அனைத்து அம்சங்களும் நிறைந்த படம் 'கவண்'! 

Monday, February 13, 2017

இந்திய சினிமாவில் ஒளிப்பதிவாளராக வெற்றிக்கொடி நாட்டியவர் கே.வி.ஆனந்த். பிறகு இயக்குநராக புரமோஷன் ஆனார். தொடர்ந்து, நல்ல கதையம்சம் உள்ள கமர்ஷியல் படங்களை வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் தந்து வருகிறார். அந்த வகையில், அவர் அடுத்து இயக்கிவரும் படம் ''கவண்''. ஏ.ஜி.எஸ். எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில், இப்படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துள்ளார்.

இன்றைய சமூகச்சூழலுக்கு ஏற்ற படமாக உருவாகியுள்ள 'கவண்' படத்தில் காதல், சவால், அவமானம், மீண்டெழுதல், கொண்டாட்டம் என ஒரு சுவராசியமான திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் சரிவிகிதத்தில் நிறைந்திருப்பதாகச் சொல்கிறது படக்குழு. 

கடந்த ஆண்டு தொடர் வெற்றிகளைக் குவித்த விஜய் சேதுபதி, முதன்முறையாக இயக்குநர் கே.வி.ஆனந்த் உடன் கைகோர்த்துள்ளார்; முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது அடுக்குமொழி வசனங்களால் தமிழக மக்களைத் தன்வசம் வைத்திருக்கும் டி.ராஜேந்தர் உடன் விஜய் சேதுபதி இணைந்து நடிப்பதால், சினிமா ரசிகர்களுக்கு கவண் திரைப்படம் நல்ல விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்!

படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடித்திருக்கிறார். நடிகர்கள் பாண்டியராஜன், விக்ராந்த், அயன் ஆகாஷ், போஸ் வெங்கட், நண்டு ஜெகன், பவர் ஸ்டார் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர். 'கனா கண்டேன்' படத்தில் துவங்கி 'அனேகன்' படம் வரை கே.வி.ஆனந்த் உடன் திரைக்கதையில் இணைந்து பணியாற்றிய எழுத்தாளர்கள் சுபா, இந்தப் படத்தின் வெற்றிக்காக கடுமையாக உழைத்திருக்கிறார்களாம். 

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் அறிமுகமாகிறார் கபிலன் வைரமுத்து. கே.வி.ஆனந்த், சுபா, கபிலன் வைரமுத்து கூட்டணி வசனங்களை எழுதியுள்ளது. மிக விரைவில் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles