'அறம்', 'தீரன் அதிகாரம் ஒன்று' பின்னணி இசைக்காக  ஆராய்ச்சியில் ஈடுபட்டேன் - இசையமைப்பாளர் ஜிப்ரான்  

Tuesday, December 5, 2017

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜிப்ரான் முதலிடத்தில் இருக்கிறார். இயக்குநர்கள் பலரின் பார்வை, தற்போது அவர் மீது விழுந்துள்ளது. இளையராஜா, ரஹ்மானுக்குப் பிறகு, பின்னணி இசையில் அழுத்தமான முத்திரையை ஜிப்ரான் பதித்துள்ளதே அதற்கு சான்று. 

திரைப்படங்களுக்கு இசையின் மூலம் உயிர் கொடுப்பது என்பது ஒரு கலை, அந்த கலையில் வல்லுனராகி இருக்கிறார் ஜிப்ரான். சமீபத்தில் வெளியான 'அறம்', தீரன் அதிகாரம் ஒன்று படங்கள் அவரின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. 

அது குறித்து இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசும்போது, 

"எந்தவொரு நல்ல திரைப்படத்திலும் உயிர் இருக்கிறது, அதை என் இசையின் மூலம் வெளிக்கொண்டு வருவது தான் என் வேலை. இயக்குநரின் தெளிவான சிந்தனை, சிறப்பான திரைக்கதை, திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் என ‘அறம்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படங்களுக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இந்த இரண்டு படங்களுமே பின்னணி இசைக்கு என்னை நிறைய ஆராய்ச்சி செய்ய வைத்தது.

நான் இதுவரை வேலை செய்த படங்கள் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதோடு, பெருமையாகவும் இருக்கிறது. இதே போல நல்ல படங்களுக்கு  தொடர்ந்து இசையமைக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். என்னுடைய அடுத்த படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ இந்த மாதம் 15 ஆம் தேதி வெளி வர உள்ளது. 

இந்த படத்திலும் இசைக்கு நல்ல முக்கியத்துவம் இருக்கிறது. படம் பார்க்கும் ரசிகர்கள் இசைப் பயணத்தை உணர்வார்கள். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு படத்தை அணுகியிருக்கிறோம். இது வேகமான, ஜாலியான படம். மேலும், சில பெரிய படங்களிலும் ஒப்பந்தமாகியிருக்கிறேன், விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்" என்றார்.

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles