பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!

Friday, July 14, 2017

மௌண்டென்ஸ் மே டிபார்ட் 

பெண்ணைச் சுற்றியே ஆணின் வாழ்வு. உலகின் சுழற்சியும் பெண் தான். பெண்ணைச் சுற்றிதான் எத்தனை கதைகள். எத்தனை வாழ்க்கை. மாறிக்கொண்டே இருக்கும் பூமியில் மாறாமல் இருப்பது பெண்ணின் மீதான ஈர்ப்பும் காதலும் தான். வாழ்வின் அவிழ்க்க முடியாத புதிர்களில் ஒன்றாகத்தான் பெண்ணின் மனம் இருக்கிறது. அதை அறிந்துகொள்வதில் ஆண் படும் பாடு சொல்லில் மாளாது. ஆக, எப்போதும் இயக்குபவளாகவும் இயங்குபவளாகவும் பெண்ணே, இச்சமூகத்தின் முன் நிற்கிறாள். அவளின்றி இவ்வுலகில் எதுவும் அசையாது. இத்தகைய வாழ்வை தான் நமக்கு படம் பிடித்து காட்டுகிறது ‘மௌண்டென்ஸ் மே டிபார்ட் திரைப்படம்!

ஷென் டாவோ என்கிற பெண்ணின் வாழ்வில் நடக்கும் நட்பு, காதல், திருமணம், குழந்தைப்பேறு, பிரிவு, இறப்பு உள்ளிட்ட பல விஷயங்களை யதார்த்தமாக சொல்லியிருக்கும் படம். அதை மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் காட்டப்பட்டிருக்கும் விதம் அழகு. கதை 1999 ஆம் ஆண்டில் தொடங்கி 2025 ஆம் ஆண்டில் முடிகிறது. அவளுடைய இத்தகைய காலகட்டத்தில் என்னவெல்லாம் அவளைச் சுற்றி நடந்தன. அதை, அவள் எப்படியெல்லாம் எதிர்கொண்டாள்? நட்பு அவளுக்குச் சொல்லிக்கொடுத்தது என்ன? காதல், அவளை என்னவெல்லாம் செய்தது? 

இந்த உலகத்தில் உண்மையில் அவள் இறுதியாக கற்றுக்கொண்டதுதான் என்ன? இப்படியான பல கேள்விகளுக்கு டாவோவின் வாழ்க்கையில் பதில் இருக்கிறது. அதைத்தான் படம் பிடித்திருக்கிறார் இயக்குநர். அவற்றை முறையாக மூன்று காலகட்டங்களில் பிரித்திருக்கிறார். அவளுடைய காதல் பருவம். திருமணத்துக்குப் பிறகான நாட்கள். குழந்தை பிறந்து, வளர்ந்து கேள்வி கேட்கும் வயதை எட்டினால் விளையும் கேள்விகள் என கதை நகர்கிறது. 

இவற்றில் டாவோவின் காதல் பருவமே நம்மை ஈர்க்கிறது. கண்ணீர் சிந்த வைக்கிறது. ஏனெனில் அங்கே தான் வாழ்வின் சந்தோஷமான நாட்கள் இருக்கிறது. இது டாவோவுக்கு மட்டுமே நடந்திருக்குமா? என்றால், இல்லை அவளுக்கு நடந்துதான் உலகம் முழுக்க ஏறக்குறைய எல்லாப் பெண்களுக்கும் நடந்திருக்கும் என்பதை நம்மால் உணர முடிகிறது. கண்ணீர் சிந்த வைக்கிறது. அதனாலேயே இப்படம் நம் மனதில் அகலாத நிழற்படமாக தொங்குகிறது. டாவோவின் புன்னகை கண்களில் இருந்து மறைய மறுக்கிறது. ‘மௌண்டென்ஸ் மே டிபார்ட்’ படம் நமக்கு சொல்லிச் செல்லும் செய்தியும் அதுதான். இந்த உலகத்தில் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், ஒருபோதும் மாறுவதில்லை பெண்ணின் அன்பும், ப்ரியமும்!

நிலக்கரி சுரங்கம் ஒன்றின் முதலாளி ஷாங் ஜிங்ஷெங். அங்கே தொழிலாளியாக இருப்பவன் லியாங்ஸி. இவர்கள் இருவருக்கும் தோழியாக இருப்பவள் டாவோ. இந்த மூவருக்கான முக்கோண காதல் கதைதான் முதல் காலகட்டம். ஏழையாக இருந்தாலும், பணக்கார இருந்தாலும் இருவருமே டாவோவின் மீது மிகுந்த காதல் கொண்டிருக்கின்றனர். இரு மனங்களின் பிரியத்தில் தவிக்கிறாள் டாவோ. ஒன்றிருக்க இன்னொன்று வந்தால் வாழ்வில் நிம்மதி ஏது?. சுரங்க முதலாளி ஷாங்குக்கும் இதுவே நடக்கிறது. அவன் வெளிப்படையாக டாவோவிடம் சொல்லி, அவனை தவிர்க்க சொல்கிறான். 

தன்னுடைய சுரங்கத்தில் இருந்து லியாங்ஸியை வெளியே அனுப்பிவிடுகிறான். அத்துடன் அவனை கொல்லவும் திட்டமிடுகிறான். இதையெல்லாம் அறியும் டாவோ, தனக்காக அவனை விட்டுவிடும்படி கூறி, அவனுடைய திட்டத்தை முறியடிக்கிறாள். பிறகு, ஷாங்கையே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கின்றன. திருமண பத்திரிகையை எடுத்துக்கொண்டு, லியாங்ஸியின் வீட்டுக்கு போகிறாள் டாவோ. அவனோ மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, அந்த ஊரை விட்டே போக தயாராகிக்கொண்டிருக்கிறான். அவனிடம் தன் கல்யாண பத்திரிகையை நீட்டுகிறாள். அதை, பெருந் துயரத்தோடு வாங்கி பார்த்துவிட்டு, வெளியேறுகிறான். “இனி இந்த ஊருக்கு தான் திரும்பவே போவதில்லை...” என்றும் சொல்கிறான். “தன்னிடம் போய் வருகிறேன் என்று கூட சொல்ல மாட்டாயா?” என்று அழுதபடியே கேட்கிறாள் டாவோ. 

“எப்போது நீ ஷாங்கை அணைத்துக் கொண்டாயோ அப்போது சொல்லிவிட்டேனே போய் வருகிறேன் என்று...”. அந்த தெருவில் அவன் போகும் பாதையை பார்த்துக்கொண்டே கண்ணீருடன் நிற்கிறாள் டாவோ. 
“ஏழ்மை என்றால் அதிலொரு அமைதி...” என்றொரு வரி, பிரபல பாடல் ஒன்றில் வரும். காதலில் பெரும்பாலும் தோற்பது ஏழ்மை தான். காலங்கள் மாறுகிறது. 

நிலக்கிரி சுரங்கத்தில் பெரும் பணம் குவிகிறது. டாவோவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. லியாங்ஸிக்கும் குழந்தை பிறக்கிறது. அவன் மிகவும் வறுமைப் பீடித்த வாழ்வில் இருக்கிறான். சுரங்கத்தில் பல வருடங்கள் வேலைப் பார்த்ததால் அவனை ஆஸ்துமா நோய் தாக்கிவிடுகிறது. அந்த நோயை குணப்படுத்த வேண்டுமானால் வசதி படைத்த மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். அவ்வளவு பணத்துக்கு வழியில்லாததால், தன் மனைவி உடன் திரும்பி, தன் ஊருக்கே வருகிறான். வாழ்வில் விதிதான் எவ்வளவு கொடியது!. லியாங்ஸிக்கும் டாவோவுக்குமான காதலை அறிந்துகொள்ளும் அவனின் மனைவி. பிறகு, டாவோவை தேடிச் சென்று, தன் கணவரின் நிலையை சொல்கிறாள். தன் காதலனை தேடி வரும் டாவோ, “இந்த ஊருக்கு திரும்பவே மாட்டேன் என்று சொன்னாயே... பார்த்தாயா... இந்த உலகில் நான் இருக்கும்வரை நீ எங்கேயும் போய்விட முடியாது” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள். அவளின் இயல்பே அதுதான். அவளிடம் நமக்கு பிடிக்கும் அம்சமும் அதுதான். பிறகு, அவனது மருத்துவ செலவுக்கு பணம் அளித்து உதவுகிறாள் என்பதோடு இரண்டு காலகட்டங்கள் முடிவுக்கு வந்துவிடுகின்றன. 

மூன்றாவது காலகட்டம், ஏறக்குறைய வாழ்க்கையை டாவோ எவ்விதமாய் புரிந்து கொள்கிறாள். அதை தனது மகனுக்கு சொல்லி, சரியான வழியை அடையாளம் காட்டுகிறாள் என்பதோடு நிறைவு பெறுகிறது. ஏறக்குறைய 2025 ஆண்டிலும் வாழ்க்கை அவரவருக்கு உரிய முறையிலேயே இருக்கிறது. தொழில்நுட்பங்களும் சுற்றுப்புறச் சூழலில் உள்ள கட்டிடங்களும் மட்டுமே மாறுகிறது. மனித மனங்கள் எப்போதும் மாறுவதில்லை. குறிப்பாக டாவோ போன்ற பெண்ணின் மனங்கள் என்பதோடு படம் முடிவடைகிறது. இந்தப் படத்தில் ஷென் டாவோ நடித்த டாவோ சூவோவின் நடிப்பு அபாரம். வெவ்வேறு சூழல்களில் அவளுடைய முகபாவங்களை நம்மை கட்டிப்போடுபவை. இந்தப் படத்தில் நடித்தன் மூலம் டாவோ, சிறந்த நடிகைக்கான விருதையும் அள்ளினார் என்பது கூடுதல் சிறப்பு!

‘மௌண்டென்ஸ் மே டிபார்ட்’ எனும் இப்படத்தை எழுதி, இயக்கியவர் இயக்குநர் ஜியாங்கே ஜியா. 131 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் சீனா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் 2015 ஆம் ஆண்டு வெளியானது. படத்தின் வெவ்வேறு காலகட்டங்களை மிக கவித்துவமாக படம் பிடித்திருந்தார் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் நெல்சன் லிக். அதேபோன்று படத்தை பன்மடங்காக மாற்றியது இசையமைப்பாளர் யோஷிஹிரோ ஹன்னோவின் பின்னணி இசை. ஒரு படத்தில் கதையை ஒட்டி இவ்விரு அம்சங்களும் இணைவது, இயக்குநருக்கு கூடுதல் பலம். சீனாவிலும், அமெரிக்காவிலும் உள்ள தியேட்டர்களிலும் வெளியான ‘மௌண்டென்ஸ் மே டிபார்ட்’ படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டடித்தது. கான்ஸ், டோரண்ட்டோ, நியூயார்க் உலகத் திரைப்பட விழாவில் அபிஷியல் செலக்ஷன் பிரிவில் தேர்வானது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles