'டூ பா டூ' இசைக்கலைஞர்களுக்கான மேடை! பாடலாசிரியர் மதன் கார்க்கி 

Thursday, February 16, 2017

தமிழ் சினிமா மட்டுமின்றி, பிறமொழிப் படங்களிலும் தனது கவித்துமான டிஜிட்டல் எழுத்தினால் பட்டையைக் கிளப்புபவர் மதன் கார்க்கி. தமிழ் திரைப்படங்களில் வசனகர்த்தாவாகவும் முத்திரை பதித்துவரும் 'டெக்கி கவிஞன்'. மறுபுறம், சத்தமில்லாமல் கணினித்துறையில் பல புதுமைகளை படைத்துக்கொண்டிருக்கிறார். பன்முகம் கொண்ட, கோலிவுட்டின் பிஸியான பாடலாசிரியரான மதன் கார்க்கியை அவரது அலுவலகத்தில் சந்தித்து, உரையாடினோம்!

'காற்று வெளியிடை' படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து..?

"இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் வேலை பார்ப்பது என்பது எப்பவுமே ஒரு சுகமான அனுபவம் தான். இதுவரைக்கும் அவர்களுடன் வேலை பார்த்த எல்லா பாடல்களையும் இரண்டு, மூன்று மணி நேரங்களுக்குள் முடித்திருக்கிறோம். ஏன்னா, அவர்கள் இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரி இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு இயக்குநரும் இசையமைப்பாளரும் இருப்பது அரிது!

'கடல்' படத்தில் "ஏலே கீச்சான்...'', "அடியே..." போன்ற பாடல்களை எழுதும்போதும் இதே அனுபவங்களை உணர்ந்திருக்கிறேன். அதே மாதிரிதான் 'காற்று வெளியிடை' படத்துக்கு பாடல் எழுத, ஒரு நள்ளிரவில் அழைத்தார்கள். இசைக்கு ஏற்ப வரிகளை எழுத ஆரம்பித்தேன். இடையிடையே "இப்படி இருக்கலாம்... அப்படி இருந்தால் நல்லாயிருக்கும்..." போன்ற ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் மணிரத்னம். அப்படித்தான், "அழகியே..." பாட்டு உருவானது. இன்று, அந்தப் பாடல் வெளியாகி, பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கு. எல்லாப் புகழும் அவர்கள் இருவருக்குமே!

 

'விநோதன்' படத்தில் 'பாலின்ட்ரோம்' ஸ்டைலில் பாடல் எழுதினீர்களாமே?

"பாலின்ட்ரோமுக்கு தமிழில் 'பின்பி' என்று பெயர் வைத்திருக்கிறோம். ஏற்கனவே தமிழில் உள்ள பழைய வகைதான். இதையொட்டி நிறைய பாடல் வந்திருக்கு. 'விநோதன்' இயக்குநர் விக்டர் ஜெயராஜ், படத்தின் கதை குறித்து என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது  எதையும் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்கிற மனசுழற்சி போன்ற நோயால் பாதிக்கப்பட்ட பாத்திரம் பற்றியும் சொன்னார். அங்கிருந்து உருவானதுதான் பாலின்ட்ரோம் ஸ்டைல் பாடல். முதல் பாதியும் பின் பாதியும் ஒரே மாதிரி இருக்குமாறு பாடலின் வரிகள் அமைந்திருக்கும். 'விநோதன்' படத்தின் வசனங்களையும் கூட, நான் எழுதியிருக்கிறேன்!"

 

'டூ பா டூ' என்ற நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்ன? 

"பாடல்கள் என்றாலே, தமிழகத்தில் எல்லோருக்கும் சினிமா பாடல்கள் தான் ஞாபகத்துக்கு வரும். அப்படியான திரைப்பாடல்களுக்குள் வருவதற்கு நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அங்கே ஒரு சின்ன இடம்தான் இருக்கு. தமிழ் சினிமாவுக்குள் ஒரு நூறு கவிஞர்களும், இரு நூறு பாடகர்களும் தான் இருக்க முடியும். அவர்களுக்கும் நிறைய பாடல் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சினிமாவில் அதற்கான இடமில்லை. அதனால், இசைக்கலைஞர்களுக்கான ஒரு மேடையை அமைத்துக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் 'டூ பா டூ'. 

இதை நானும், என்னுடைய நண்பர்களான கௌந்தேயா, சரவணன், ராஜா, விஜய்யும் சேர்ந்து நடத்திக்கிட்டு இருக்கிறோம். 'டூ பா டூ' மாதிரியான ஒன்றை உருவாக்குவதற்கான எண்ணம் என்னிடம் இருந்தது. அது மட்டுமில்லாமல், நண்பர் கௌந்தேயா "இசைக்காக ஒரு சமூக வலைதளம் ஆரம்பிக்கலாம்..." என்று சொன்னார். என்னுடைய எண்ணங்களையும் அவரிடம் சொன்னேன். அப்படி இருவரின் யோசனையில் உருவானதுதான் 'டூ பா டூ'!"

 

'பாகுபலி 2'வில் என்ன ஸ்பெஷல்?

" 'பாகுபலி' முதல் பாகத்தில் இடம்பெற்றது போலவே, பாகம் 2விலும் கிலிக்கி மொழியிலான வசனங்கள் இடம்பெற்றிருக்கு. முதல் பாகத்தைப் பொறுத்தவரை அது ஒரு முன்னோட்டம் தான். எப்படி ஒரு படம் வெளியாவதற்கு முன்னால் டீசர், டிரைலர் வெளியாகிறதோ, அதே மாதிரி 'பாகுபலி' பார்ட் ஒன் என்பது வெறும் டிரைலர் தான். 'பாகுபலி 2' என்பது பெரிய களம். அதில்தான் கதையே உள்ளது. பார்ட் ஒன் என்பது கதையின் தொடக்கம் தான். எமோஷனல் கோஸ்ட்ரைடர் மாதிரி இரண்டாம் பாகம் இருக்கும். முதல் பாகத்தை விட, எனக்கு அதிகமாகப் பிடித்தது இரண்டாம் பாகம் தான்!"

 

இளையராஜாவின் இசைக்கு எப்போது பாடல் எழுதப்போகிறீர்கள்?

"அவர் (இளையராஜா) எப்போது நினைக்கிறாரோ, அப்போது!" 

 

தற்போது பாடல் எழுதியுள்ள படங்கள் குறித்து..?

"ஏ.ஆர்.முருகதாஸ் படம் மற்றும் விஜய் இயக்கி வரும் 'வனமகன்' படத்தில் தலா மூன்று பாடல்களை எழுதியிருக்கிறேன். 'பாகுபலி2', '2.0' படங்களுக்கும் பாடல்கள் எழுதியிருக்கிறேன். இந்தப்படத்தின் பாடல்கள் குறித்து இப்போது பேச முடியாது. படம் வெளியாகும்போது அதுபற்றிப் பேசலாம்னு நினைக்கிறேன். இது மட்டுமின்றி, நிறைய அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கும் பாடல் எழுதிக்கிட்டு வர்றேன்!" - ஷார்ப்பாக என்ட் கார்டு போடுகிறார் மதன் கார்க்கி. ஒரேநேரத்தில் பல களத்தில் தனது திறமைகளை நிரூபித்துவருபவரிடம் கைகுலுக்கி விடைபெற்றோம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles