனால், வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து தங்குகிறாள் ஐரினா. அங்கே தன்னுடைய விருப்பப்படி சில மாறுதல்களைச் செய்து, அப்படியே ஓட்டல் அறை போலவே மாற்றிவிடுகிறாள். அங்கே தனது வாடிக்கையாளர்களை வரவழைத்து, தனது பாலியல் தொழிலை நடத்துகிறாள். அவளது கைகளில் பணம் புழங்க ஆரம்பிக்கிறது. தான் விருப்பப்பட்ட வாழ்க்கைக்காகத் திட்டமிடுகிறாள்.

அழுக்கு ஆடைகளும், வெட்டாத தலைமுடியும், உதடுகளில் வளையம் சகிதமாக வரும் கேலை மாற்றுகிறாள். அவனது பிறந்தநாளில், கேக் செய்து ஊட்டுகிறாள். இப்படியாக, அவர்களின் வாழ்வுக்குள் மெல்ல சந்தோஷ மின்னல்கள் எட்டிப்பார்க்கின்றன. அப்படியே, கேலுக்கு ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை கிடைக்கிறது. சைக்கிளில் பொருட்களை எடுத்துச்சென்று கொடுக்க வேண்டியது அவனது பணி. வேலை முடிந்து திரும்பியதும், ஐரினாவோடு சேர்ந்து நகரத்தை சுற்றுவது அவனது விருப்பமான வேலை. 

இப்படியாகச் சென்று கொண்டிருக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒருநாள், ஐரினாவின் வாடிக்கையாளர்களில் ஒருவர் படுக்கை அறையில் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துபோகிறார். செய்வதறியாது திகைக்கும் ஐரினா, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அந்த இடைவெளியில் வரும் கேல், வாடிக்கையாளரின் உடலை துண்டாக்கி, தனது சைக்கிளிலேயே எடுத்துச்சென்று, நாயைப் புதைத்த இடத்திலேயே புதைத்து விடுகிறான். வீட்டுக்குள் நுழையும் ஐரினா, உள்ளே உடல் இல்லாமல் இருப்பதை அறிந்து அதிர்ச்சியாகிறாள். அதற்குள் போலீசுக்கு விஷயம் தெரிந்து, அவர்களும் அங்கு வந்துவிடுகின்றனர். திரும்பி வரும் கேல் கைது செய்யப்படுகிறான். ஐரினாவும், அவனுடன் சிறை வைக்கப்படுகிறாள். 

இருவருக்காகவும் வாதாட, கிரிமினல் வக்கீல் ஒருவர் வருகிறார். பல முயற்சிகளுக்குப் பிறகு, ஐரினா விடுவிக்கப்படுகிறாள். அதற்கு முன்னதாகவே, கேல் விடுதலையாகிறான். சிறையில் இருந்து வெளியே வரும் ஐரினாவை கேல் வரவேற்கிறான். நிறைய கனவுகளோடு, இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு பிளாட்பாரத்தில் நடக்கிறார்கள் என்பதோடு படம் நிறைவடைகிறது!

இந்தப் படத்தின் சிறப்பு, நம்மை உலுக்கியெடுக்கும் பின்னணி இசை. படத்தின் துவக்கக் காட்சிகளில், ராணுவ வீரர்களால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு தூக்கி எறியப்படுகிறாள் ஐரினா. செம்மறி ஆடுகள் வரையப்பட்ட வெள்ளைத்துணியைச் சுற்றிக்கொண்டு கிடக்கிறாள். அருகில், ரத்த வெள்ளத்தில் அவளது பெற்றோர் விழுந்து கிடக்கின்றனர். போரின் கொடிய கரங்கள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை விளக்கும் காட்சி அது. 

அதனைத் தொடர்ந்து அருகிலிருந்து ஏரிக்குள் போய் பொத்தென்று விழுகிறாள் ஐரினா. எத்தனை முறை மூழ்கினாலும், நீரினால் கழுவிவிட முடியாத கறை அவளுக்குள் படிந்துவிடுகிறது. ராணுவக் குரங்குகளால் கடித்து குதறப்பட்டு, மிச்சமிருக்கும் அரைகுறை ஆடைகளோடு, தன் நிலையை எண்ணிக் கதறி அழுகிறாள். அவளது அழுகை நமக்குக் கேட்பதில்லை. அந்த இடத்தை இயக்குநர் துயரம் மிகுந்த இசையால் நிரப்பிவிடுகிறார். அவளுடைய ஆன்மாவின் கதறல், நமக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது!

ஜெர்மனியோ, இலங்கையோ எங்கே ராணுவம் புகுந்தாலும், அங்கே நாசமாவது பெண்கள் தான். இதைத்தான் 'ப்ளிஸ்' படம் நம்மிடம் அழுத்தமாகச் சொல்கிறது. சாதாரண வாழ்வு என்பது அசாதாரமானதன்று. அதற்கும் கூட நாம் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும். ஆனால், அன்பும் ப்ரியமுமே இந்த கொடுந்துயர் வாழ்வின் மீது பற்று வைக்கத் தூண்டுகிறது. வேறு வழியே இல்லை, எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழ்வதே வாழ்க்கை. ஐரினாவும் கேலும் நமக்கு சொல்லிச் செல்லும் பாடமும் அதுதான்!

ஜெர்மன் மொழியில் உருவான 'ப்ளிஸ்' திரைப்படத்தை டோரிஸ் ட்யோரி இயக்கியுள்ளார். ஒரு மணி நேரம் ஐம்பத்தி இரண்டு நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம், பெர்லின் உலகத் திரைப்பட விழா உள்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் பெரும் வரவேற்பைப் பெற்றது. போர் குறித்தான படங்களில், தவறி விட்டுவிடக்கூடாத பட்டியலில் எப்போதும் 'ப்ளிஸ்' இடம்பிடித்திருக்கும்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles