யுவனிடமிருந்து பெஸ்ட் கிடைக்கும்! இயக்குநர் தரணிதரன்

Friday, July 14, 2017

“ஒரு படத்துக்கு போகலாமா வேண்டாமான்னு முடிவு செய்யுறதுல படத்தோட தலைப்புக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால என்னுடைய படங்களுக்கு டைட்டில் வைக்கும்போது கவனமாக இருப்பேன். எனக்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதா சாரோட எழுத்துக்களை ரொம்ப பிடிக்கும். அதேபோல அவரோட புனைபெயர் ரங்குஸ்கி மேல எப்போதும் ஒரு ஈர்ப்பு உண்டு. என்னோட கதையில ஒரு ரிப்போர்ட்டர் கேரக்டர் இருந்துச்சு. அந்தப் பாத்திரத்துக்கு அவரோட புனைபெயரையே வைச்சிட்டேன். போலீஸ் கேரக்டருக்கு ராஜான்னு பேரு வைச்சேன்.

இரண்டையும் சேர்த்து உருவானதுதான் ‘ராஜா ரங்குஸ்கி’” -  ஓப்பனிங்கிலேயே டைட்டில் புராணம் பற்றி பேசினார் இயக்குநர் தரணிதரன். ‘பர்மா’, ‘ஜாக்சன் துரை’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறார்!. முதன்முறையாக யுவனுடன் கைகோர்த்துள்ளது பற்றி ‘மனம்’ இதழுக்கு அவர் அளித்துள்ள பிரத்யேக நேர்காணல் இது!

“நான்கு மாதங்களுக்குள்ளே ஒரு படத்தை முடிக்கணும்னு எழுதப்பட்டதுதான் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்தப் படத்துல இரண்டு விஷயங்கள் புதுசு. ஒண்ணு ஹீரோ சிரிஷ். மற்றொன்று இசையமைப்பாளர் யுவன். இந்தக் கதைக்கு நிச்சயமாக ஒரு பெரிய ஆர்ட்டிஸ்ட்டை போட முடியாது. கால்ஷீட் பிரச்னைகள் வரும். அதனால புதுமுகமாக இருக்கணும். அதேசமயத்தில் ஓரிரு படங்களில் நடித்திருக்கணும். அப்படி தேடியபோது கிடைத்தவர்தான் மெட்ரோ சிரிஷ். அவருக்கிட்டே கதையை சொல்லத் தொடங்கும்போதே, “எனக்கு பர்மா படம் ரொம்ப பிடிக்கும். கதை கேட்கலை. எப்போ சார் ஷுட்டிங் போகலாம்”னு ஷாக் கொடுத்தார். 

அதேமாதிரி படத்துல அவருக்கு போலீஸ் வேடம் என்பதால் அதற்காக நிறைய பயிற்சிகள் எடுத்துக்கிட்டாரு. நாங்களும் அவருடைய ஸ்கின் டோன், பாடி லாங்குவேஜ் போன்ற விஷயங்களை திருத்தினோம். அதேபோல படப்பிடிப்புக்கு முன்பே, 5 டி கேமிராவை கொண்டு டெஸ்ட் ஷுட் எடுத்தோம். ஷுட்டிங்கின்போது முழு ஒத்துழைப்பு கொடுத்து, நடிச்சாரு சிரிஷ். இந்தப் படத்துக்குப் பிறகு, அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும்னு உறுதியாக சொல்லலாம்!.

‘ராஜா ரங்குஸ்கி’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம் என்பதால், அதற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என நானும், என்னுடைய படக்குழுவினரும் முடிவு செய்தோம். ஆனால், அவருக்கு வரிசையாக படங்கள் இருந்தது. நாங்க சின்ன டீம் வேற. இந்தப் படத்துக்கு வேலைப் பார்க்க அவர் ஒத்துப்பாரா என்கிற சந்தேகமும் எங்களுக்கு இருந்தது. பிறகு, அவரை சந்தித்து கதையை சொன்னேன். அவருக்கும் கதை பிடிச்சு போய், இசையமைக்க ஒத்துக்கிட்டாரு. அதன்பின்தான் அவருடன் கம்போஸிங்குக்கு உட்கார்ந்தேன். படத்துல ஒவ்வொரு பாட்டோட சூழலையும் வெவ்வேறு விதமாக உருவாக்கியிருந்தது யுவனுக்குப் பிடிச்சிருந்தது. அவரும் சந்தோஷமாக இசையமைக்க ஆரம்பித்தாரு. பாடல்கள் முடிந்ததும், பின்னணி இசைக்காக உட்கார்ந்தோம். 

நூறு படங்களுக்கு மேலே பேக்ரவுண்ட் ஸ்கோர் பண்ணியிருக்காரு யுவன். இந்தப் படத்தோட திரைக்கதை வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதால, அவருக்கு இசையமைப்பது சவாலாக இருந்தது. அதை விருப்பத்தோட ஏத்துக்கிட்டாரு. நிறைய சோதனை முயற்சிகளை இந்தப் படத்தில் யுவன் பண்ணியிருக்காரு. சின்ன சின்ன சவுண்ட்ஸ் எல்லாம் படத்துக்கு இன்புட்டா கொடுத்திருக்காரு. ஒரேயொரு சின்ன தீம். ஆனா, அது பல்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக ஒலித்துக்கொண்டே இருக்கும். இது யுவனோட ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், எல்லோருக்கும் பிடிக்கும். படம் தொடங்கியபோது, அவர் எனக்கு கொடுத்த வரவேற்புக்கும் படம் முடிந்தபோது அவர் தர்ற மரியாதையும் பிரமிக்க வைக்குது. அந்த மரியாதையை தக்க வைச்சுக்கணும்னு விரும்பறேன்!” என்றார். பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கௌதம்வாசுதேவ் மேனன் வெளியிட்டிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. அதை பூர்த்தி செய்வார் தரணிதரன் என்று நம்புவோமாக!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles