கௌதம் கார்த்திக் உடன் கைகோர்க்கும் விஜய் சேதுபதி!

Tuesday, February 7, 2017

தமிழ் சினிமாவில் இரட்டை நாயகர்கள் நடிக்கும்போது, ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறும். சம்பந்தப்பட்ட இரண்டு நட்சத்திரங்களும் ஸ்டார் வால்யூவோடு இருந்தால், கேட்கவே வேண்டாம்! பார்வையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்! அந்தவகையில், கோலிவுட்டில் தனி முத்திரை பதித்துவருபவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிப்பதை, அவர் ஒரு பாணியாகவே கடைப்பிடித்து வருகிறார். 

உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தாலும், அவ்வப்போது இளம் நடிகர்களின் படங்களிலும் கவுரமாக வந்துபோகிறார். இது அவரது மார்க்கெட் வால்யூவை குறைக்கும் என்று சிலர் புலம்பினாலும், அதுகுறித்து அவர் அலட்டிக்கொள்வதில்லை. அந்தவகையில், லேட்டஸ்ட்டாக '7சி' என்டர்டைன்மெண்ட்' மற்றும் 'அம்மே நாராயணா புரொடக்‌ஷன்ஸ்' தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் கௌதம் கார்த்திக் உடன் கைகோர்த்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தை ஆறுமுக குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார். 

இப்படம் குறித்து இயக்குநர் ஆறுமுக குமார் பேசும்போது, "ஒன்றுக்கும் மேற்பட்ட கதாநாயகர்களை கொண்டு உருவாகும் திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் ரொம்பவே குறைவு. ஆனால் விஜய் சேதுபதி போன்ற கதாநாயகர்களின் வருகையால், அது தமிழ் திரையுலகில் இருந்து மறைந்து வருகிறது. தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்த, சவாலான கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களைத் தேர்வுசெய்து வருகிறார் விஜய் சேதுபதி. 

இரண்டு கதாநாயகர்கள் உடைய கதைகளையும் ஆர்வத்தோடு தேர்ந்தெடுத்து நடித்து வருவது, அவரது உறுதியான நம்பிக்கையை உணர்த்துகிறது. இந்தப் படத்தின் கதையை நான் அவரிடம் கூறிய அடுத்த கணமே, அவருடைய கதாபாத்திரத்தில் ஆழமாக மூழ்கத் தொடங்கிவிட்டார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அவரது கதாபாத்திரம் இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பை பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று துவங்கினோம். படத்தின் தலைப்பை ஒரு நல்ல நாளாக பார்த்து அறிவிப்போம்" என்றார். 

மீண்டும் ஒரு இணைந்த கைகள்..!?

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles