சினிமா ரசிகர்களை திக்குமுக்காட வைத்த சென்னை உலகத் திரைப்பட விழா! 

Friday, January 13, 2017

உலக சினிமா, மாற்று சினிமா, யதார்த்த சினிமா என்று பல்வேறு அடையாளங்களுடன் வெளியாகும் சிறந்த திரைப்படங்களை உடனுக்குடன் காண்பது என்பது டிஜிட்டல் யுகத்தில் சாதாரண விஷயம். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இத்தகைய சூழல் இல்லை. திரைப்படத்துறையில் கால்பதிக்க நினைக்கும் இளைஞர்களுக்கு, உலகசினிமா என்பது எட்டாக்கனியாகவே இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் அருமருந்தாக இருந்தன ஆங்காங்கு நடந்த உலகத் திரைப்பட விழாக்கள்.

பல்லாண்டு போராட்டங்களுக்குப் பிறகு கோலிவுட்டில் இயக்குநராக உருவாகி, ரசிகர்களிடம் பெற்ற நற்பெயரின் துணையோடு பல நாடுகளுக்குச் சென்று, அங்கே திரையிடப்படும் படங்களைக் கண்டுகளித்து, அதை அப்படியே தமிழுக்குக் கொண்டுவர முடியும். அப்படியாக உருவாக்கப்பட்ட படங்களை, நாம் கிளாசிக் சினிமா என்று கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோம். இப்போது அத்தகைய கிளாசிக் சினிமாக்கள் எல்லாம் எந்தெந்த நாட்டுப் படங்களின் தழுவல்கள் என்று வெளிச்சத்துக்கு வந்திருப்பது தனிக்கதை. 

நிற்க, இப்படியாக பிற நாடுகளில் உருவாக்கப்படும் படங்களைப் பார்த்து, அதேபோன்ற அழகியல் கூறுகளோடும் திரைக்கதை உத்திகளோடும் சினிமாக்களை உருவாக்க வேண்டும் என்ற ஆவல், இன்றைய இளையதலைமுறையினர் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆகவேதான், இணையத்தின் வழியே தான் விரும்பும் படங்களை தேடிக் கண்டடைந்து, சிறந்த சினிமாக்களை சமீபகாலமாகத் தமிழுக்கு அளித்து வருகிறார்கள் புதிய அலை இயக்குநர்கள். இன்னொருபுறம், எந்த இயக்குநரிடம் உதவியாளராகப் பணியாற்றாமலே சினிமா தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டு, உலக சினிமாக்களை தொடர்ச்சியாகப் பார்த்தறிந்து கொண்ட புரிதலோடு மாறுபட்ட கதைக்களன்களைத் தேர்வுசெய்து, வெற்றிக்கொடி நாட்டிவரும் இயக்குநர்களின் பட்டாளமும் கோலிவுட்டில் அதிகமாகி வருகிறது. 

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இணையத்தின் வழியே படங்கள் பார்ப்பதைத் தவிர்த்து, ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் உலக திரைப்பட விழாக்களில் மட்டும் கலந்துகொண்டு, அதன் வழியே கிடைத்த அனுபவத்தோடு படம் இயக்குபவர்களும் உண்டு. அப்படியான உலகத் திரைப்பட விழாக்கள் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்தாலும், கோவாவில் நடக்கும் விழா மட்டும் சினிமா காதலர்களால் நிரம்பி வழியும். அதற்கு அடுத்தபடியாக ஏராளமான சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்படுவது சென்னையில் நடக்கும் உலகத் திரைப்படவிழா தான்!

கடந்த 14 ஆண்டுகளாக, இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் எனும் அமைப்பு தமிழக அரசின் நிதி உதவியோடு உலகத் திரைப்படவிழாவை சென்னையில் நடத்தி வருகிறது; பல்வேறு நிறுவனங்களின் ஆதரவு இதற்கு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் உலகத் திரைப்பட விழா பற்றிய அறிவிப்பு வெளியானதும், பிற மாவட்டங்களைச் சேர்ந்த சினிமா விமர்சகர்களும் சென்னையை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிடுவர். 

மற்ற விழாக்களைக் காட்டிலும், சென்னை உலகத் திரைப்படவிழாவுக்கென்று பிரத்யேகமான சில அம்சங்கள் உண்டு! அவற்றில் முதன்மையானது, குறைந்த செலவில் (சுமார் ரூ.500ல் இருந்து ரூ.800 வரை) உலக சினிமாக்களை ரசிப்பது. திரையிடப்படும் நூற்றுக்கணக்கான படங்களில் இருந்து சுமார் 30 படங்களை ஒருவர் பார்க்க முடியும்; நாள் ஒன்றுக்கு 5 படங்கள் வீதம், அவரவர் விரும்பும் திரையரங்களில் சென்று படங்களைக் கண்டுகளிக்க முடியும். பல நாடுகளைச் சேர்ந்த படங்களைப் பார்ப்பதோடு, சம்பந்தப்பட்ட படங்களின் இயக்குநர்களோடு கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைக்கும். அதோடு, நாம் விரும்பும் இயக்குநரிடமோ அல்லது தொழில்நுட்ப வல்லுநரிடமோ உதவியாளராகச் சேர்ந்து பணியாற்றுவதற்கான முதல் சந்திப்பை உண்டாக்கவல்லது இந்த விழா. இதற்குமுன் நிகழ்ந்த உலகத் திரைப்பட விழாக்கள் மூலமாக, தமிழ் சினிமாவுக்கு ரசனையான பல உதவி இயக்குநர்களும், ஒளிப்பதிவாளர்களும், படத்தொகுப்பாளர்களும், கலை இயக்குநர்களும், இசையமைப்பாளர்களும் கிடைத்துள்ளனர் என்றால் அது மிகையில்ல. 

பொதுவாக, இந்த விழா டிசம்பர் மாதத்தில் நடைபெறும். அதற்கு முன்னதாக, கோவாவில் உலகத் திரைப்படவிழா நடந்து முடிந்திருக்கும். அங்கு சென்றுவந்தவர்களும் சென்னையில் நடக்கும் விழாவில் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. அத்தகையோர், தான் கண்டு ரசித்த படங்களின் பட்டியலையும், விமர்சனங்களையும் சோஷியல் மீடியாவில் முன்வைப்பர். இதனால், சில குறிப்பிட்ட படங்களைப் பார்க்க தியேட்டரில் கூட்டம் அலைமோதும். நின்றுகொண்டே படம் பார்க்கும் அனுபவமும் கிடைக்கும். ஆரண்ய காண்டம் படத்தை தியேட்டரில் கண்டுகொள்ளாத ரசிகர்கள், சென்னை திரைப்பட விழாவின் வழியே அதற்கு தனிமவுசு கூட்டியதும் கடந்த காலங்களில் நடந்தேறியிருக்கிறது!

இந்த விழாவில் எத்தகைய இடையூறுகளும் நிகழாதவண்ணம், பல திட்டமிடல்களை விழாக்குழுவினர் முன்னதாகச் செய்திருப்பர். வாகனங்கள் நிறுத்தும் வசதி (கட்டணமின்றி), உணவு அருந்துவதற்கான சூழல், இயக்குநர்களோடு விவாதிப்பதற்கான அரங்கம், விவாதிப்பதற்கான இருக்கைகள், படங்கள் குறித்த சிறிய விமர்சனம் அடங்கிய பட்டியல் என எல்லாம் மெச்சும் வகையில் இருக்கும். திரையிடப்பட்ட படங்களில் சிறந்த தமிழ் படத்துக்கு விருது கொடுத்தும் கவுரவிப்பர். இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட உலகத் திரைப்பட விழா, கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நடந்தது. அதேபோன்று, இந்த ஆண்டு நடைபெற்ற 14வது சென்னை உலகத் திரைப்பட விழா ஜனவரி 5ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடந்தது.

ஈரான், பிரேசில், பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி உள்ளிட்ட பல நாடுகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படைப்புகள் இந்த விழாவில் இடம்பெற்றன. 'மாரோசா', 'திங்ஸ் டு கம்', 'ஆப்டர் இமேஜ்', 'தி சேல்ஸ்மேன்', 'தி ஸ்டாப் ஓவர், தி ஹாப்பிஸ்ட்', 'அவர் எவரிடே லைப்', 'லூப்', 'தி கட்' உள்பட 15க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பெருங்கூட்டம் கூடியது. குறிப்பாக, தி சேல்ஸ்மேன் படத்துக்கு இருக்கை இல்லாமல் ரசிகர்கள் திண்டாடினர். 

வழக்கத்தை மீறி, இந்த ஆண்டு ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி சிறிது அதிகமிருந்தது. வழக்கமாகத் திரையிடப்படும் 'உட்லண்ட்ஸ்' திரையரங்கங்களில்  படங்கள் திரையிடப்படாததும் இதற்கொரு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆர்.கே.வி. ஸ்டூடியோ தவிர்த்து மற்ற திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டது, எல்லோரையும் திக்கமுக்காட வைத்தது. நுழைவுக் கட்டணத்தை விட, பார்க்கிங் கட்டணம் கட்டியோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. வழக்கமாக தியேட்டரில் இருக்கை நிரம்பினாலும், நின்றுகொண்டு பார்க்க அனுமதித்து வந்தன சில தியேட்டர் நிர்வாகங்கள். இந்த ஆண்டு அது செல்லுபடியாகவில்லை. விளைவு, விழாக்குழுவினருக்கும் பார்வையாளருக்கும் இடையே சில இடங்களில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது; விரும்பிய படங்களைப் பார்க்க முடியாமல் பலர் கடுப்புடன் வெளியேறிய காட்சிகளும் அரங்கேறியது. 

இது எல்லாவற்றையும் மீறி, எல்லா அசௌகரியங்களையும் பொறுத்துக்கொண்டு கடைசி நாள் வரை படங்களைக் கண்டுகளித்தவர்களும் உண்டு. அடுத்த ஆண்டு சினிமா ரசிகர்கள் முழு திருப்தியடையும் வகையில் விழா நிகழ வேண்டுமென்பதே சினிமாவைக் காதலிப்பவர்களின் விருப்பம். 

எது எப்படியாயினும், 14-வது உலகத் திரைப்பட விழா சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடும் நெருக்கடி, சிரமங்களுக்கு இடையேயும் விடாப்பிடியாக விழாவை நடத்தி முடித்த அனைவருக்கும் நன்றி சொல்வதைத் தவிர, வேறு என்ன சொல்லிவிட முடியும்! 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles