நான் பிறவி இசைக்கலைஞன்! - இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா

Monday, February 27, 2017

தமிழ் சினிமாவை தரம் உயர்த்தியதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்குப் பெரும் பங்கு உண்டு. அவருடைய இசையின் தாக்கத்தில் இருந்து விடுபட, இன்னும் பல தலைமுறைகள் ஆகும். அவருக்குப் பிறகு நிறைய இசைக்கலைஞர்கள் அவதாரம் எடுத்தாலும், தொடர்ச்சியாக ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு உட்கார முடியவில்லை; விதிவிலக்காக, சிலர் உண்டு. அவர்களில் ஒருவர், இளையாஜாவின் குடும்பத்திலேயே உண்டு. அது அவரது இளைய மகன் யுவன்ஷங்கர் ராஜா!

கோலிவுட் சினிமாவின் பல்ஸ் பிடித்து இளைய தலைமுறையை ஆட்டிப்படைத்துவரும் யுவன், சினிமாவுக்குள் நுழைந்து இன்றுடன் (27.02.2017) இருபது ஆண்டு காலம் நிறைவாகியிருக்கிறது. பல நட்சத்திரங்களுக்கு தனது இசையால் வெளிச்சம் பாய்ச்சிய யுவன், இந்த மகிழ்ச்சிகரமான நாளை எளிமையாகவே கொண்டாடினார். 

இதுகுறித்துப் பேசும்போது, 
"நான் இப்போது இந்த நிலையில் இருப்பதற்கு மிக முக்கியக் காரணம், என்னுடைய ரசிகர்களின் அன்பும் இசைப்பிரியர்களின் ஆதரவும் தான். அவர்களுக்கு என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருபது வருடங்கள் நிறைவுபெற்றாலும், நேற்று தான் திரையுலகில் அடியெடுத்து வைத்திருப்பது போல உணருகின்றேன்.

இந்த இருபது வருட காலத்தில் எனக்கு ஏற்பட்ட ஏற்றங்களும் இறக்கங்களும், என்னை எந்தவிதத்திலும் பின்னடையச் செய்யவில்லை. இந்த வருடங்களின் எண்ணிக்கையை, நான் இசையமைத்த திரைப்படங்கள் மூலமாக தான் கணக்கிட முடியும். ஆனால், நான் ஒரு பிறவி இசைக்கலைஞன் என்பது இன்றும் என்றும் என்றென்றும் நீடித்து இருக்கும். இந்த தருணத்தில் என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நட்சத்திரங்கள், ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இசைத்துறையில் நான் அதிகக் கவனம் செலுத்துவதற்கு மிக முக்கியக் காரணம் என்னுடைய தந்தை தான். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த இருபது வருடத்தில், 'கொலையுதிர் காலம்' திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்து இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். விரைவில், என்னுடைய அடுத்த படத்தைப் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பேன்" என்று துள்ளலாக பேசி முடித்தார் யுவன்ஷங்கர் ராஜா.

ஆயகலைகளில் ஈர்ப்பு மிகுந்ததான இசையைக் கொண்டாடிவரும் யுவன் என்ற கலைஞனை, நாமும் கொண்டாடுவோம்! 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles