தயாரிப்பாளர் அவதாரத்தில் இயக்குநர் பா.ரஞ்சித்!

Monday, January 2, 2017

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். தனது இரண்டாவது படமான ‘மெட்ராஸ்’ மூலம் சிறந்த இயக்குநர் என்று நிரூபித்தார். மூன்றாவது படமான, ரஜினி நடித்த ‘கபாலி’ மூலம் உலகம் முழுக்க உள்ள தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தார். இவர் தனது நான்காவது படத்தையும் ரஜினியை வைத்தே இயக்கவிருக்கிறார். இப்படி பல அதிரடிகளை கோலிவுட்டில் நிகழ்த்திவரும் பா.ரஞ்சித், அடுத்து தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கிறார்!

நீலம் புரொடக்‌ஷன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படநிறுவனம் மூலம் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் மாரி செல்வராஜ். இவர் இயக்குநர் ராமிடம் ‘கற்றதுதமிழ்’, ‘தங்கமீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.

திருநெல்வேலி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளதாம். இதில், நெல்லை மாவட்ட இளைஞராக ‘கிருமி’ நாயகன் கதிர் நடிக்கிறார். இவரது ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்க, ஒளிப்பதிவை ஸ்ரீதரும், கலையை ராமும் மேற்கொள்கின்றனர். 

இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!
 
- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles