பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள் 

Thursday, June 15, 2017

இன் தி மூட் பார் லவ்

உலக சினிமாக்கள் மீதான ஆர்வம் பார்வையாளர்களுக்கும், திரை விமர்சகர்களுக்கும், இயக்குநர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் எப்போதும் குறைவதேயில்லை. அதற்கு உதாரணமாக பல சம்பவங்களை சொல்ல முடியும்; உதாரணங்களை காட்ட முடியும். அப்படியாக நாம் எல்லோரும் காணத் தவறக் கூடாத, விவாதிக்கப்பட வேண்டிய ஒரு படம் தான் இன் தி மூட் பார் லவ்.

அப்படியென்ன இந்தப் படத்தில் ஸ்பெஷல் என்று நீங்கள் கேட்கலாம். இதுவரை நாம் இந்தப் பகுதியில் அலசிய அனைத்து சினிமாக்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட படம் இது. அது மட்டுமே போதுமா? என்றாலும் அதையும் தாண்டி பல சுவாரஸ்யமான தகவல்கள் அதில் அடக்கம். 
 
ஹாங்காங்கின் புகழ்பெற்ற இயக்குநர் வாங் கார் வை. அவர் இயக்கிய இந்தப் படம் தான் இப்போது வரை பல நாடுகளில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை வாய்பிளக்க வைத்த படம். எந்தப் படத்தோடும் ஒப்பிட முடியாத அளவுக்கு தனித்துவமான மொழியில் உருவாக்கப்பட்டது ‘இன் தி மூட் பார் லவ்’. இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்கிறது. அதனால் அதற்குள் நாம் இப்போது போக வேண்டாம். ஆனால், இந்தப் படத்தை உருவாக்கும்போது எந்தக் கதையும் எழுதப்படாமலேயே படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றார் இயக்குநர் என்றால், அதை நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பித்தான் ஆக வேண்டும். 
 
“என்ன சார் சொல்றீங்க!” என்று வியக்காதீர்கள். உண்மைதான். அதனால்தான் முன்னரே குறிப்பிட்டேன் இன் தி மூட் பார் லவ் எதிலும் சேராத விதிவிலக்கான படம் என்று. உலக அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் மைக்கேல் கேலஸோ, ஷிங்கேரு உமேபயாஷி ஆகியோரை அழைத்த இயக்குநர் வாங் கார் வை, தான் ஒரு படம் இயக்கப் போவதாகவும் அதற்கு தாங்கள் இருவரும் இசையமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார். அவர்கள் சொல்லி வைத்தாற்போல, “கதை என்ன சார்?” என்று கேட்கின்றனர். “கதையா... அதைப்பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். இருவரும் சிறந்த இசையமைப்பாளர்கள் தானே. உங்கள் மனதில் என்ன தோன்றுகிறதே அதையே வாசியுங்கள்...” என்கிறார். 
 
நீங்கள் திடுக்கிடுவது போல தான், அவர்கள் இருவரும் திடுக்கிட்டனர். ஆனால், பெரிய இயக்குநர் ஆயிற்றே, சரி அவர் சொல்வது போலவே செய்வோம் என்று 98 நிமிடங்களுக்கான இசையை உருவாக்கி, அவரிடம் தந்தனர். அதை எடுத்து வைத்துக்கொண்ட இயக்குநர் பிரபல ஒளிப்பதிவாளரான கிறிஸ்டோபர் டாயலை அழைக்கிறார். அவரும் இயக்குநரிடம் ‘கதையென்ன?’ என்று அதே கேள்வியை கேட்க, இசையமைப்பாளர்களுக்கு சொன்ன பதிலையே சொல்கிறார் வாங் கார் வை. சரி என்று படப்பிடிப்புக்கு தயாராகிறார். இப்போது சிறந்த நடிகர், நடிகையர் என பெயர் வாங்கிய மேகி சாய்ங்கையும், டோனி லாயிங்கையும் படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்துப் போகிறார். ஷுட்டிங் அன்று மேகியும், டோனியும் “கதையென்ன பாஸ்?” என்று கேட்கின்றனர். “அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. நீங்கள் இருவரும் சிறந்த நடிகர்கள்தானே?” என்றதும், இருவரும் தலையாட்டுகின்றனர். “அப்படியென்றால் கேமிராவுக்கு முன்னால் போய் நடியுங்கள்” என்று, உத்தரவிடுகிறார். “பாஸ்... நாங்கள் என்ன வசனம் பேச வேண்டும் என்றாவது சொல்லுங்கள் ப்ளீஸ்” என்று கெஞ்சுகின்றனர். 
 
“இந்த இடத்தில் நீங்கள் இருவரும் சந்தித்து கொண்டால் என்ன பேசுவீர்களோ அதுதான் வசனம் போங்கள்... போய் பேசுங்கள்” என்று விரட்டுகின்றனர். அவர்களுக்கு நடிப்பதற்கான மூட் கிரியேட் பண்ணுவதற்காக முன்னரே உருவாக்கப்பட்ட இசைத்தட்டை ஒலிக்க விடுகிறார். ஆரம்பத்தில் அப்படி இப்படி என்று யோசனையில் இருப்பது, நடப்பது என இருக்கும் இருவரும் பிறகு கதையில்லா கதையில் நடிக்கத் தொடங்குகின்றனர். கிறிஸ்டோபர் டாயல் அவர்களது அசைவை படம் பிடிக்கத் தொடங்குகிறார். இப்படியாக படப்பிடிப்பு நடந்து முடிகிறது. ஒரு பக்கம் காட்சிகளை ஒழுங்குப்படுத்துவதும் மற்றொரு பக்கம் ஒலிகளை அதற்கேற்றவாறு அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. 
 
அதே சமயத்தில் அந்த வருடத்திற்கான (2000) கான்ஸ் உலகத் திரைப்பட விழா விருதுக்கான அறிவிப்பும் வெளியாகிறது. அதனால் அவசரம் அவசரமாக படத்தை முடிக்கிறார் வாங் கார் வை. படத்தின் நடிகர் நடிகையர் தொடங்கி டெக்னிஷீயன் வரை அனைவரும் படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள் என்று இயக்குநரிடம் முறையிடுகின்றனர். ஆனால் அவரோ, ‘அதை பெஸ்டிவலில் பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லிவிட்டு படத்தின் பர்ஸ்ட் காபியையே பார்க்காமல் கான்ஸ் விருது குழுவுக்கு அனுப்பி வைத்துவிடுகிறார். சொன்ன தேதியில் உலகத் திரைப்பட விழாவும் தொடங்குகிறது. அங்கேதான் படத்தின் மொத்த குழு உறுப்பினர்களும் ‘இன் தி மூட் பார் லவ்’ படத்தை பார்க்கின்றனர். அவர்கள் மட்டுமல்ல; அங்கே திரண்டிருந்த ஒட்டுமொத்த பார்வையாளர்களும் படத்தின் சிறப்பைக் கண்டு ஆனந்தத்தில் கூத்தாடுகின்றனர். இதுவரை உருவாக்கப்பட்ட படங்களிலேயே மிகச் சிறந்த படமாக அது உருவாகி இருப்பதாக கூறி பலரும் வாங் கார் வை கட்டிப்பிடித்துக்கொண்டு, தங்கள் அன்பை வெளிப்படுத்துகின்றனர். 
 
சினிமா ரசிகர்களின் கைகுலுக்கலில் திக்குமுக்காடி போகிறார் இயக்குநர். அதேசமயத்தில், அந்த ஆண்டின் (2000) சிறந்த படத்துக்கான கான்ஸ் விருது உள்பட பல விருதுகளை படம் அள்ளுகிறது. உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களின் உச்சரிக்கும் பெயராக மாறுகிறது ‘இன் தி மூட் பார் லவ்’. மேலும், கான்ஸ் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், படம், இயக்குநர் உள்ளிட்ட விருதுகளையும் வெல்லுகிறது. இப்படியாக இன்று வரை பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்பதும் விருதுகளை குவிப்பதுமாக இருப்பதோடு, உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டும் வருகிறது. 
 
இப்போது சொல்லுங்கள். இந்தப் படத்தின் கதையை உங்களால் சொல்லிவிட முடியுமா? முடியும். அதற்கு நீங்கள் இப்போதே அந்தப் படத்தை பார்ப்பதுதான். சில கதைகளை கேட்காமல் பார்க்கும்போதுதான் நாம் பரவசமாவோம். அந்தப் பரவசத்துக்கு இப்போதே தயாராகுங்கள்!
 
- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles