பிரம்ம ரகசியம்!   இயக்குநர் விஜயகுமார்

Friday, June 30, 2017

தமிழ் சினிமாவில் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால் அந்தப் படம் தாறுமாறான வெற்றிதான். அப்படியான நம்பிக்கை அளிக்கிறார்கள் ‘பிரம்மா. காம்’ படத்தின் இயக்குநர் விஜயகுமாரும், ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பாதியும். கதை எழுதிய வேகத்திலேயே தனக்கு தயாரிப்பாளர் கிடைத்த ரகசியத்தை விஜய், முதன்முறையாக மனம் இதழில் பகிர்ந்துகொள்கிறார்!
 
 

“ ‘பிரம்மா. காம்’ படத்தை ஆரம்பித்த போது ஒன்றை மட்டும்தான் மனதில் வைத்திருந்தேன். நாம எந்தளவிற்கு புத்திசாலின்னு தெரியாது. ஆனா, நம்ம கூட வைத்திருப்பவர்களை புத்திசாலியாக வைத்திருந்தால் தப்பிச்சுடலாம்னு நினைத்தேன்.  அதனால் திரைக்கதை எழுதிய உடனேயே நான் பண்ணிய முதல் வேலை எனக்கான குழுவை உருவாக்கியது தான். 
 
பொதுவாக, எனக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை உண்டு. நம்முடைய புராணங்களில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் முதல் இருவரைப் பற்றிய நிறைய கதைகளை கேட்டு, வளர்ந்திருக்கிறோம். ஆனால், மூன்றாவதாக உள்ள பிரம்மாவைப் பற்றிய கதைகள் ரொம்ப குறைவுதான். அதனால, அவரையே மையமாக வைத்து, ஒரு கதையை எழுதினேன். இன்றைக்கு நம்முடைய வாழ்க்கையில எந்தத் தவறை செய்துகிட்டு இருக்கிறோம், உண்மையிலேயே நாம பிராக்டிக்கலா எப்படி இருக்கணும் என்பதைத்தான் படத்தில் கொஞ்சம் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறேன். 
 
இந்தக் கதையை எழுதி, முடித்த உடன் எனக்கு இரண்டு விஷயங்கள் தேவைப்பட்டது. ஒன்று டீம். மற்றொன்று வெரிகுட் புரொடியூசர்.  என்னுடைய தாத்தா, சேலத்தில் இருந்த மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைப் பார்த்தவர். அதனால் எனக்கும் சேலத்துக்கும் சம்பந்தம் உண்டு. அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர் கணேஷ் கார்த்தி சேலத்தை சேர்ந்தவர்தான். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம், இதுவரை அவர் படத்தின் கதையையே கேட்கவில்லை என்பதுதான்!. (சொல்லிவிட்டு சிரிக்கிறார்)
 
இந்தக் கதைக்கு என்ன மாதிரியான ஆர்ட்டிஸ்ட் டெக்னீஷியன்கள் தேவையோ, அதை தேர்ந்தெடுக்க எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தாரு. அப்படிதான் ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பாதி, நடிகர் நகுல் எல்லாம் உள்ளே வந்தாங்க. படப்பிடிப்பும், போஸ்ட் புரொடக்ஷனும் வேகமா முடிஞ்சு, இப்போ டீசர் வெளியாகி இருக்கு. இது எல்லாம் நடக்கிறதுக்கு காரணம், மேலே இருக்கிற பிரம்மா தான்னு நினைக்கிறேன். அவருக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் ” என்று மேலே பார்த்து கும்பிடுபோட்டவரைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் தீபக்குமார் பாதி படம் குறித்து பேசினார்.
 
“ஒரு நாள் இரவு நடிகர் நகுல் போன் பண்ணி, “ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. கேளுங்க...”ன்னு சொன்னார். அப்படிதான் விஜய்யை காபி ஷாப் ஒன்றில் மீட் பண்ணினேன். முதல் சந்திப்பிலேயே எனக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் கிடைத்துவிட்டது. கதை கேட்டேன். சுவாரஸ்யமாக இருந்தது. அதற்கு இடையில் அவருக்கு நிறைய போன் கால்கள் வந்துகிட்டே இருந்துச்சு. செம கடுப்பாயிட்டேன். “பாஸ்.. கதையை முழுசா சொல்லிடுங்க. என்னால சப்ரைஸ் தாங்க முடியலை..”ன்னு சொன்னேன். பிறகு, அவர் கதை சொல்லி, முடித்ததும் “எப்போ ஷுட்?”னு கேட்டேன். “அடுத்த வாரமே கிளம்புறோம். நாளைக்கே புரொடியூசரை மீட் பண்றீங்க”ன்னு அடுத்த ஷாக் கொடுத்தார். சொன்ன மாதிரியே அடுத்த வாரம் படப்பிடிப்பில் இருந்தோம். அதே ஸ்பீடை ஷுட்டிங் ஸ்பாட்டுலேயும் காட்டினார். இப்படியொரு வேகத்தை நான் இயக்குநரிடம் எதிர்ப்பார்க்கவே இல்லை!.” என்று நமக்கு சர்பிரைஸ் ஷாக் வைத்தார். “பிரம்மா.காம்” படத்தின் டீசர் வெளியான வேகத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படமும் கல்லா கட்ட வாழ்த்துவோமாக!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles