இரவுக்கும் மர்மத்துக்கும் தொடர்பு உண்டு! புதுமுக இயக்குனர் மு.மாறன்

Wednesday, March 1, 2017

வெவ்வேறு மனநிலையில் இருக்கும் பலவிதமான மனிதர்களை அதிகம் சந்திப்பது, வேறு எந்தத் தொழிலைக் காட்டிலும் பத்திரிகை தொழிலில் மட்டுமே சாத்தியம். அப்படிப்பட்ட அனுபவமே, அவர்கள் சினிமாத்துறையில் இறங்கி படம் இயக்கும்போது, பாத்திரப் படைப்பை எளிதாகக் கையாள உதவும். அந்த வகையில், புதுமுக இயக்குனர் பட்டியலில் புதிதாகக் காலடி எடுத்து வைத்திருக்கிறார் பத்திரிகையாளரான மு.மாறன் . ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிவரும் அவரைச் சந்தித்தோம். 

பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனரானது எப்படி என்று கேட்டதுமே, பதில் சொல்லத் தொடங்கினார் மாறன். 

“நான் கெமிக்கல் டெக்னாலஜியில டிப்ளமா படிச்சு முடிச்சிருந்தாலும், அது சம்பந்தமான வேலை எதுக்கும் போகலை. என்னோட கால் நேராக எழுத்தாளர் சுபா வீட்டுக்குப் போய் நின்னுச்சு. அங்கேதான் உங்கள் ஜுனியர், உல்லாச ஊஞ்சல்னு இரண்டு பத்திரிக்கை வந்துட்டு இருந்துச்சு. அதுல சுபாவும் பட்டுக்கோட்டை பிரபாகரும் நாவல் எழுதிட்டு இருந்தாங்க. அங்கே ஏதாவது வேலை காலி இருக்கான்னு கேட்டேன். இப்போ ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிட்டாங்க.

அங்கேயிருந்து நேராக ‘சூப்பர் நாவல்’னு ஒரு பத்திரிகை அலுவலகத்துக்குப் போனேன், அதுலயும் சுபா எழுதிட்டு இருந்தாங்க. அங்கே விளம்பரப்பிரிவுல வேலை காலியாக இருந்தது. அதை ஏத்துக்குறீங்களான்னு கேட்டாங்க. ஆனால், எனக்கு சின்ன வயசுல இருந்தே பத்திரிகை மீது தீராக் காதல் இருந்துச்சு. அதனால, என்னால விளம்பரப்பிரிவுல வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள முடியலை. பதினைந்து நாட்கள் கழித்து, சூப்பர் நாவல் அலுவலகத்திலிருந்து உதவி ஆசிரியர் பணிக்கு அழைப்பு வந்தது. அப்போ, அங்கே படுதலம் சுகுமாரன் பொறுப்பாசிரியராக இருந்தாரு. அப்படி அவருகூட ஆரம்பித்ததுதான் இந்த பத்திரிக்கை உலகப்பயணம்.

அதனைத் தொடர்ந்து குமுதம், கல்கியில வேலை பார்த்தேன். கல்கியில உதவி ஆசிரியராக இருந்தபொழுது, அதுல வந்த கிரேசி டைம்ஸ்னு ஒரு பகுதியை நான் தான் பார்த்துட்டு வந்தேன். அப்போ, எனக்கு கிரேசி மோகன் கூட நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைச்சது.

அவருதான் என்னை திரைப்படம் இயக்கச் சொல்லி ஊக்குவிச்சார். அது மட்டுமில்லாம, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட என்னைப் பற்றிச் சொன்னார். அதனால, எனக்கு கே.எஸ்.ரவிக்குமாரோட ‘ஜக்குபாய்’ திரைப்படத்தோட டிஸ்கஷன்ல பணியாற்ற வாய்ப்பு கிடைச்சது. பத்திரிகைதுறையில இருந்ததால, என்னால வேலையை உடனே விட்டுட்டு வர முடியல. அதைப் புரிஞ்சுக்கிட்டு, என்னை மாலை வேளையில் கதை விவாதத்துக்கு வரச் சொல்லுவாரு. ஆனால், அவருகிட்ட நிறைய உதவியாளர்கள் ஏற்கனவே இருந்ததால, அவரால என்னைச் சேர்த்துக்க முடியல. 

மறுபடியும் கிரேஸி மோகன்கிட்ட போய் நின்னேன். அந்த சமயத்துல, அவரோட மேடை நாடகத்துக்கு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா வந்திருந்தார். அப்படித்தான் சுரேஷ் கிருஷ்ணாவோட பணியாற்ற வாய்ப்பு கிடைச்சது. அதன்பிறகு, பத்திரிகை வேலையை ராஜினாமா செஞ்சுட்டு, முழு நேரமும் திரைப்படத்துறையில் பணியாற்றத் தொடங்கினேன். சுரேஷ் கிருஷ்ணாவுடன் ‘இளைஞன்' படத்துல பணியாற்றும்பொழுது சில நெளிவு சுளிவுகளைத் தெரிஞ்சுகிட்டேன். அதனைத் தொடர்ந்து ‘கோ' படத்துல பணியாற்ற வாய்ப்பு கிடைச்சது. 

ஏற்கனவே பத்திரிகையில இருந்து வந்ததால, அந்தப் படத்துல வேலை சுலபமா இருந்துச்சு. டயலாக் சொல்லிக்கொடுக்குறது, ஆர்ட்டிஸ்ட் கூட உரையாடுறதுன்னு வேலைகள் இருந்துச்சு. படப்பிடிப்புக்கு இடையில திரும்பவும் சுரேஷ் கிருஷ்ணா  கூப்பிட்டதால, அவரு கூட வேலை பார்க்கப் போய்ட்டேன். ஆனால், அந்தப் படம் பாதியிலேயே நின்னுடுச்சு. 

இடைப்பட்ட காலத்துல, எனக்கு சினிமாத்துறையில் பலர் பழக்கமானாங்க. அப்படி அறிமுகமான ஒரு புரொடக்‌ஷன் மேனேஜர் மூலமாக, சில தயாரிப்பு நிறுவனங்களோடு தொடர்பு கிடைச்சது. அப்படித்தான், பல பேருக்கு என்னோட ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' கதையைச்  சொன்னேன். நான் இதுவரைக்கும் ஏழு நடிகர்களுக்குக் கதை சொன்னேன்; அவங்க எல்லோருக்கும் அது பிடிச்சது. ஆனால், ஏதோ காரணத்தால படம் எடுக்க முடியாம தடைபட்டுட்டே இருந்துச்சு.

இந்தச் சூழல்ல தான், தயாரிப்பாளர் டில்லி பாபு ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலமாக கதைகள் கேட்கிறதா நண்பர்கள் சொன்னாங்க. அவங்க மொத்தமாக எண்பத்தி ஐந்து கதைகளைக் கேட்டு, அதுல ஐந்து படங்களைத் தேர்ந்தெடுத்தாங்க. அதுல என்னோட ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' படமும் ஒன்று. 

இந்தப் படம் எல்லோருக்கும் பிடித்ததுக்குக் காரணம், திரைக்கதையில் நிறையா ட்விஸ்ட் இருக்கு. இன்னிக்கு ஆடியன்ஸ் எதிர்பார்க்குறதும் அதைத்தானே” என்று தன் நீண்ட திரைப்பயணத்தை விவரித்தார் மாறன். 

அவரிடம், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்று கவித்துவமான தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் கேட்டோம். “அடிப்படையில், இது மர்மம் சம்பந்தப்பட்ட ஒரு கதை. ஏகப்பட்ட தலைப்புக்கள் யோசிச்சோம். அப்பொழுதுதான், அந்தப் பாடல் காதில் விழுந்தது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்...’ என்ற வரி என்னை ரொம்பவுமே ஈர்த்தது. இரவுக்கும் மர்மத்துக்கும் ஏதோ தொடர்பு இருக்குற மாதிரியே இருந்துச்சு. அதனால, இதுதான் சரியா இருக்கும்னு முடிவு செஞ்சோம். 

ஒரு முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னன்னா, தமிழில் இருக்கக்கூடிய துப்பறியும் நாவல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையே இப்படத்தில் உபயோகித்திருக்கிறோம். உதாரணத்துக்கு சுஜாதாவின் கணேஷ் - வசந்த், பட்டுக்கோட்டை பிரபாகர் கதைகளில் வரும் சுசீலா என்ற கதாநாயகியின் பெயர் தான் இந்தத் திரைப்படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.”என்றார். அவர் இயக்கிவரும் படம் பற்றி, மேலும் சில கேள்விகளைத் தொடுத்தோம். 

 

நடிகர் அருள்நிதி தவிர, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் நடிக்கப்போகும் மற்ற கலைஞர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டீர்களா?

“கிட்டத்தட்ட முடியப்போகுது! மக்களுக்குத் தெரிந்த முகங்களைத்தான், தேர்வு செய்யப்போறோம். இன்னும் ஓரிரு நாட்களில் கதாநாயகியையும் தேர்ந்தெடுத்து விடுவோம்.”

 

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ மக்களுக்கு என்ன சொல்லப்போகுது?

“யாரையுமே எளிதாக நம்பிடாதீங்க. நல்லவங்களா இருக்குறவங்களுக்குக் கெட்ட சகவாசம் கிடைச்சதும், அவங்களும் கெட்டவங்களா மாற வாய்ப்பு நிறையா இருக்கு. இதுதான் இந்தத் திரைப்படத்தோட முக்கியமான கருத்து.”

 

தற்கால தமிழ் சினிமாவின் சூழல் எப்படியிருக்கிறது?

“பணத்தட்டுப்பாட்டுக்கு அப்புறம், தமிழ் சினிமாவின் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு. நிறைய நல்ல கதைகள் இருந்தாலும், யாரும் படம் தயாரிக்க வர்றதில்லை. டில்லிபாபு மாதிரி, கதையை நாயகனாக நம்பி படம் எடுக்க வரணும்.”

 

தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில உங்கள் மனம் கவர்ந்த இயக்குனர் ? ஏன் ?

“இயக்குனர் மகேந்திரன், வெற்றி மாறன், மிஷ்கின். இந்திய அளவில விஷால்  பரத்வாஜ் எனக்கு ரொம்பப் பிடிக்கும். மிஷ்கின் படங்களை எடுத்துகிட்டீங்கன்னா; அது தனித்துவமா இருக்கும். இது மிஷ்கின் படம்னு எளிதாக சொல்லிடலாம். அதேமாதிரி, எந்தக் காலத்துல அவங்க படத்தைப் பார்த்தாலும், அது அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றதாகவே இருக்கும்; புதுசாகவே இருக்கும். உதிரிப்பூக்கள் படத்தோட கிளைமேக்ஸ் மாதிரி வேறு ஒரு கிளைமேக்ஸை நாம பார்க்கமுடியாது.”

 

‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றி.. ?!

“முக்கால்வாசி முடிஞ்சுடுச்சு; இன்னும் கொஞ்சம் போயிட்டு இருக்கு. ‘டிமான்டி காலனி’, ‘ஆறாது சினம்' போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்தான் இந்தப் படத்துக்கு கமிட் ஆகியிருக்காரு. உறுமீன் படத்துல பணியாற்றிய சான் லோகேஷ் தான் இந்தப் படத்துக்கு எடிட்டிங்” என்று தன்னுடைய சக கலைஞர்கள் பற்றிச் சிலாகித்துப் பேசினார் புதுமுக இயக்குனர் மு.மாறன். இன்னும் சில நாட்களில், மு. மாறனின் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ நம் பார்வையில் படும்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles