'ரம்' படத்தின் பலமே அனிருத் தான்! நடிகர் ஹ்ரிஷிகேஷ்

Wednesday, March 1, 2017

" 'வி.ஐ.பி.'பார்ட் ஒன் படத்துக்குப் பிறகு, ஹீரோவாக நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. முதல் படம் சரியாக அமையணும். பெரிய மாஸ் ஹீரோ மாதிரியெல்லாம் நடிக்க முடியாது. ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிற கதாபாத்திரமாக அமையணும்னு எதிர்பார்த்தேன். அப்படி அமைந்ததுதான் 'ரம் '.

இந்தப் படத்தோட திரைக்கதையை மிகவும் சிறப்பாக எழுதியிருக்கிறார் இயக்குநர் சாய் பரத். என்னுடைய திரைப்பயணத்துக்கு இது ஒரு மைல்கல்லாக அமையும்!" - சிலிர்ப்போடு பேசுகிறார் ஹ்ரிஷிகேஷ். தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ஹீரோ. அவரோடு நேரம் ஒதுக்கி, பேசியபோது... 

 

'ரம்' பட அனுபவம்..?

"இந்தப் படத்துக்கு பெரிய பலம்ன்னு சொல்லணும்னா, அது அனிருத்தோட இசைதான். அது மட்டுமில்லாமல், படத்துல நிறைய கதாபாத்திரங்கள் இருக்கு. ஒவ்வொன்றையும் தனித்துவமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இந்தப் படத்துல விவேக், நரேன் சார் இருக்காங்க. எனக்கு ஜோடியா சஞ்சிதா ஷெட்டி நடிச்சிருக்காங்க. 'ரம்' படத்துல நடிச்சது எனக்கு ஒரு அட்வென்சர் பயணமாகத்தான் இருந்துச்சு. ஒரு நடிகர் நிறைய படங்களில் நடித்தாலும், முதல் படத்தை திருப்பிப் பார்க்கும்போது அது மறக்க முடியாததாக இருக்கும். அந்தவகையில் எனக்கு 'ரம்' அமைஞ்சிருக்கு!"

 

நாயகி சஞ்சிதா ஷெட்டி..?

"சினிமாவில் என்னை விட சீனியர் சஞ்சிதா ஷெட்டி; எந்த ஈகோவும் இல்லாத நடிகை. ஏற்கனவே 'சூது கவ்வும்', 'பீட்ஸா' என ஹிட் படங்களில் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்துல, அவங்க முத்திரை பதிச்சிருக்காங்கன்னு தான் சொல்லணும். முதல்முறையாக அவங்களோடு சேர்ந்து ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும்போது கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. அதை அவங்க மேனேஜ் பண்ணி, என்னை இயல்புக்கு கொண்டு வந்துட்டாங்க!"

 

இசையமைப்பாளரும், சகோதரருமான அனிருத் பற்றி..?

"அனிருத் மாதிரியே எனக்கும் பேய்ப்படங்கள்னா ரொம்ப பயம். ஹாரர் படங்களை எப்பவுமே பார்க்க மாட்டேன். அப்படியே ஒன்றிரண்டு படங்களை பார்த்தால் கூட, ஒலியை நிறுத்திவிட்டு தான் பார்ப்பேன். பேய் பற்றி எனக்குள்ளே இருக்கிற பயம், இந்தப் படத்தில் நடிக்கும்போது உதவியாய் இருந்தது. சில காட்சிகளில் திடீரென்று யாராவது கத்தும்போது, நிஜமாகவே நான் பயந்துவிடுவேன். அது அப்படியே பதிவாகியிருக்கு. அதை ஸ்கீரினில் பார்த்தால், உங்களுக்கே தெரியும்!" 

 

இயக்குநர் சாய் பரத் குறித்து..?

"தொழில்நுட்பரீதியாக ரொம்ப ஸ்ட்ராங்கான ஆள் இயக்குநர் சாய் பரத். சி.ஜி., எடிட்டங் எல்லாம் தெரிந்த மனிதர். கனடாவில் படித்துவிட்டு, அங்கேயே உதவி இயக்குநராகவும் வேலை பார்த்த அனுபவம் உள்ளவர். அதனால் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்‌ஷனும் ரொம்ப வேகமாகவே முடிஞ்சது. இந்தப் படத்துல, சிவா என்கிற கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய சாய் பரத்துக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறேன்!" 

 

'தீர்ப்பு' என்ற தலைப்பை 'ரம்' என மாற்றியது ஏன்?

"தீர்ப்பு தலைப்புக்கு மாற்றாக ஒரு தலைப்பை இயக்குநர் தேடிக்கிட்டு இருந்தாரு. அப்போதுதான், அதற்கு இணையா வேறொரு சொல்லாக 'ரம்' கிடைத்தது. அந்தத் தலைப்பைக் கேட்டவுடனே, எனக்கும் பிடித்துப் போய்விட்டது. அதனால், அதையே தலைப்பாக வைத்துவிட்டோம்!"

 

நாயகனாக மாறும்போது ஏதேனும் வேறுபாட்டை உணர்ந்தீர்களா?

" 'வி.ஐ.பி.' படத்தில் கார்த்திக் வேடத்தில் நடித்ததற்குப் பிறகு, போற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. துணைப்பாத்திரத்தில் இருந்து நாயகன் பாத்திரத்துக்கு புரமோட் ஆகும்போது, வித்தியாசம் எதுவும் எனக்குத் தெரியலை. நடிகன் எப்போதுமே நடிகன்தான். ஒரு இயக்குநர் என்ன சொல்றாரோ, என்ன மாதிரியான கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறாரோ, அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்தாலே போதும்னு நினைக்கிறேன். அதுதான் ஒரு நடிகனுடைய வேலை. 'வி.ஐ.பி.' சாயல் எதுவும் தெரியக்கூடாது என்பதற்காகத்தான், இந்தப் படத்துக்காக தாடி வளர்த்தேன்!"

 

'ரம்' படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகியுள்ளதே?

"தமிழ் சினிமாவில் வருஷத்துக்கு 200 படங்களுக்கு மேல் எடுக்கப்படுது. அதுல பல படங்கள் தியேட்டரில் வெளியாக முடியாமலேயே நின்னுடுது. அதையெல்லாம் மீறி 'ரம்' படம் வெளியே தெரியுது. படம் பெரிய அளவில் வியாபாரம் ஆகியிருக்குன்னா, அது தயாரிப்பாளர், அனிருத், இயக்குநர் ஆகிய மூன்று பேர் தான் காரணம். அதுக்கும் மேல, எல்லாமே இறைவனோட ஆசிர்வாதம்னுதான் தோணுது!" - ஷார்ப்பாக முடித்தார் ஹ்ரிஷிகேஷ்! 'ரம்' படத்தின் வழியாக, மேலும் பல 'உயரம்' தொட வாழ்த்துகள்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles