பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!

Friday, June 30, 2017

போர் மினிட்ஸ்!

ஒழுங்கீனத்துக்கும் ஒழுக்கத்துக்கும் இடையிலான காதலின் துயர்மிகு இசையின் ஒத்திகைதான் போர் மினிட்ஸ். ஜெர்மனி சிறைச்சாலையில் தண்டனை பெற்று வரும் இளம் பெண் ஜென்னிக்கும், அந்தச் சிறைச்சாலையில் பியானோ கற்றுத் தர வரும் வயது முதிர்ந்த பியானோ டீச்சர் மிஸ் கிரியூகருக்கும் இடையிலான சம்பவங்களின் தொகுப்பு தான். ஆனால், கதை சொல்லப்பட்ட விதமும் காட்சிப்படுத்தப்பட்ட விதமும் தான் நம்மை தியேட்டர் இருக்கையிலேயே கட்டிப்போட்டு விடுகின்றன. 
 
 

சிறைச்சாலையில் மிஸ் கிரியூகர் தேர்ந்தெடுத்த நான்கு பேரில் ஒருவருக்கு மட்டுமே பியானோ வாசிக்கும் தாகம் இருப்பதை அறிகிறார். அது ஜென்னி தான். வாழ்வில் இருண்ட பக்கங்களை கொண்ட அவள், எந்த சட்டத் திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் விதிகளுக்கும் வரையறைக்குள்ளும் அடங்காதவள். அவளை எப்படி அடக்கி, இசையை கற்றுக்கொடுத்து, இந்த உலகில் அவளுக்கான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தார் கிரியூகர் என்பதுதான் சுவாரஸ்யம் குன்றாத திரைக்கதை. 
 
ஆரம்பத்தில் சிறைக்குள் அடங்காத கிடாரியாக திரியும் ஜென்னி, பின் கிரியூகரின் அர்ப்பணிப்பின் முன் அடங்கிப் போகிறாள். தான் பியானோ கற்க விரும்புவதாக தெரிவிக்கிறாள். அப்போது, ஐந்து கட்டளைகளை ஜென்னி  ஏற்க வேண்டும் என்று கிரியூகர் கட்டளை இடுகிறாள். முதலாவதாக பணிவு. இரண்டாவது அவள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது,  அவள் துர்நாற்றமின்றி சுத்தமாக இருக்க வேண்டும். நான்காவது 21 வயதுக்கு குறைவானவர்களுக்கான பியானோ வாசிக்கும் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும். ஐந்தாவது இவையெல்லாம் அவளுக்காகத்தான் தான் செய்கிறேன் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்!. ஒப்பந்தத்தை ஜென்னி ஏற்கிறாள். 
 
சில கட்டுப்பாடுகளுடன் சிறை நிர்வாகம் கிரியூகர், ஜென்னிக்கு பியானோ கற்றுத் தர அனுமதி அளிக்கிறது. மிகக் குறுகிய காலமே அவருக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு இடையில் முரட்டுக்காரியான ஜென்னிக்கும் சிறைக் காவலர் ஒருவருக்கும் இடையே பயங்கர சண்டை நடக்கிறது. இதனால் அவள் பியானோ பயிற்சி தடைபடுகிறது. இப்படியான சூழலில், சிறைச்சாலைக்கு வரும் அதிகாரிகள் “கெடு முடிந்துவிட்டது” என்று பியானோ டீச்சரிடம் கூறுகிறார்கள். அவள் அவர்களிடம் அவகாசம் கேட்டு கெஞ்சுகிறாள். 
 
இந்நிலையில், அதிகாரிகள் முன் ஜென்னி, தன் கைகளை விலங்கிட சொல்கிறாள். ஜெயிலர் அவளது கைகளுக்கு விலங்கிட்ட உடன் பியானோ முன்னால் செல்லும் அவள், திரும்பி அதன் கட்டைகளின் மீது தன் துயரம் படிந்த கைகளினால் இசைக்கத் தொடங்குகிறாள். கண்ணீர் ததும்பும் இசை அங்கே வழிந்தோடுகிறது. அவற்றை அதிகாரி உடன் வரும் புகைப்படக் கலைஞர் வெவ்வேறு கோணங்களில் படம்பிடிக்கிறார். அவர்கள் சென்றவுடன், அறையில் தனித்து இருக்கும் ஜென்னியை அறைகிறார் மிஸ் கிரியூகர். ஏனெனில், அது ஜெர்மனியில் தடைசெய்யப்பட்டிருந்த நீக்ரோ இசை. அதை இனி அவள் வாசிக்கக் கூடாது என்கிறாள். பிறகு, ஜென்னியின் கைகளில் இருக்கும் காயங்களுக்கு மருந்திடுகிறாள். முதல்முறையாக இந்தப் பூமியில் தன்னை நேசிக்கவும் ஒரு ஜீவன் உண்டு என்பதை காண்கிறாள் ஜென்னி. அவள் கண்களில் ப்ரியம் கசிகிறது. 
 
சிறைச்சாலையில் தனக்கான உணவு மேசையின் மீது பியானோவின் கட்டைகளை வரைந்து பயிற்சி எடுக்கிறாள் ஜென்னி. அதேபோல, தன்னுடைய கைகளுக்கு மருந்திடவும் செய்கிறாள். நள்ளிரவிலும் அவளின் பியானோ பயிற்சி நிற்பதில்லை. அந்த சிறைச்சாலை அவளின் இசையால் மெல்ல அமைதியாகத் தொடங்குகிறது. ஜென்னி இசைக்கத் தொடங்கினால் பியானோ டீச்சர் தனது கடந்த கால வாழ்வுக்குள் மூழ்கி விடுகிறாள். அவளின் பருவத்தின் தோழியின் நினைவுகள் அவளை சதா அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன.
 
ஒரு நள்ளிரவில் ஜென்னி, தன் தூசுப்படிந்த வாழ்வின் கதையை சொல்லத் தொடங்குகிறாள். மருத்துவமனையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், தான் கண் விழித்தபோது, அந்தக் குழந்தை இறந்துவிட்டது என்று செவிலியர்கள் சொன்னதையும் அழுதுகொண்டே விவரிக்கிறாள். அந்தக் குழந்தைக்கு ஆஸ்கர் என்ற அழகான பெயர் உண்டு என்கிறாள். அடுத்த மூன்றாவது மணி நேரம், தான் சிறைச்சாலைக்குள் வந்துவிட்டதாக சொல்லி, முடிக்கிறாள். அவளின் கண்ணீரிலிருந்து பிறவற்றை நம்மால் யூகிக்க முடிகிறது. 
 
சிறைச்சாலைக்குள் ஜென்னிக்கு தொந்தரவு தர பல மிருகங்கள் உண்டு. அவர்கள் யாவரும் கடந்த காலங்களில் அவளால் பாதிக்கப்பட்டவர்கள் தான். அவள் தன்னுடைய இயல்புக்கு திரும்ப முயலும்போது எல்லாவற்றுக்குமான எதிர்வினை திரும்புகிறது. அவளிடம் உதை வாங்கிய சிறைக் காவலர் தொடங்கி, உடனிருக்கும் கைதிகள் வரை, அவளின் பியானோ இசைப் பயிற்சிக்கு இடையூறாக இருக்கிறார்கள். ஆனாலும் அதையெல்லாம் எதிர்கொண்டு பியானோ இசைப்பதில் ஜென்னி, கை தேர்ந்தவளாகி விடுகிறாள்!
 
கடந்த காலத்தின் பசுமையான நினைவுகள் எப்போதும் நம்மை உறங்க விடாமல் செய்பவை. மிஸ் கிரியூகர் வாழ்விலும் அதுவே நடக்கிறது. பியானோவில் இருந்து புறப்படும் இசையானது அவளை மேலும் இம்சிக்கிறது. போருக்கு நடுவே திரும்பிய பக்கமெல்லாம் அழுகைகள், அவலங்கள். இச்சுழலில் ஜென்னியின் தந்தை மிஸ் கிரியூகரை வந்து சந்திக்கிறார். அவளின் கடந்த காலத்தைப் பற்றிய கதைகளை அவளிடம் சொல்லிவிட்டு செல்லுகிறார். பிறகு, ஜென்னி பியானோ போட்டியில் பங்கேற்பதற்கான நேரம் வருகிறது. அதற்கு பரபரப்பாக தயாராகிறார் மிஸ் கிரியூகர். 
 
போட்டியில் பங்கேற்பதற்கு முன்னதாக தன்னுடைய  வீட்டிற்கு ஜென்னியை அழைத்து வருகிறார். அங்கே ஜென்னிக்கு மற்றொரு உண்மை தெரிய வருகிறது. அது தன் தந்தை அங்கே வந்து சென்றிருப்பதுதான்.  இதனால் கோபத்தின் உச்சிக்கு செல்லும் ஜென்னி, கண்முன்னால் கிடைத்த பொருளை எல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கிறாள். பியானோ டீச்சரிடம் முரண்பட்டு வெளியேறுகிறாள். அப்போது, “வெளியே போகாதே நீ ஒரு சிறிய எலி...” என்று சொல்லும் மிஸ் கிரியூகர் முகத்தில் பலமான குத்து ஒன்று விழுகிறது. அது ஜென்னியே தான். அவளுடைய இயல்பு அதுவே. ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டேயிருக்கும் மனநிலை. 
    
சில தடைகளுக்குப் பிறகு போட்டியில் பங்கேற்க தயாராகிறாள். இந்நிலையில் ஜென்னியின் கடந்த கால சிறைச்சாலை கொடூரங்கள் தூசி தட்டப்பட்டு, அவள் மீண்டும் கைது செய்வதற்கான தீவிரத்தில் பியானோ இசை அரங்கை போலீஸ் சுற்றி வளைக்கிறது. போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நான்கு நிமிடங்கள் மட்டுமாவது அவகாசம் தருமாறு மன்றாடுகிறாள் மிஸ் கிரியூகர். அதுவே படத்தின் தலைப்பாகவும் நமக்கு சொல்லப்படுகிறது. அந்த நான்கு நிமிடங்களே படத்தின் இறுதிக் காட்சிகள். அது ஜென்னியின் துயர்மிகு இசையே!
 
போட்டியாளர் ஜென்னியின் பெயரை அறிவிக்கிறார். மிகவும் அலட்சியமான நடையுடன் வரும் அவள், பியானோ முன் அமர்ந்து பின் நின்று ஆக்ரோஷமும் அமைதியும் கொண்ட மனநிலையில் இசைக் கோர்வை ஒன்றை வாசிக்கிறாள். ஒட்டுமொத்த அரங்கமும் அவளின் இசையின் முன் கட்டுண்டு கிடக்கிறது. அந்த இசையை கேட்கும் கிரியூகரின் மனநிலை பதற்றமடைகிறது. தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள அவள் மது அருந்துகிறாள். பிறகு கையில் ஒரு மதுக்கோப்பை உடன் மிஸ் கிரியூகர் ஜென்னி இசைப்பதைப்  பார்க்கிறாள். அவள் வாசித்து முடித்ததும் ஒரு கணம் திகைத்து அமர்ந்திருக்கும் இசை ஆர்வலர்கள் பின் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, அவளின் இசைக்கு மரியாதை செய்கின்றனர். 
 
அப்போது ஜென்னியைப் பார்த்து ஒரு ப்ளையிங் கிஸ் ஒன்றை மறைமுகமாக தந்தவாறு, விழிகளில் தேங்கி நிற்கும் கண்களோடு பார்க்கிறாள் மிஸ் கிரியூகர். ஜென்னியும் ப்ரியத்தின் கண்களால் அவளை அணைத்துக்கொள்கிறாள். தன் பியானோ டீச்சர் சொன்ன பணிவு அவள் ஞாபகத்துக்கு வருகிறது. ஆயிரக்கணக்கான இசை உள்ளங்கள் எழுந்து நின்று கரவொலி எழுப்ப, ஜென்னி தனது ஆசிரியைக்கும் ரசிகர்களுக்கும் முதல்முறையாக தலைவணங்குகிறாள். 
அப்படியாக அவள் ஒழுக்கத்தின் பாதைக்குள் வரும்போது இருகைகளும் காவலர்களால் விலங்கிடப்படுகின்றன என்பதோடு படம் நிறைவடைகிறது நம் கண்களை ஈரமாக்கியபடியே. 
 
இசையின் பக்கம் தலைவைத்து படுக்கும் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் ‘போர் மினிட்ஸ்’ படத்துக்கு முதலிடம் அளிக்கலாம். 
 
உண்மை சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட கதை தான் ‘போர் மினிட்ஸ்’ திரைப்படம். ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லரின் நாஜிப் படையில் செவிலியராக பணியாற்றிய மிஸ் கிரியூகர் (1917- 2004) என்பவரின் சுயசரிதைதான். இளம் வயதில் மிஸ் கிரியூகர் பியானோ கற்றுக் கொள்கிறார். பியானோ கற்றுத் தந்த அவரின் வயதையொத்த நாடியா நெருக்கமான தோழியாகிறார். இருவரும் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்தவள் நாடியா என்பதை நாஜிப் படைகள் கண்டுபிடித்து, அவரை பாதாள அறையில் வைத்து தூக்கிலிட்டு கொன்றுவிடுகின்றனர். அதற்கு முன்பாக மிஸ் கிரியூகரிடம் விசாரணை நடக்கிறது. யுத்தத்துக்கு இடையில் இவை யாவும் நடக்கின்றன. 
 
இரண்டாம் உலகப்போரில் (1939 - 1945) ஜெர்மனியின் மற்றொரு முகமும் இப்படத்தில் கிரியூகர் வழியே காட்டப்படுகிறது. இறுதிக்காட்சியில் ஜென்னிக்கும் அவருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அப்போது “நீ ஒரு லெஸ்பியன். அதனால்தான் என்னை உன் வீட்டிலேயே அடைத்து வைத்திருக்க விரும்புகிறாய்..” என்று கூறி, ஜென்னி கதவை உடைத்துக்கொண்டு வெளியேறுகிறாள். பின் மனம் மாறி திரும்பி வரும்போது, மிஸ் கிரியூகர் அவளுக்கு தன் வாழ்வை விளக்குகிறாள். இப்போதும் கூட தான் இறந்துபோன தன்னுடைய தோழி நாடியாவை விரும்புவதாகவும், அவளுக்குப் பின் வேறொரு வாழ்க்கை தனக்கு இல்லை என்றும் கூறுகிறார். இசையின் மீதான தன்னுடைய காதலே, ஜென்னியை ஒரு பியானிஸ்ட் ஆக்க வேண்டும் என்று தோன்றியதையும் சொல்கிறாள். “கற்றுக்கொள்ள சீடன் தயாராகும் போது குரு முன்னால் தோன்றிவிடுவார்” என்கிற புகழ்பெற்ற வாக்கியம் நம் கண்முன் விரியத் தொடங்குகிறது!
 
கிரியூகருக்கும் நாடியாவுக்கும் இடையிலான காதல் காட்சிகள் மிகக் குறைவான விநாடிகளே வந்தாலும், அவை தரும் பாதிப்புகள் அதிகமானவை. சொற்ப நிமிடங்களே என்றாலும் இருவருக்குமான ப்ரியங்கள் எப்போதும் நம்மை பின்தொடர்ந்து கொண்டே இருக்கும். சக பாலினத்தின் மீது இவ்வளவு அன்பும், பிணைப்பும் உள்ள ஒரு பாத்திரப் படைப்பை இதற்கு முன்னதாக வலிமையாக யாரேனும் திரையில் சொல்லியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை!
 
படத்தில் பியானோ டீச்சராக மிஸ் கிரியூகர் பாத்திரத்தில் நடித்திருந்த மோனிகாவும், சிறைச்சாலைக்குள் இருந்து பியானோ கற்றுக் கொள்ளும் மாணவி ஜென்னி பாத்திரத்தில் நடித்திருந்த ஹென்னாவின் நடிப்பும் மெய்சிலிர்க்க வைக்கும். சினிமா பார்க்கும் உணர்வின்றி, கதைக்குள் நம்மை அழைத்துச்சென்றுவிடும் வல்லமை பெற்ற பாத்திரங்கள் இவை.  காட்சிகளின் உயிரோட்டத்துக்கு பின்னணி இசை பெரிய பலம். கதை இசை சார்ந்ததுதான் என்றாலும், சூழலுக்கேற்ற அதிரடியான அமைதியான இசைக் கோர்வைகளின் மூலம் நம்மை திணறடிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் அன்னாட் பாக்ஸ். 
 
ஜெர்மனியில் 2006 ஆல் வெளியான இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியவர் கிரிஸ் க்ரவுஸ். ஏறக்குறைய இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் ஜெர்மன் மொழியில் வெளியானது. சிறந்த நடிகை, அறிமுக நடிகை (ஹென்னா), படம், திரைக்கதை, செட் டிசைன் என விருதுகளை வெளியான ஆண்டிலேயே விருதுகளை வாங்கிக் குவித்தது.  
வாழ்க்கையின் அவிழ்க்க முடியாத புதிர்களின் பக்கங்களே ‘போர் மினிட்ஸ்!’.
 
 - கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles