ஒலி மூலமாக காட்சியை உணர வைக்கலாம்!- ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி.

Thursday, June 15, 2017

‘அஞ்சலி’  படத்தில், குழந்தை நட்சத்திரமாக தோன்றி, ‘மே மாதம்’, ‘சதிலீலாவதி’ போன்ற திரைப்படங்களில் குறும்பு செய்யும் துருதுரு பையனாக நடித்து, நம்மை ஈர்த்த அந்த ஆனந்த் பையனை ஞாபகமிருக்கிறதா? அந்தப் பையன்தான் இப்போது வளர்ந்து, ‘காற்று வெளியிடை’ படத்தில் ஒலி வடிவமைப்பாளர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தியாக புரமோஷன் ஆகியிருக்கிறார். தன்னால் கதாபாத்திரங்களை மட்டும் அல்ல; சிறப்பாக ஒலியையும் கையாளத்  தெரியும் என நிரூபித்திருக்கும் தன்னம்பிக்கை இளைஞர். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும்  நடிகர் கமல்ஹாசன் ஆகியோரிடம்  பால பாடம் கற்றவர். நம்மிடம் பேசினார். 
 
 

இசையமைப்பாளர்-ஒலிவடிவமைப்பாளர் இடையே உள்ள வேறுபாடு?
 
“ஒலி வடிவமைப்பு என்பது, சினிமாவுக்குள்ள இருக்கிற விஷயம். ஒரு காட்சிக்குள்ள இருக்கிற சூழல்களுக்கு ஏற்றமாதிரி ஒலியை கையாளுவதுதான். உதாரணத்துக்கு சொல்லணும்னா, கடற்கரையில ஒரு காட்சியை எடுக்குறாங்க. அங்க, அலைகளோட ஓசை, கூல்ட்ரிங்க்ஸ் விக்கிறவங்க சத்தம், குழந்தைகள் விளையாடும் சத்தம் இப்படி பல  இருக்கும். இதை நாங்க, சூழல் ஓசை ன்னு சொல்லுவோம். அதாவது திரையில தெரியாத, ஆனால் அதற்குள் இருக்கும் விஷயம். இதை சரியான அளவில் வடிவமைப்பதுதான் எங்களோட வேலை.
 
காமெடி காட்சிக்கும், துயரமான காட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை இசை மூலம் ஏற்படுத்த முடியும். அதே மாதிரியான வேறுபாடுகளை ஒலி வடிவமைப்பு மூலமாகவும் நாம செய்யலாம்!”
 
ஒலி வடிவமைப்பிற்கு ரசனை, தொழில்நுட்ப அறிவு; எது அவசியம்?
 
“இரண்டுமே அவசியம். தொழில்நுட்ப அறிவுங்கிறது, வெறும் பட்டனை தட்டற வேலை கிடையாது. என்ன மாதிரியான டோனுக்கு, என்ன உபயோகிக்கணும்னு அறிந்து வைத்திருப்பதுதான் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு. நம்ம காதுல கேட்கிற ஒலி, மைக் மூலமாக கேட்கும் பொழுது வேற மாதிரி இருக்கும். எப்படி, எங்கே, இதனை ரிக்கார்ட் செஞ்சா, என்ன ஒலி கிடைக்கும்கிறதுதான் ரசனை. அது பயிற்சி மூலமாகத்தான் கிடைக்கும்!”
 
அனிமேஷன்-கமர்ஷியல் சினிமாவில் எது சவால் ?
 
“நிஜவாழ்க்கையில, இல்லாத ஒரு விஷயத்தை அனிமேட் செஞ்சிருப்பாங்க. அதற்கு, ஒலி வடிவம் செய்யறதுக்கு, நாம கிரியேட்டிவ்வா இருக்கணும். உதாரணத்துக்கு, பலூன் மாதிரி ஒரு கேரக்டர் இருக்குன்னு வச்சிக்கோங்க, பலூனை அமுக்கினா என்ன சவுண்ட் வரும்னு தெரியும். அதை அடிப்படையாக வச்சிக்கிட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப ஒலிகளை உருவாக்கணும்.  இதுவும் பயிற்சியின் மூலமாக சுலபமாக செய்ய முடியும்.”
 
ஒலி வடிவமைப்பு பற்றி டிப்ஸ்? 
 
“நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, ரசனை, தொழில்நுட்பத்தை தாண்டி, மக்களை அரவணைத்துப் போகிற தன்மை வேணும்.  ஒலி வடிவமைப்புக்கான முக்கியத்துவம்  பற்றிய விழிப்புணர்வு திரைத்துறையினருக்கு, இப்பொழுதுதான் தெரிய வந்திருக்கு. பெரும்பாலும், படத்தொகுப்பு முடிச்சிட்டுதான் எங்ககிட்ட வருவாங்க. அதுக்காக நான் இயக்குநருக்கிட்டே சண்டைபோட முடியாது. அதே சமயத்துல அவரை ஏமாற்றவும் முடியாது. அவங்க கேக்குறத  கொடுப்பது நம்ம கடமை. அதற்கு பொறுமை ரொம்பவே அவசியம். கதைகள் நிறைய கேளுங்க. சுவாரஸ்யமாக கதை சொல்லத் தெரியணும். நீங்க உருவாக்குற ஒலி மூலமாக காட்சியை உணர வைக்கலாம்!”
 
பிடித்த ஒலிவடிவமைப்பாளர்?
 
“ வால்டர் மர்ச்”
 
இயக்குநர் மணிரத்னம்?
 
“இசையைப் பற்றி தெரிந்த இயக்குநர் மணிரத்னம்.  சவாலான வேலையைத்தான் எங்களுக்கு கொடுப்பாரு. எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா “நீங்க கொடுக்கிற ஓசை ஆடியன்ஸை குளிர வைக்கணும்”ன்னு சொல்லுவார். அது எப்படி முடியும்?னு யோசிப்போம். காற்றுல ஈரப்பதம் கலந்தா, நம்மை குளிர வைக்கும் இல்லையா? அப்படி ஒரு சத்தம் எதிலிருந்து கிடைக்குமோ, அதை ஆராய்ச்சி செஞ்சு அவருக்கு கொடுப்போம். அதைக் கேட்டு அவரோட கருத்தை எங்ககிட்ட பகிர்ந்துப்பாரு. அவர் கொடுக்கிற கருத்து நம்மை அடுத்தத் தளத்துக்கு கொண்டு போகும்!”
 
ஒலி வடிவமைப்பு தவிர?
 
“எழுத்தில் ஆர்வம்!” - மணிரத்னம் படங்களின் வசனம் போலவே ரத்தின சுருக்கமாக பதில் வருகிறது. கைகுலுக்கி, விடைபெற்றோம்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles