சினிமா எங்க குடும்பத்துக்கு புதுசு! அனுபவம் சொல்லும் கனவு வாரியம் தயாரிப்பாளர்கள்!!

Thursday, February 16, 2017

எழுபதுகள், எண்பதுகளில் தமிழில் வெளியான பத்திரிகைகளின் அட்டைப்படங்களை அலங்கரித்த ஹீரோ ஆணழகன் சிதம்பரம். எம்.ஜி.ஆர் மற்றும் சிவந்தி ஆதித்தனார் போன்ற பிரபலங்களின் உடற்பயிற்சி ஆலோசகர். தற்போது இவர் தன் மகனுக்காக, திரைப்படத் தயாரிப்பை கையிலெடுத்திருக்கிறார். 

“என்னுடைய மகன் அருண் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தபிறகு, விஸ்காம் படிக்கணும்னு விருப்பப்பட்டார். அப்போ, நான் அதுக்கு தடை போட்டேன். என் பேச்சுக்கு மரியாதை கொடுத்து, பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தார். அதோடு இல்லாமல், என் விருப்பத்துக்கேற்ப அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிச்சார். “நீங்க சொன்னபடி படிச்சிட்டேனே, இப்போ படம் எடுக்கபோறேன்”னு சொன்னாரு. “இல்லப்பா, அங்கேயே வேலை பார்த்தால் தான் எனக்கு கௌரவம்”னு நான் சொல்லிட்டேன். கிட்டதட்ட  எட்டு ஆண்டுகள், அமெரிக்காவுல வேலை பார்த்தார். பிறகு ஒரு நாள், தன்னோட மனைவி மற்றும் குழந்தையுடன் இந்தியா திரும்பினார்.

 

“இனிமே அமெரிக்கா போகமாட்டேன், என்னோட கனவு சினிமாவை எடுக்கப்போறேன். கதையையும் தயார் பண்ணிட்டு வந்தேன்”னு சொன்னாரு. எனக்கு பேரதிர்ச்சி. இன்னும் இரண்டு அல்லது மூன்று வருஷம் போகட்டுமேன்னு சொன்னேன். அதுக்கு அவரு, “என்னோட வயசு போயிடும். இதுக்கும் மேல என்னோட ஆசைகளை கட்டுப்படுத்திகிட்டு அங்கே இருந்தேன்னா, நான் செத்துருவேன் போல இருக்கு” ன்னு சொன்னார். இந்த வார்த்தைகளை என்னால தாங்க முடியலை. அதனால நான் பாத்துட்டு இருந்த வேலையை உதறிட்டு, அவருக்காக ‘கனவு வாரியம்' படத்தைத் தயாரிக்க வந்தேன்.

 

படம் எடுக்கும் ஆர்வத்தில் அமெரிக்காவிலிருந்து வேலையை உதறித் தள்ளிவிட்டு வந்த அருணை, சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் ‘கிறுக்கன்’ என்று கூறிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அந்தக் கிறுக்கன் என்ற வார்த்தையை வைத்தே ‘கனவு வாரியம்’ திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கார் அருண். அந்தப் பாடலை சீர்காழி சிவசிதம்பரம் பாடியிருக்கார். பாடும்பொழுது, “நான் இதுவரைக்கும் பாடிய பாடல்களில், இந்த மாதிரி கடினமான பாடலைப் பாடியதே கிடையாது" என்றார் சிவசிதம்பரம். 

 

இந்தப் படம் இந்தியாவுல வெளிவருவதற்கு முன்பே நிறைய விருதுகளை வாங்கிக் குவிச்சிருக்கு. இது நிச்சயம் எங்க குடும்பத்துக்கு பெருமை தான். ஏற்கனவே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம், தன்னோட கவிதைத் தொகுப்பை குறுந்தகடு நூலாக வெளியிட்டு பாராட்டை வாங்கியவர் அருண். அவரது திறமை எப்போதும் சளைத்ததில்லை என்பதற்கு அதுவே சான்று.

 

என்னோட மூத்த மகன் கார்த்திக் சிதம்பரம், ‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கார். அவரு இல்லேன்னா, எங்களால இந்தப் படத்தை இவ்வளவு சுமூகமாக எடுத்திருக்க முடியாது. படம் தயாரித்தல் அவ்வளவு சுலபம் கிடையாது. எந்த இடத்துலயும் முகம் சுளிக்காம, பணத்தை கொடுத்தாரு கார்த்திக். இப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றது வரம்தான். விருதுகள் பல வாங்கியிருந்தாலும், தமிழ்நாட்டில் படத்தை வரவேற்று ஆதரிப்பதே எங்களுக்கு கிடைக்கும் உண்மையான விருது” என்றார் சிதம்பரம்.  

 

அவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் கார்த்திக் சிதம்பரம். “சினிமா எங்க குடும்பத்துக்கே புதுசு. ரொம்ப அருமையான படைப்போட தம்பி அருண் வெளிநாட்டிலிருந்து வந்ததும், அப்பாவோட சேர்ந்து நானும் படத்தயாரிப்புல குதிச்சிட்டேன். இஷ்டப்பட்டு கஷ்டப்படுன்னு சொல்லுவாங்க, அப்படி நிறைய சிரமங்களை எதிர்கொண்டு தயாரித்த படம்தான் ‘கனவு வாரியம்'. இதுவரைக்கும், இந்தப் படம் ஒன்பது நாடுகள்ல பதினைந்து விருதுகள் வாங்கியிருக்கு. ‘கனவு வாரியம்' வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தோட இணைஞ்சது கடவுளோட ஆசீர்வாதம்.  

 

நான் டிசிகேப் என்கிற மென்பொருள் நிறுவனத்தை நடத்திட்டு வர்றேன். அந்த பேனர்லதான் ‘கனவு வாரியம்' படத்தையும் தயாரிச்சிருக்கோம். சாப்ட்வேரை பொறுத்தவரைக்கும், இவ்ளோ லாபம் வரும் அல்லது நஷ்டம் ஏற்படும்னு கணிச்சிடலாம். சினிமா அப்படி கிடையாது. இதுல நிறையவே ரிஸ்க் இருக்கு. எதற்கும் தளரக்கூடாதுன்னு நாங்க அப்பாகிட்ட இருந்து கத்திருக்கோம். கிரிக்கெட் அல்லாத ஒரு விளையாட்டுல பல இன்னல்களை சந்தித்து வெற்றி பெற்றவர் அவர். அந்த தளராத மனம்தான் எங்களுக்கும் வந்திருக்கு.

 

சினிமா மார்க்கெட் எங்களுக்கு புதுசுங்கிறதால, எப்படி யாரை அணுகணும்னு தெரியல. எங்களோட இசை வெளியீட்டு விழாவை, இசையமைப்பாளர் யுவன் ட்வீட் செஞ்சதும், மாஸ் ஆடியன்ஸுக்கு போய்ச் சேர்ந்தது. அதோட எங்க டிரைலரையும் ரிலீஸ் செஞ்சோம். ஆனா, அது ரொம்ப பேரை போய்ச் சேரலை. 

 

என்ன பண்ணலாம்னு மண்டையை பிச்சுட்டு இருக்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமா எங்க முகநூல் பக்கத்துக்கு ஆடியன்ஸ் வந்தாங்க. ஸ்லோவா வீடியோஸ் மக்களைப் போய்ச் சேர ஆரம்பிச்சது. ஆனால், இந்த ப்ராசஸ் நடக்க கொஞ்சம் லேட் ஆச்சு. அப்போதான் தெளிவா ஒரு விஷயம் புரிஞ்சுச்சு. கன்டென்ட் இருந்தால் மட்டும்தான் அதுக்கு வேல்யூ. இப்படி புதுசு புதுசா பல விஷயங்களை கற்றுக்கொள்ள, இது ஒரு பெரிய தளமா அமைஞ்சது.

 

கதைக்களனே மின்வெட்டுதான். இதைப் பற்றிச் சொல்லனும்னா, அதுக்கு கொஞ்சம் தைரியம் வேணும். நாம சொல்ல வர்ற விஷயத்துல இருக்குற உண்மைகளை, யாருக்கும் பாதகம் இல்லாம சொன்னோம் என்றால் எந்தவிதமான இடர்களும் வராது. மக்களோட ஆதரவிலும் பத்திரிகைகளின் ஒத்துழைப்பிலும், தமிழ்நாட்டில் ‘கனவு வாரியம்' வெற்றி வாகை சூடும்னு எதிர்பார்க்கிறோம்” என்றார். 

 

அருண் சிதம்பரம் என்ற சகோதரரையும் புதல்வரையும் கரையேற்றும் ஆசை, இவர்கள் இருவரிடமும் இருக்கிறது. அதனை மீறி, மிகச்சிறந்த படைப்பாளியை அறிமுகப்படுத்தும் பெருமையும் நிறைந்திருக்கிறது. 

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles