சினிமாவில் எப்போதும் இயக்குநர்தான் அல்டிமேட்! ஒளிப்பதிவாளர் ஈஸ்வரன் தங்கவேல்

Tuesday, January 31, 2017

இந்தியாவில் பல்வேறு மொழிகளில் சினிமாக்கள் வெளியாகின்றன. அவற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கிறது. குறிப்பாக, ஒளிப்பதிவுத்துறையில் அதிகம் கோலோச்சுவது தமிழகத்தைச் சேர்ந்த கேமிராமேன்களே. பி.சி.ஸ்ரீராம், ரவி கே.சந்திரன், திரு, ரவிவர்மன், கே.வி.ஆனந்த், மணிகண்டன், நட்ராஜ் என அந்தப் பட்டியல் நீளமானது.

அந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் ஈஸ்வரன் தங்கவேல். 'கேரள பாரடைஸோ' என்கிற படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை, ஜெய்ப்பூர் உலகத் திரைப்பட விழாவில் வென்று வந்திருக்கும் தமிழர். 

அவரிடம் உரையாடியபோது...!

 

போட்டோகிராபியில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

"சென்னை டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியில் பி.எஸ்.சி. விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அந்தப்பிரிவில் நிறைய இருந்தாலும், எனக்கு போட்டோகிராபிதான் பிடித்திருந்தது. கல்லூரியில் இருந்த நிக்கான் எப்.எம்.டென் கேமிராவில் நிறைய புகைப்படங்கள் எடுத்தேன். அதை பிரிண்ட் செய்து பார்த்தபோது, ஏதோ ஒன்று மிஸ்ஸான மாதிரி இருந்தது. அதன்பிறகே, டெலி, வைட் ஆன்கிள், நார்மல், பிளாக் லென்ஸ் என ஒவ்வொன்றுக்கும் மாறுபட்ட லென்ஸ்களை பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்தது. அதுமட்டுமின்றி,  யு.கே.வில் இருந்து வெளியான 'பிராக்டிகல் போட்டோகிராபி' என்கிற இதழையும் தொடர்ந்து வாசித்தேன். அதில் நிறைய டெக்னிக்கல் டீடெய்ல்ஸ் இருக்கும். இந்த அறிவோடு புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். அந்தப் படங்களை எல்லாம் பார்த்துவிட்டு, என்னுடைய மாஸ்டர் நல்லுசாமி சார் ('அவள் அப்படித்தான்' படத்தின் கேமிராமேன்) பாராட்டினார். முதல் பாராட்டு அவரிடம் இருந்துதான் வந்தது. பிறகு போட்டோகிராபி போட்டிகளிலும் பங்கேற்றேன்!" 

 

சினிமாவில் ஒளிப்பதிவை நோக்கிய உங்களுடைய பயணம் குறித்து சொல்லுங்களேன்?

"புகைப்படக்கலையின் நீட்சிதான் சினிமாட்டோகிராபி. அந்த தொழில்நுட்பத்தை புனே மற்றும் சென்னையில் உள்ள பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் மட்டுமே கற்க முடியும் என்று தெரிந்தது. பிறகு, சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் ஒளிப்பதிவு பிரிவில் சேர்ந்தேன். அங்குதான் நிறைய கற்றுக்கொண்டேன். உலகத் திரைப்பட விழாக்களில் பங்கேற்றேன். இறுதியாண்டில் நாங்கள் எடுக்க வேண்டிய குறும்படத்தின் மூலமாக, சினிமா அரசியலையும் கற்றுக்கொண்டேன். சினிமாவில் எப்போதும்  இயக்குநர்கள்தான் அல்டிமேட். அவர்கள் உருவாக்கும் கதைகளின் விஷுவலுக்கு துணை நிற்பதே ஒரு ஒளிப்பதிவாளரின் பணி என்பதை, இப்போது நன்கு புரிந்துகொண்டிருக்கிறேன்!"

 

பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் சினிமாட்டோகிராபி முடித்துவிட்டு, யாரிடம் உதவியாளராகச் சேர்ந்தீர்கள்?

"திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போதே ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அவருடைய லைட்டிங் சென்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும். சினிமாட்டோகிராபி முடித்தவுடன், சில முயற்சிகளுக்குப் பிறகு சந்தோஷ் சிவன் ஸாரிடம் உதவியாளராகச் சேர 'ராவணன்' படத்தில் வாய்ப்பு  கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்பில் இயக்குநர் மணிரத்னம் சாரை பார்க்கும்போதே பிரமிப்பாக இருந்தது. 

மாணவனாக இருந்து ஒரு உதவி ஒளிப்பதிவாளராக மாறிய அந்த தருணம் மறக்க முடியாதது!

சந்தோஷ் சிவன் ஸாரோட ஸ்பெஷாலிட்டியே சினிமாட்டோகிராபி மட்டுமில்லாமல், மற்ற வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வது தான். அது எனக்கு மேலும் பல விஷயங்களை அறிந்துகொள்ள உதவியது. அவரிடம் இருந்து, வாழ்க்கையை எப்படி அணுக வேண்டும் என்கிற புரிதலையும் கற்றுக்கொண்டேன். அதன்பிறகு, 'அலெக்ஸ் பாண்டியன்' படத்தில் ஒளிப்பதிவாளர் சரவணன் ஸாரிடமும் வேலை பார்த்தேன். 'மூடர் கூடம்', 'சதுரங்க வேட்டை', 'தேசிங்குராஜா', 'வெள்ளைக்காரதுரை' உள்ளிட்ட படங்களில் என்னுடைய சீனியர்கள் தான் கேமிராமேன்களாக பணியாற்றினர். அவர்களுடன் சேர்ந்து அசோஸியேட் கேமிராமேனாக பணியாற்றினேன்!"

 

சினிமாவில் முதல் பட வாய்ப்பு?

"ஒரு கட்டத்தில் தனியாக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன்; அந்த தேடலில் எனக்குக் கிடைத்த முதல் படம் 'ரயில்வே சில்ரன்'. இது ஒரு கனடா படம். வீட்டைவிட்டு ஓடிவந்த பிள்ளைகள் திருட்டு ரயிலேறி, வேறொரு இடத்தில் வந்து இறங்கி, அங்கே தங்களுடைய வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. அதனால், ஒரு ஒளிப்பதிவாளராக அந்தப் படத்தில் எனக்கு நிறைய சவால்கள் இருந்தன. ரயில்வே நிலையம், சுரங்கப்பாதைகள், விளிம்புநிலை மனிதர்கள் வாழும் இடங்கள் என பல்வேறு இடங்களில் படம்பிடித்தேன். கதையை ஒட்டியே இருக்கும்படியான வர்ணங்களைத் தேர்ந்தெடுத்தேன். கதையின் இறுதி சந்தோஷமாக முடியுமாறு இருக்கும். அதனால், அதற்கேற்ற மாதிரி கிரேடிங் பண்ணும்போது சில திருத்தங்களைச் செய்தேன். படத்தின் இயக்குநர் பிருத்வி கொன்னூருக்கு அது பிடிக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், படத்தைப் பார்த்துவிட்டு "சரியாகத்தான் செஞ்சிருக்கீங்க..." என்றார் அவர். அதுவே பெரிய பாராட்டாக இருந்தது. மும்பை உலகத் திரைப்பட விழாவில் அந்தப் படம் பங்கேற்று, பாராட்டுக்களையும் பெற்றது!"

 

உண்மையில் பிலிமோட எல்லா சாத்தியங்களையும் டிஜிட்டல் கொண்டுவந்துவிட்டதா?

"பிலிம் இன்ஸ்டியூட்டில் படிக்கும்போதுதான் இந்த மாற்றங்கள் எல்லாம் நிகழ ஆரம்பித்தது. பொதுவாக பிலிமில் ஷுட் பண்ணி, அதை பிராஸஸிங் செய்து, அனலைஸரில் கிரேட் பண்ணியபிறகு ஸ்கீரினில் பார்க்கும்போது கிடைக்கும் சந்தோஷம் அலாதியானது. அது டிஜிட்டலால் மிஸ்ஸாகிவிட்டதாக நினைக்கிறேன்!" 

 

'கேரள பாரடைஸோ' படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவாளர் விருது கிடைத்தது பற்றி..?

"இது என்னுடைய இரண்டாவது படம். படத்தை பிஜோய் லோனா இயக்கியிருக்கார். இருவரும் சேர்ந்து, ஏற்கனவே 'மிராக்கிள் பேபிஸ்' என்கிற குறும்படத்தையும் எடுத்திருக்கோம். அந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அவருடைய இன்டிபென்ட் பிலிம் மேக்கிங்குக்காக உருவானதுதான் 'கேரள பாரடைஸோ'. 77 நிமிடங்களுக்கான படத்தை 11 நாட்களில் எடுத்து முடித்தோம். 

கேரளாவில் உள்ள கிராமம் ஒன்றில் இடிக்கப்பட உள்ள தியேட்டரை காப்பாற்றப் போராடும் 5 இளைஞர்களின் கதைதான் 'கேரள பாரடைஸோ'. எப்போதும் கலை தனக்கானவர்களைத் தானே தேடிக்கொள்ளும் என்பதும், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதையும் இப்படம் வலியுறுத்தும். இந்தப் படம் ஜெய்ப்பூர் உலகத் திரைப்பட விழாவில் பங்கேற்று, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதைப் பெற்றது.  இந்த நேரத்தில் இயக்குநருக்கும் விழாக் குழுவினருக்கும் நன்றி சொல்வதில் பெருமைப்படுகிறேன்!"

முரட்டுக்குதிரையின் மீதேறி அதனை தன் இலக்கு நோக்கிச் செலுத்தும் லாவகம் ஈஸ்வரன் தங்கவேலுவிடம் தெரிகிறது. அவரது பயணம் சிறப்பாகத் தொடர வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெற்றோம்..

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles