பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!  ஒரே சமயத்தில் இரும்பாகவும் மெழுகாகவும் இருக்கும்  பெண் மனம்!

Thursday, February 16, 2017

அன்பாலும் ப்ரியத்தாலும் நிறைந்தது இதயம். விதிகளும் சட்ட திட்டங்களும் அதை காயப்படுத்தவோ, புறக்கணிக்கவோ முடியாது. காதலின் முன்னால் ஆணும் பெண்ணும் குழந்தைகளே. அவர்களின் சேட்டைகள் ரசனைக்குரியவை, கொண்டாட்டமானவை. கண்டிப்பினால் சாதிக்க முடியாததை ஒரு புன்னகையால் சாதித்துவிட முடியும். ஆகவேதான், இந்த உலகம் தன் மூச்சை நிறுத்திக்கொள்ளாமல் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது. அந்த சுழற்சியின் ஆணிவேர் பெண்தான். ஆண் அவளைச் சார்ந்தவன். அவளின்றி எதுவுமில்லை!

'நோ மென் அளவுடு' என்ற திரைப்படம் நமக்கு சொல்ல வருவதும் அதைத் தான். பெண்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம்; ஆணிடம் இருந்து  விலக்கி வைக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து சென்றுவிட பெண்களால் முடியும். ஆண் வாசனையை எத்தனை கிலோமீட்டருக்கு அப்பால் தள்ளி நிறுத்தினாலும், வெகு சீக்கிரமாகத் தன் நுண்ணுணர்வால் அறிந்து கொள்ளும் பெண் மனம். சிக்கலான நேரங்களில் இரும்பாகவும், தேவையேற்படும்போது உருகும் மெழுகாகும் மாறிவிடும் அற்புதத்தை நிகழ்த்த பெண்களால் முடியும். இப்படியான பல குணாதிசயங்கள் அவளுக்குள் இருந்தாலும், எப்போதும் அவளது இருப்பு ஒரு ஆணைச் சுற்றித்தான். இந்தப்படத்திலும் இதனைக் காண முடியும்.

ஆண் வாடையே அடிக்காத பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிடா தெரபி (விஷ்கா அசேயேஷ்). மிகவும் கண்டிப்பானவர், பெண்ணியவாதி. பள்ளியிலும் சரி, பள்ளிக்கு வெளியேயும் சரி மாணவிகளை கண்காணிக்கும் விஷயத்தில் இவர் ஒரு ரோபோ. அவரைப் பார்த்தாலே அனைத்து ஆசிரியைகளும் நடுங்குவார்கள். ஒரு ராணுவக் கட்டுப்பாட்டு ஒழுங்குடன் அந்தப் பள்ளியை நிர்வகித்து வருகிறார் பிடா தெரபி. 

அந்தப் பள்ளியின் வேதியியல் பிரிவு ஆசிரியை மகப்பேறு கால விடுப்பில் செல்கிறார். இடைப்பட்ட காலத்தில் பெண் ஆசிரியை கிடைக்காததால், வேறு வழியின்றி வகீத் ஜெபலி (ரெசா அட்டாரன்) என்கிற ஆசிரியர் நியமிக்கப்படுகிறார். அடிப்படையில், அவர் பிடா தெரபிக்கு குணத்துக்கு நேர் எதிரானவர். எல்லோருடனும் எளிதாக பழகக் கூடியவர். பெண்களிடம் மட்டும், கொஞ்சமல்ல, நிறையவே கூச்சம் பாராட்டுபவர். இது போதாதா? பெண்களுக்குப் பிடிக்க. இதனால் அந்தப் பள்ளியின் மாணவிகள் கிண்டல் செய்து, வகீத்தை பாடாய் படுத்துகிறார்கள். 

மாணவிகள் செய்யும் சேட்டையில் சிக்கும் வகீத் ஜெபலி, பிடா தெரபியின் கோபத்துக்கும் கண்டிப்புக்கும் அடிக்கடி ஆளாகிறார். இந்நிலையில், பள்ளியில் இருந்து மாணவிகளும் ஆசிரியைகளும் வெளியே சுற்றுலா செல்கின்றனர். அவர்களோடு வகீத்தும் செல்கிறார். அங்கே நடக்கும் கலாட்டாவின் இறுதியில், வகீத் ஜெபலியின் மீது காதலில் விழுகிறார் பிடா தெரபி என்பதோடு படம் நிறைவடைகிறது. 

பிடா தெரபியின் கடுகடுக்கும் முகம், பின் மெல்ல மெல்ல வகீத் அருகாமையில் நெருங்கும்போது கனிவாக மாறும் காட்சிகள் அற்புதம். தன்னுடைய அழகை மறைக்கும் மூக்கு கண்ணாடியை கழற்றிவிட்டு, காதலோடு கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கும் பிடா தெரபியின் நடிப்புக்கு ஒரு ராயல் சல்யூட் வைக்கலாம். பிடா தெரபியாக நடித்துள்ள விஷ்கா அசேயேஷ் அடிப்படையில் ஒரு கலை இயக்குநர். செட் டிசைனராக, ஈரானிய படங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டும் கூட. 'நோ மென் அளவுடு' அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதை, உலகத் திரைப்பட விழாக்களில் பெற்றுத்தந்தது. 

படத்தில் கெமிஸ்ட்ரி டீச்சராக வரும் ரெசா அட்டாரனின் (வகீத் ஜெபலி) வெகுளித்தனமான நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். பிடா தெரபியிடம் மாட்டிக்கொண்டு விழிபிதுங்கும்போதும், அதன்பின் தலைமை ஆசிரியையோடு சண்டையிடும்போதும் சபாஷ் போட வைக்கிறார். சோடாபுட்டி கண்ணாடியும், கையில் புத்தகங்களுமாக வகுப்பறைக்குள் அவர் நுழையும்போதே, நமக்கு சிரிப்பு வந்துவிடும். ஈரானில் எடுக்கப்படும் நகைச்சுவைப் படங்களில், பெரும்பாலானவற்றில் இடம்பிடித்திருப்பவர் ரெசா அட்டாரன். எழுத்தாளர், நடிகர், பாடகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். 'கோல் அஹா நகைச்சுவை திரைப்பட விழா'வில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர். 'நோ மென் அளவுடு' திரைப்படம், நகைச்சுவை நடிப்பில் அவருக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டியது!

உலக சினிமா என்றாலே அது ஈரானிய சினிமாதான் என்று நினைக்கும் அளவுக்கு, அந்த நாட்டு படங்களின் தாக்கத்தால் உருவான இயக்குநர் பட்டியல் நீளமானது. உலக அளவில் உருவாக்கப்படும் திரைப்படங்களில், ஈரானியப் படங்களுக்கு மட்டும் தனி மவுசு உண்டு. அதற்கு அடிப்படைக் காரணம், அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் படங்களை இயக்க வேண்டும் என்பதே. கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் நேர்த்தியான நல்ல கதையம்சத்துடன் கூடிய வாழ்க்கையை அலசும் திரைப்படங்கள் உருவானதன் பின்னணி அதுதான். அந்தவகையில் சிறிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு, சர்வதேச கவனம் ஈர்த்த படங்கள் ஈரானில் அதிகம். 

குறைவான இடங்களையும், விரல்விட்டு எண்ணும் அளவுக்கு பாத்திரங்களையும் வைத்துக்கொண்டு, ஒரு திரைக்கதையை முடித்துவிடுவார்கள். மூன்று மணி நேரம் தியேட்டரில் உட்கார வைக்காமல், சில மணித்துளிகளுக்குள் அக்கதை முழுமைப்பெற்றுவிடும். அதனாலேயே அந்தப் படங்களை விரும்பிப் பார்க்கும் திரை ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகம். அந்த வரிசையில், சினிமா ஆர்வலர்களால் அதிகமாக விவாதிக்கப்படும் படங்களில் ஒன்று 'நோ மென் அளவுடு'. 

ஒரு மணிநேரம் ஏழு நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் துவக்கக்காட்சியில் இருந்து படம் முடியும் வரை, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான சண்டையின் முடிவு மனங்களின் நெருக்கம் தான் என்பதை அழுத்தமாகச் சொல்கிறார் படத்தின் இயக்குநர் ராம்போ ஜாவான். ஈரானியத் திரைப்படமான 'நோ மென் அளவுடு', பார்சி மொழியில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles