‘தல’ அஜித்துக்கு வில்லனாகணும்!   நடிகர் ஷான் 

Wednesday, May 31, 2017

“சினிமாங்கிறது ஒரு சதுரங்க ஆட்டம். எப்போ வேணும்னாலும் யாருக்கும் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படலாம். அதையெல்லாம் நினைத்து மன அழுத்தத்துக்கு ஆளாகாமல், நிலையான ஒரு இடம் கிடைக்கிறவரைக்கும் கடுமையாக உழைக்கணும். அதுவரை எதற்கும் ஆசைப்படக்கூடாது. இப்படி எனக்கு நானே தீர்மானம் போட்டுக்கிட்டேன்..” சினிமா தந்த பாலபாடம் குறித்து மனம் திறக்கிறார் நடிகர் ஷான்.

கோலிவுட்டுக்குள் நுழைந்த வேகத்திலேயே தனக்கான தடங்களை அழுத்தமாக பதித்துக்கொண்டிருப்பவரிடம் பேசினோம். 
 
திரைப்படத்துறைக்குள் நுழைய வேண்டும் என்ற ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
 
“சினிமாவுக்குள் வரவேண்டும் என்கிற ஆசை, எனக்கு சின்ன வயசிலருந்தே இருந்தது. என்னோட சொந்த ஊர், பொள்ளாச்சி.  நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்து, முடித்துவிட்டு, ஐ.டி.துறையில் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். எங்க ஊர்ல சினிமா படப்பிடிப்புகள் நிறைய நடக்கும். நானும், ஆர்வத்தோட ஷூட்டிங் பார்ப்பேன். பிறகு, வீட்டுல வந்து , அதே மாதிரி நடிச்சு பார்ப்பேன். அந்த பயிற்சிதான் இப்போ உங்க முன்னாடி ஒரு நடிகனாக என்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. ஆரம்பத்துல 
நான் சினிமாவுல நடிக்கிறது, எங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு பிடிக்கலை. இப்போ என்னுடைய ஆசையை புரிஞ்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா அவங்களும் மாறிக்கிட்டு வர்றாங்க.மாறுதல்தானே வாழ்க்கை” நம்பிக்கையோடு மெல்லியதாக சிரிக்கிறார். 
 
சினிமாவில் முதல் ஆடிஷன் எப்படி அமைந்தது?
 
“என்னுடைய முதல் ஆடிஷன் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படத்துக்காக தான்.அந்தப் படத்துல நான் உடனே தேர்வாகிட்டேன். “என்னடா தமிழ் சினிமா இவ்ளோதானா?”ன்னு குறைச்சலா எடை போட்டுட்டேன். ஆனா, அடுத்த படம் கமிட் ஆகும் போதுதான் தெரிஞ்சுது, நாம நினைக்கிற மாதிரி தமிழ் சினிமாவில் நடிகனாகிறது அவ்வளவு சுலபமில்லைன்னு. கிட்டத்தட்ட இரண்டு வருஷத்துல, 45 ஆடிஷன் போயிருப்பேன். தமிழ் சினிமா என்னை வச்சு செஞ்சுருச்சு. அதுக்கு அப்புறம்தான் எனக்கு ‘தங்க மகன்’ திரைப்பட வாய்ப்பு கிடைச்சது. அதுல நான் எமி ஜாக்சனுக்கு பாய் ப்ரெண்டா நடிச்சேன். தொடர்ந்து ‘டோரா’ திரைப்படத்துல நயன் தாராவுக்கு வில்லனாக நடிச்சேன்.”
 
நயன்தாராவுடன் பணியாற்றிய அனுபவம்?
 
“நயன்தாரா மேடத்துடன் ஒரு சீன்லயாவது நடிக்கணும், என்று கனவு காண்கிற இளைஞர்களில் நானும் ஒருத்தன். அவங்க சோலோவாக நடித்த ‘டோரா’ திரைப்படத்துல வில்லனாக நடிக்க, எனக்கு வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுக்கு நான் இயக்குநர் தாஸ் ராமசாமி சாருக்கு தான் நன்றி சொல்லணும். நயன்தாரா ரொம்ப தலைக்கனம் உள்ள ஒரு ஆளாக இருப்பாங்கன்னு நினைச்சேன். அவங்கள நம்ம கண்டுக்கவே கூடாதுன்னு கூட முடிவெடுத்தேன். ஆனால்  நான் நினைச்சதுக்கு நேர்மாறாக அவங்க இருந்தாங்க.  
 
நான்  பத்தடி தள்ளி நின்னாலும், அவங்க பார்த்து விஷ் செய்வாங்க. அவங்களோட நேரில் பழகாமல் நானா ஒரு முடிவை எடுத்துக்கிட்டது எவ்வளவு தப்புன்னு பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன். அந்தப் படத்துல துரத்தல் காட்சிகள் நிறைய இருக்கும். எல்லாமே ரிஸ்க்கான ஷாட் தான். ஷாட் முடிஞ்சுதும், ஒவ்வொரு டேக்லயும் அவங்க  “ஆர் யூ ஓகே”ன்னு அக்கறையோடு கேட்பாங்க. அந்தளவுக்கு அவங்க கேர் எடுத்துப்பாங்க. சக நடிகர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் மதிக்க தெரிந்த நடிகை நயன்தாரா மேடம்!”
 
பாலிவுட் படத்தில் நடிப்பது குறித்து?
 
“இயக்குநர் சஜோ சுந்தர் ‘டோரா’ திரைப்படத்தை பார்த்துட்டு, எங்க டீம்ல என்னைப் பற்றி விசாரிச்சிருக்காரு. என் முகச்சாயலை பார்த்துட்டு, நான் வடநாட்டை சேர்ந்தவன்னு நினைச்சிருக்காரு. ஆனால் நான் தமிழ் பையன்னு தெரிஞ்சதும், அவருக்கு, இரட்டிப்பு சந்தோஷம். ஏன்னா, இந்தப் படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகள்ல படமாக்குறாங்க. இந்தப் படத்துல நான் போலீஸ் கதாபாத்திரத்துல நடிச்சிட்டு இருக்கேன்.”
 
நடிக்க வருபவர்களுக்கு நீங்கள் தரும் ஆலோசனை?
 

“ஆலோசனை கொடுக்குற அளவுக்கு நான் இன்னும் வளரலங்க. (சொல்லிவிட்டு சிரிக்கிறார்). ஆனால் ஒண்ணு மட்டும் சொல்றேன், சினிமாதான்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா, உங்களோட இரண்டு கால்களையும் நீங்க சினிமாவுல மட்டும்தான் வைக்கணும். அதோட, ஜெயிக்கிறவரைக்கும், நீங்க போராடித்தான் ஆகவேண்டும் என்பதையும் நினைவில் வைச்சிருங்க”
 
திரையில் உங்களை பார்த்துவிட்டு பெற்றோர்கள் என்ன சொன்னார்கள்?
 

“என் அப்பாவுக்கு என்னோட நடிப்பு பிடித்துவிட்டது.  ஆனால், இதுவரைக்கும் நான் நடித்த, எந்த ஒரு திரைப்படத்தையும் எங்க அம்மா பார்க்கவே இல்லை. அவங்க டி.வி. கூட பார்க்க மாட்டாங்க. எனக்கு, தெரிஞ்சு எல்லா பொருள்களும் எங்க வீட்ல மாறிடுச்சு. ஆனால், டி.வி. மட்டும் மாறவேயில்லை. நான், நடிச்ச, ஒரு படத்தையாவது எங்க அம்மா பார்க்கணும். அப்படியொரு படம் நடிக்கணும்ங்கிறதுதான் என்னோட ஆசையே!”   
 
படப்பிடிப்பு இல்லாதபோது என்ன செய்வீர்கள்?
 
“ நான் என் நண்பர்களோட, சேர்ந்து கால் டாக்சி பிசினஸ் ஆரம்பிச்சேன். இப்போ ஆறு மாசத்துக்கு முன்னாடி நானே, தனியா கார்கள் வாங்கி போட்டு, ஓட்டிட்டு இருக்கேன். ஷூட்டிங் இல்லாத பொழுதோ அல்லது டிரைவர்கள் வராத பொழுதோ, நானே டாக்சி ஓட்டிட்டு போய்டுவேன். சென்னை சிட்டி டிராபிக்ல கார் ஓட்டுறது, அதோட, புதுப்புது கஸ்டமர்கள் கிட்டே பேசிட்டு கார் ஓட்டுறது எனக்கு ரொம்ப பிடித்த விஷயம்!”
 
உங்களுடைய ரோல்மாடல் யார்?
 
“கமல் சார் ஆக்டிங் தான் என்னை பாதிச்சது. திரைப்படங்கள்ல, எனக்கு 
வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறதுதான் ரொம்ப இஷ்டம்!”
 
உங்களுடைய கனவு பாத்திரம் எது?
 
“ தல அஜீத்க்கு வில்லனாக நடிப்பதுதான்” உறுதியான பதில் அவரிடம் இருந்து வருகிறது. நம்பிக்கையே வாழ்க்கை!
 
- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles