எனக்கு தனி ஆளா வேலை செய்ய பிடிக்காது! காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம்

Friday, January 13, 2017

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு ஆடை வடிவமைப்புக்கும் கணிசமான பங்கு உண்டு. படத்தின் கதையை மக்களோடு இழையவிட்டு உயிரோட்டம் அளிப்பது ஒரு காஸ்ட்யூம் டிசைனரின் பணி. கதாபாத்திரங்களை இயல்பாகக் காட்டுவதற்கு அல்லது இயல்பை மீறிய வித்தியாசங்களோடு மக்களின் மனதைக் கவர்வதற்கு, இவர் கண்டிப்பாக சிரத்தை எடுத்தாக வேண்டும்.

கூடவே, படத்தின் கதை நிகழும் காலத்தை மக்களுக்கு நினைவூட்டவும் செய்ய வேண்டும். இதுபற்றிய நமது கேள்விகளை, இயக்குனர் வெற்றிமாறனின் ‘வடசென்னை' படத்தில் பணிபுரிந்துவரும் காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராமிடம் கேட்டோம். ‘வடசென்னை' மீதான திரை ரசிகனின் ஆச்சர்யத்தைச் சுமந்தவாறே, அவர் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். 

 

“ ‘வடசென்னை' எனக்கு ஸ்பெஷலான படம். எனக்கு மட்டுமில்லை, வெற்றிமாறனுக்கும் இது ரொம்ப ஸ்பெஷல் படம். இதுல நடிக்கிற தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியாவுல இருந்து எல்லாருக்கும், நான்தான் காஸ்ட்யூம் டிசைனர். 

வெற்றிமாறன் மிகப்பெரிய இயக்குனர்னு நம்ம எல்லாருக்கும் தெரியும். அவரு ஒரு நாள் கூப்பிட்டு, படத்தோட சாராம்சத்தை மட்டும் சொன்னாரு. உடனே நானும் எங்க டீமும் அந்தப் படத்துக்கான காஸ்ட்யூம் பைபிளை தயாரிச்சோம். படத்தோட கதை நடக்குற இடத்தைத் தெரிஞ்சுக்கிட்டு, அந்த ஏரியாவுல இந்தக் கலரை அதிகம் பயன்படுத்தி இருப்பாங்க, எந்த மாதிரியான உடைகள் போட்டு இருப்பாங்க, இப்படி ஏ டு இசட் விளக்கம் இருக்கிறதுதான் காஸ்டியூம் பைபிள்.

 

இதை ரெடி செஞ்சு எடுத்துகிட்டுப் போய், இயக்குனர் வெற்றிமாறனைப் பார்த்தோம். இயல்பாகவே, அவரு ரொம்ப அமைதியான ஒரு மனிதர். “அப்புறமா உங்களை கூப்பிடறேன்”னு மட்டும் சொன்னாரு. இரண்டு நாள் கழிச்சு,  “நீங்க மணிமாறனை தொடர்பு கொள்ளுங்க"ன்னு அவருகிட்ட இருந்து மெசேஜ் வந்தது. நிஜமாகவே, எனக்கு இன்ப அதிர்ச்சி தான். உடனே மணிமாறனைத் தொடர்புகொண்டு பேசினேன். ‘இந்தப் படத்துல நீங்கதான் காஸ்ட்யூம் டிஸைனராக பணியாற்றப் போறீங்க'ன்னு சொன்னாரு. அந்தத் தருணத்தை என்னால மறக்கவே முடியாது.

 

படப்பிடிப்பு ஆரம்பிச்ச ரெண்டு நாள் வரைக்கும், நான் ரொம்ப அமைதியா இருந்தேன். ஆனால், அதுக்கு மேல என்னால இருக்க முடியல. எப்போதும்போல, நான் கலகலன்னு செட்ல பேச ஆரம்பிச்சிட்டேன். இயக்குனர் ரொம்ப சைலண்டா இருப்பாரு. நான், ஒரு விஷயத்தை எப்போதுமே சுருக்கமா சொல்லமாட்டேன். வளவளன்னு இழுத்து பேசிட்டே இருப்பேன். இயக்குனர் சுருக்கமா ‘புரிஞ்சுடுச்சு'ன்னு பதில் சொல்லிடுவாரு.

 

எனக்கு எப்போதுமே தனி ஆளாக வேலை செய்வது பிடிக்காது. ஒரு டீமா வேலை பார்க்கணும்னு விரும்புவேன். படத்தோட கேமரா மேன், ஆர்ட் டைரக்டர், அசிஸ்டன்ட் டைரக்டர் இப்படி எல்லாரும் எனக்கு யோசனை சொல்லுவாங்க. நானும் அதை ஏத்துப்பேன். நம்ம படம் நல்லா வரணும்னுதானே, அவங்களும் சொல்றாங்க. அதோட, காஸ்ட்யூம் பார்ட் நல்லா இருந்துச்சுன்னா அந்த கிரெடிட்ஸ் எனக்குதானே கிடைக்கப்போகுது. அதுனால,  ‘இவங்க சொல்லுறாங்க அவங்க கேட்குறாங்க'ன்னு எந்த ஈகோவும் பார்க்க மாட்டேன். சொல்ற விஷயம் நல்லா இருந்தா, நிச்சயம் அதை பாசிட்டிவா எடுத்துப்பேன்” என்று சொல்லும் அம்ரிதாவின் முகத்தில் பூரண திருப்தி. 

 

“படத்தோட கதைக்களமே வித்தியாசமா இருக்கும். படம் நடக்கிற டைம் பீரியட்ல எந்த மாதிரியான உடைகள் போட்டு இருந்திருப்பாங்கன்னு, எந்த ஒரு ஆவணங்களும் இணையத்துலயோ, புத்தகங்கள்லயோ இல்லை.

 

அதனால, அந்த ஏரியாவுல இருந்த மக்கள் எந்த மாதிரி இருந்தாங்கன்னு, நேர்ல போய் ஆய்வு செஞ்சோம். அவங்க குடும்பப் புகைப்படங்கள், அவங்க கூட சேர்ந்து உரையாடுறதுன்னு பிராக்டிகலா களத்துல குதிச்சிட்டோம். மக்கள்கிட்ட கலெக்ட் செஞ்ச விஷயத்தை எல்லாம் ஒன்று திரட்டி, இந்தப் படத்துக்கு ஏற்றமாதிரி ஆடையை வடிவமைச்சோம்” என்கிறார் அம்ரிதா. கடின உழைப்பு என்றும் வீண் போகாது. அந்த நம்பிக்கையுடனே, ‘வடசென்னை'யின் ஒவ்வொரு அணுவிலும் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறார் அம்ரிதா ராம்.  

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles