பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!

Wednesday, May 31, 2017

ரோசா 

உலகின் சபிக்கப்பட்ட மனிதர்கள் யாரெல்லாம் தெரியுமா? போரின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட அனைவரும்தான். இந்த உலகில் நிகழவே கூடாது என எல்லோரும் விரும்பும் ஒன்றும் போர் தான். இரு நாடுகளுக்கு இடையேயாக இருந்தாலும்; இரு மனங்களுக்கு இடையே ஆனாலும் ஒரு போதும் நிகழவே கூடாது போர்.

அது தரும் கொடுந்துயருக்காக மட்டும் அல்ல; ஒட்டுமொத்த மனித வாழ்வையே நரகத்திற்குள் தள்ளிவிட்டு, வேடிக்கை பார்க்கும் மோசமான விளையாட்டு போரினால் மட்டுமே நடக்கும் என்பதற்காகத்தான்!. ஆனாலும் தவிர்க்க முடிவதில்லை, போர்கள்!
 
இப்போதும் கூட வடகொரியா நடத்தும் அணு ஆயுத சோதனைகளால் அமெரிக்கா அச்சத்தில் இருக்கிறது. அம்மக்கள் எவ்வேளையிலும் நிகழலாம் போருக்கான ஒத்திகைகள் என்பது போலவே, வாழ்வை கடத்துகின்றனர். எங்கேயோ ஒரு மூலையில் போர் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அது சிரியாவோ, உஸ்பெஸ்கிஸ்தானோ இருக்கலாம். ஆனால், போர் நடந்துகொண்டே இருக்கிறது என்பதை ஒவ்வொரு நாளும் வெளியிடப்படும் செய்திகளின் வழியே நாம் அறியலாம். போரில் மடியும் ராணுவத்தினர்களை விட, எதையும் அறியாத குழந்தைகளும் பெண்களும் விலங்கினங்களும் அழிவதைத்தான் ஏற்க மறுக்கிறது மனம். எதையும் பேசித் தீர்க்கலாம் என்கிற போது, எதனால் விளைகிறது போர்கள்!. 
 
இந்த மானுடம், இதுவரை இரு உலகப் போர்களை கண்டிருக்கிறது. அத்தகையப்  போர்களினால் ஆயிரமாயிரம் குடும்பங்கள் காணாமல் போயின. கோடிக்கணக்கான உயிர்கள் பலிவாங்கப்பட்டன. மக்கள் வீடுகளை இழந்தனர். அதனால் ஏற்பட்ட அழியாத வடுக்கள் இன்னும் உள்ளது. ஆறாத ரணத்தையும் அது கொண்டிருக்கிறது. அதன் வலிகள் இன்னும் இருக்கவே செய்கின்றன. எந்த மருந்தாலும் தீர்க்க முடியாத நோயைக் கொண்டவை போர்கள். இப்படியான போரைப் பற்றிய அழியாத சித்திரத்தை கொண்டிருக்கிறது போலந்து திரைப்படமான ரோசா!.
 
உலகத்தையே தன்னுடைய சர்வதிகாரத்தால் அச்சுறுத்தியவர் அடால்ஃப் ஹிட்லர். அவருடைய ஜெர்மானியப் படைகள் ரஷ்யப் படைகளால் தோற்கடிக்கப்பட்டன. பூமியில் பின்னரே அமைதி திரும்பியது. பாசிச ஆட்சி நடத்திய ஹிட்லர் கொன்று குவித்த யூதர்களின் எண்ணிக்கை அளவிட முடியாதவை. மரண தொழிற்சாலையையே தன்னுடைய நாட்டில் நிறுவியவர் அவர். ஆனால், அவரது நாஜிப் படைகள் மோசமான தோல்வியைத் தழுவின. கடைசியில் தனது காதலி உடன் தற்கொலை செய்துகொண்டார் ஹிட்லர். இப்படித்தான் போரின் முடிவுகள் நடந்து முடிந்திருக்கின்றன. அவருடைய மரணத்திற்குப் பின் ஜெர்மனிக்குள் நுழைந்த ரஷ்யப் படைகளால் அம்மக்களும் பெருந்துன்பங்களுக்கு ஆளாகினர். ஒரு நாட்டில் பக்கத்து நாட்டு ராணுவம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும்? என்பதற்கு உதாரணமாக இந்த ‘ரோசா’ படத்தை குறிப்பிடலாம்.
 
படத்தின் துவக்க காட்சியே நம் இதயத்தை நிறுத்திவிடும். போலிஷ் ராணுவ வீரர் (தாடெளஸ்) ஒருவரை கடுமையாக தாக்கும் ஜெர்மன் ராணுவத்தினர் அவர் கண்முன்னாலேயே பலவந்தமாக அவரது மனைவியை வன்புணர்ச்சி செய்கின்றனர். 
 
அது மசூரி. ஜெர்மன் பிடிக்குள் இருந்த அந்த ஊர்,  இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான ஒப்பந்தத்திற்குப் பின் போலந்திடம் சேர்ந்துவிடுகிறது. ஆனாலும் அந்த ஊரில் ஜெர்மானியர்களும் வசிக்கின்றனர். இந்நிலையில் போரில் உயிரிழந்த தன்னுடைய நண்பனின் சில பொருட்களை எடுத்துக்கொண்டு தாடெளஸ், மசூரி கிராமத்துக்கு செல்கிறான். அங்கேதான் நண்பனின் மனைவி ரோசா வசிக்கிறாள். அவள் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவள். 
 
போரில் மனிதர்களின் உடல் உறுப்புகள் மட்டுமல்ல; எதையும் அறியாத விலங்குகளின் உறுப்புகளும் கூட துண்டாடப்படுகின்றன என்பதற்கு உதாரணமான காட்சி அது. நிர்வாணத்தோட பரந்து கிடக்கும் ஏரிக்குள் நுழைகிறான். அப்போது அங்கே ஒரு நாய்க் குட்டி அந்த இடத்தில் தாவி குதித்து வந்து மனித வாடையை மோப்பம் பிடிக்கிறது. அதற்கு ஒரு கால் இல்லை என்பது பிறகே, நமக்கு தெரிய வருகிறது. ரோசாவை சந்தித்து, கொண்டுவந்த பொருட்களை எல்லாம் கொடுத்துவிட்டு திரும்புகிறான்
 
போலந்தில் போருக்குப் பிறகான நாட்கள் துயரமானவை. கடக்க முடியாதவை. அங்குள்ள சிறிய சந்தையில் எல்லாமே தலைகீழாக இருக்கின்றன. சுவரில்லாத அழகு நிலையம் ஒன்றில் சவரம் செய்து கொள்கிறான் தாடெளஸ். அங்கே ஒரு மரத் தூணில் கண்ணாடி ஒன்று மாட்டப்பட்டிருக்கிறது. அதன் வழியே சவரம் செய்பவரிடம் ராணுவ அதிகாரிகள் மாமூல் வாங்குவதை பார்க்கிறான். எல்லாவற்றையும் இழந்த அவன் எங்கே செல்வான்? 
 
 
திரும்பி ரோசாவின் வீட்டுக்கே வருகிறான். அவனுடைய வருகையை விரும்பாதவள் போல அவள் இருக்கிறாள். பிறகு, கையில் ஒரு கத்தியை கொடுத்து, தோட்டத்தில் உள்ள கிழங்குகளை நோண்டி எடுத்து வர பணிக்கிறாள். அவனும் தோட்டத்துக்கு சென்று கிழங்குகளை தேடுகிறான். ஆனால், கிழங்குகளுக்குப் பதிலாக கன்னி வெடிகளே கையில் அகப்படுகின்றன. இந்நிலையில் மூன்று சக்கர மோட்டார் வண்டியில் வரும் போலிஷ்ராணுவத்தினர் ரோசாவின் வீட்டின் பக்கம் செல்வதை கவனித்து, அங்கே ஓடுகிறான். அவளை பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிவிடுகின்றனர். அதற்கு காரணம் அவள் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவள் என்று சொல்லப்படுகிறது. இதுதான் போலந்தின் உண்மையான நிலைமை. எந்த நேரத்திலும் ஜெர்மானிய பெண்கள் இருக்கும் வீட்டுக்குள் புகுந்து பெண்களை போலிஷ்ராணுவத்தினர் சூரையாடிவிடுவர். மீண்டும் தோட்டத்தில் ரோசாவும், அவனும் சேர்ந்து உருளைக் கிழங்கை தோண்டி எடுக்கின்றனர். 
 
அந்த தோட்டத்தில் உருளைக் கிழங்குகளை விட, கன்னி வெடிகளே அதிகமாக புதைந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கவனமாக அகற்றிவிட்டு, அந்த இடத்தில் வெள்ளை நிறக் கொடி ஒன்றை நட்டு வைக்கிறான். அங்கே சேகரிக்கப்பட்ட   ஏராளமான கிழங்குகளை கோணிப்பைகளில் திணித்து, சந்தைக்கு எடுத்துச் செல்ல முயலும்போது அவனது பேண்ட் பாக்கெட்டின் பின்னால் கிழியும் சப்தம் கேட்டு, நீண்ட நாட்களுக்குப் பின் முதல்முறையாக ரோசா சிரிக்கிறாள். பிறகு, தன்னுடைய அலமாரியில் இருந்து கணவருடைய பேண்ட் ஒன்றை எடுத்துக்கொடுத்து, அணிய சொல்கிறாள். அந்தக் கிழங்கு மூட்டை தூக்கிக்கொண்டு செல்கிறான் தாடெளஸ். 
 
தேவாலயம் ஒன்றின் முன்னால் வைத்து விற்பனை செய்ய முயலும்போது, போலிஷ்கிழவி ஒருத்தி, மூட்டையை காலால் உதைத்துவிட்டு திட்டிக்கொண்டே செல்கிறாள். அவளின் செய்கைக்கு காரணம் புரியாமல் தவிக்கும் அவனுக்கு பாதிரியார் விளக்கம் அளிக்கிறார். மசூரியாவுக்குள் புகுந்த ஜெர்மன் படைகள் நாட்டுப் பெண்களை பலவந்தமாக சாலையோரம் கிடத்தி, வன்புணர்ச்சி ஆளாக்கியதையும், தொடர்ந்து பல ஆண்களை ஈவு இறக்கமின்றி சுட்டுக்கொன்றதையும் கூறுகிறார். பிறகு, ரோசாவின் வீட்டுக்கு வரும் அவன், தோட்டத்தின் பின்பக்கத்தில் கிழங்கு தோண்டும் பணியில் ஈடுபடும்போது பலத்த சப்தத்துடன் ஒரு குண்டு வெடிக்கிறது. அவசரமாக அந்த இடத்துக்கு ஓடிவரும் ரோசா, அங்கே அவன் நின்று கொண்டிருப்பதை பார்த்து, திட்டுகிறாள். பெண்களின் கடும்சொற்கள் என்பது அன்பின் வருடலே!. பிறகு, அந்த இடத்தில் இருவருமாக சேர்ந்து புதிய விதைகளையும் விதைக்கின்றனர். 
 
இச்சூழ்நிலையில், வீட்டுக்கான சில பொருட்களை வாங்க சந்தைக்கு சென்றுவிட்டு தாடெளஸ் திரும்பும்போது, ரோசா வீட்டில் மேலாடைகள் கிழிந்த நிலையில் நிற்கிறாள். அவன் உள்ளே நுழைந்ததும், அயர்ச்சி உடன் கீழே உட்கார்ந்து, தன்னை காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். அவளை தூக்கிகொண்டு போய் படுக்கையறையில் விட்டுவிட்டு, இருட்டறையில் அமர்ந்து போருக்குப் பிந்தைய வாழ்வு குறித்து யோசிக்கிறான். 
 
மறுநாள் போலிஷ்வீரர்கள், அவளை பலவந்தமாக வன்புணர்ச்சி செய்ததை அறிந்து கோபம் கொள்ளும் அவன், போரில் கைவிடப்பட்ட பொருட்களில் இருந்து துப்பாக்கி, கையெறி குண்டுகளை சேகரித்து வந்து, வீட்டைச் சுற்றிலும் கன்னிவெடி புதைத்து, அவளுக்கு எப்படி எதிரியை பார்த்து சுட வேண்டும் என்பதை சொல்லித் தரும்போது, உள்ளாடையில் இருந்து ரத்தம் வழிய மயங்கி விழுகிறாள் ரோசா. 
 
பக்கத்தில் உள்ளவர்கள் உதவிக்கு வர மறுக்க, ராணுவ மருத்துவரின் உதவியுடன், அவளுக்கு சிகிச்சை அளிக்கிறான். மயக்கத்தில் இருந்து தெளியும் ரோசா, அவனிடம் ஒரு உண்மையை சொல்கிறாள். போரின்போது கூட்டாக பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, தானும் அதில் சிக்கிக் கொண்டதையும் அப்போது தன்னுடைய மகளை அந்த கொடுஞ் சித்ரவதையில் இருந்து காப்பாற்றி, அந்த வீட்டில் உள்ள இருட்டறையில் யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருவதையும் தெரிவிக்கிறாள். அவனுடைய வருகைக்குப் பிறகு,  அருகில் வசிக்கும் சிலர், ரோசாவின் வீட்டுக்கு வருகின்றனர். வயதுக்கு வந்த ரோசாவின் மகளுடன் சேர்ந்து, குழந்தைகள் வீட்டில் விளையாடி, மகிழ்கின்றனர். அவர்களின் விளையாட்டு ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது. புறச்சூழலே அகத்தை தீர்மானிக்கிறது என்கிற கூற்றுதான் எவ்வளவு உண்மையானது. பிஞ்சு மனதில் போரின் வடுக்கள் ஆழமாக ஊடுறுவியிருப்பதை உணர்த்தும் காட்சி அது!.
 
இப்படியாக நகரும் வாழ்க்கையில் தாடெளஸ், ஏரியில் இருந்து மீன் பிடித்துக்கொண்டு வரும்போது, அங்கே ரோசாவும் அவளது மகளும் சைக்கிளில் சந்தோஷமாக வட்டமிட்டுக்கொண்டிருப்பதை பார்த்து, அவனும் குதூகலமாகி அவர்களோடு சேர்ந்து கொள்கிறான். ஒரு சைக்கிளில் அவர்கள் மூவருமாய் சுற்றுகின்றனர். போரின் துயரத்தை கடக்கும் சாதனம் மகிழ்ச்சியன்றோ!. ஆனால், துயரம் படிந்த வாழ்க்கையில் அந்த நிமிடங்கள் சொற்பமானவையே. மீண்டும் ரோசாவின் நிலைமை மோசமடைகிறது.  அவள் கடுமையான வலியால் அந்த வீடே அதிரும்படி கதறுகிறாள். மருத்துவர்களை அழைத்து வருகிறான். அவளை பரிசோதித்துவிட்டு, நிலைமை மோசமடைந்துவிட்டதை அவனிடம் சொல்கின்றனர். அவன் அளிக்கும் பணத்தையும் வாங்க மறுத்துவிடுகின்றனர். ஏனெனில் அவன் ஒரு போலிஷ்ராணுவ வீரன். வீட்டிற்கு வெளியே மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையில் நனைந்தபடியே அவனும் சேர்ந்து அழுகிறான்!
 
பிறகு, அதுவொரு கொடுங்கனவு என்று ரோசா, தன்னை வந்து எழுப்பும்போது  உணருகிறான். குடும்பத்தோடு அவர்கள் ஏரியில் சென்று மீன் பிடித்து, சமைத்து சாப்பிடுகிறார்கள். மீண்டும் அவர்களது வீட்டை சுற்றி குண்டுமழைகளின் சப்தம். தொடர்ந்து போலிஷ்வீரர்கள், ஜெர்மானிய குடியிருப்புக்குள் புகுந்து பெண்களை வேட்டையாடுகின்றனர். அப்படியே தாடெளஸ் வீட்டில் இல்லாதபோது ரோசாவையும் அவளது பெண்ணிடமும் அத்துமீறிக்கொண்டிருக்கும்போது அவன் உள்ளே வந்துவிடுகிறான். அங்கே கடுமையான சண்டை நடக்கிறது. ரோசாவின் மகள், துப்பாக்கியால் வேட்டை நாய்களை சுடுகிறாள். ஓரிரு போலிஷ்வீரர்கள் குண்டடிப்பட்டு இறக்கின்றனர். ஒருத்தன் கோடரியால் மண்டை பிளந்து சாகிறான். பிறகு, அந்த சடலங்களை அவர்கள் ஓட்டி வந்த ராணுவ வாகனத்திலேயே வைத்து, குண்டுவெடித்து இறந்தபோது ஜோடனை செய்து, வெடி வைத்து அவர்களை எரித்துவிடுகிறான்.
 
ரோசாவின் உடல் நிலை, மிகவும் மோசமாகி இறந்து விடுகிறாள். அவளின் இறுதிச் சடங்குகள் நடக்கின்றன. பிறகு, அவளின் மகளோடு தேவாலயத்தில் அவனுக்கு திருமணம் நடக்கிறது. ஒன்றாக வெளியே வரும்போது, ராணுவ வீரர்களை கொன்றதற்காக அவனை கைது செய்து, கொடுஞ் சித்ரவதை செய்து சிறையில் அடைக்கின்றனர். முற்றிலும் முகம் சிதைக்கப்பட்டவனாக சில வருடங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து வெளியே தாடெளஸ், ரோசாவின் மகளை அழைத்துக்கொண்டு, அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறுகிறான் என்பதோடு படம் நிறைவடைகிறது. இறுதிக் காட்சியின்போது பின்னணியில் ஒலிக்கும் இசை துயரத்தின் பாடல்! 
 
2011 ஆம் ஆண்டில் வெளியான ‘ரோசா’ திரைப்படம், போலிஷ், ஜெர்மன், ரஷ்யன் ஆகிய மொழிகளில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தை இயக்கிய வோஜெக் ஸ்மார்ஸோஸ்கீ, சிறந்த இயக்குநரருக்கான விருதை ‘போலிஷ்பிலிம் அவார்ட்’டை வென்றார். ‘ரோசா’ பாத்திரத்தில் நடித்த அகாதா க்யூலேஷ சிறந்த நடிகையாகவும், தாடெளஸ் பாத்திரத்தில் நடித்த மார்சின் டோரோசீன்ஸ்கி சிறந்த நடிகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் சிறந்த படம், கதை, துணை நடிகர், பின்னணி இசை ஆகிய விருதைகளையும் இப்படம் பெற்றது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு, திரை ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துக்கொண்டது. உலக சினிமாக்களை காணத் துடிக்கும் யாவரும் தவறவிடக் கூடாத படங்களில் ஒன்று ‘ரோசா’!.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles