நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது!

Thursday, December 7, 2017

'சிகரம் சினிமாஸ்', சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாக அகமது ஃபக்ருதீன், ஷேக் தாவூத், முஸ்தபா, குட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆண் தேவதை’. பிரபல இயக்குநர் மறைந்த பாலசந்தர் மற்றும் பாரதிராஜா ஆகிய இரு ஜாம்பவான்களை வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய தாமிரா, இப்படத்தை இயக்குகிறார். சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, அவருக்கு நாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.  

படம் குறித்து இயக்குநர் தாமிரா பேசும்போது, 

“எல்லோருக்குள்ளும் ஒரு நல்ல தன்மை இருக்கிறது. ஆனால் நமக்குள் இருக்கும் நல்லது எது, கெட்டது எது என யோசிக்கவிடாமல் காலம் நம்மை ஓடிக்கொண்டே இருக்க வைக்கிறது. ஒருகாலத்தில் நாமாக ஆசைப்பட்டது போய், இன்று ஆசைகள் நம் மீது திணிக்கப்படுகின்றன. இன்றைய நுகர்பொருள் கலாச்சாரத்தில் அதைநோக்கி நாம் துரத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறோம். வாழ்வதற்காக வேலை செய்கிறோமா..? இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா..? இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குகிறது.

‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் வினீத் சீனிவாசன், இந்தப் படத்தில் பாடியிருக்கிறார். ‘ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு முன்பே அவர் மலையாளத்தில் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், பாடகர். அவர் திரைக்கதை எழுதி, நடித்திருந்த ‘ஒரு வடக்கன் செல்பி’ பட வெற்றி விழாவில் நானும் கலந்துகொண்டேன். அப்போது அவர் பேசும்போது, “இதற்குமுன் நான் தனியாளாக வெற்றி பெற்றபோதெல்லாம் பெரிதாக மகிழ்ச்சி ஏற்படவில்லை.. ஆனால் இப்போது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றி பெற்றபோது அந்த வெற்றி அர்த்தமுள்ளதாக தெரிகிறது. 

எல்லோருமே அவரவர் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு வெற்றியைப் பெறுங்கள். கூட்டு வெற்றிதான் நிலையானது. அழகானது” என்று சொன்னார். அந்த வார்த்தை எனக்கு பிடித்திருந்தது. என் மனதுக்குள்ளேயே ஓடிக்கொண்டு இருந்தது. அவர் சொன்னதுபோல இந்தப்படமும் நண்பர்களின் அழகான கூட்டு முயற்சிதான்.” என்றார். 

படத்துக்கு விஜய்மில்டன் ஒளிப்பதிவு, ஜிப்ரான் இசை, காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு, ஜாக்சன் கலை இயக்கம் என்று திறமைசாலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு முழு பலத்தோடு களத்தில் குதித்துள்ளார் இயக்குநர் தாமிரா. வரும் ஜனவரி 2018 ஆம் ஆண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்!.

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles