ராதிகா சரத்குமார் தயாரிப்பில் விஜய் ஆண்டனி!

Monday, January 2, 2017

'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து 'சைத்தான்' படமும் தியேட்டரில் நன்றாக கல்லா கட்டியதால், விஜய் ஆண்டனியை வைத்துப் படம் தயாரிக்க போட்டி போடுகின்றன பல தயாரிப்பு நிறுவனங்கள். ஆனால், அந்த ஜாக்பாட்டை தனதாக்கியுள்ளது ஐ பிக்சர்ஸ். இந்த நிறுவனத்தின் சார்பில் எஸ்.சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இப்படத்தைத் தயாரிக்கின்றனர். 

தற்போது விஜய் ஆண்டனி 'எமன்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, இந்தப் படத்தில் அவர் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குனர்  சீனுவாசன் இயக்கத்தில் உருவாக உள்ள இந்தப் பெயரிடப்படாத படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது!

இது குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, 
'நான் தாய் வீட்டுக்கு வந்த மனநிலையில் உள்ளேன். என் திரைப்பயணத்தை, ஒரு இசையமைப்பாளனாக துவங்கினேன். ஆரம்ப காலகட்டத்தில் எனக்கு வாய்ப்பளித்தவர் ராதிகா மேடம். அவரது விடா முயற்சியும் ஆசியும் ஆதரவும், என்னை இன்று ஒரு நல்ல இடத்தில் அமர்த்தி இருக்கிறது. தொழில்முறை நடிகனாக என்னுடைய இன்றைய தலையாய தேவை, திரை தொழிலை நேசிக்கும் தயாரிப்பாளர்களே!

அந்த முறையில், சினிமாவை உயிர்மூச்சாக நேசிக்கும் சரத் சாரும், ராதிகா மேடமும் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களாக இருப்பார்கள் என நம்புகிறேன். ஒரு படம் முடிந்தவுடன் அடுத்த படத்துக்கு ஒப்பந்தம் போடுவதில், நான் என்றும் அவசரப்பட்டதே இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. வர்த்தகத்தைத் தாண்டி, மனித உணர்வுகளும் செய்யும் தொழிலில் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். அதன் அடிப்படையில் தான், எனக்கு இசையமைப்பாளர் வாய்ப்பளித்த இந்த நட்சத்திர தம்பதியினருக்கு படம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டேன்" என்றார். 

பொதுவாக தான் நடிக்கும் படங்களுக்கான தலைப்பை, விஜய் ஆண்டனியே தேர்வு செய்வார். எனவே, புதிய படத்துக்கான தலைப்பையும் அவரே வெளியிடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம். படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் துவங்க உள்ளது!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles