தீயணைப்பு வீரர்களுக்கு மகுடம் சூட்டும் நெருப்புடா - நடிகர் விக்ரம் பிரபு எக்ஸ்கிளுஸிவ்!

Thursday, August 31, 2017

அன்னை இல்லத்தின் வாரிசுகளில் ஒருவர் நடிகர் விக்ரம் பிரபு. கோலிவுட்டில் தாத்தா சிவாஜி கணேசனைப் போல, ஒவ்வொரு படத்திலும் ‘சிகரம் தொடு’கிறார். இப்போது ‘பர்ட்ஸ் ஆர்ட்டிஸ்ட்’ எனும் நிறுவனத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் கால் பதிக்கிறார். ‘சிவாஜி புரொடக்ஷன்ஸ்’ அலுவலகத்தில் தன்னுடைய தாத்தாவின் பெரிய படத்துக்கு முன்னால் பவ்யமாக அமர்ந்தபடி, ‘நெருப்புடா’ படம் குறித்து பேசியதிலிருந்து..  

“இன்றைக்கு பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை ரஜினி சாரை தெரியாம இருக்காது. அதேபோல, அவருடைய ‘நெருப்புடா’ வசனமும் தான். அவருடைய பிரம்மாண்டத்தாலதான் “நெருப்புடா” என்கிற பாடலே பெரிய அளவிலே போய் சேர்ந்துச்சு. ஆரம்பத்தில் நாங்க இந்தத் தலைப்பை யோசிக்கவே இல்லை. நெற்றிக்கண், தீ போன்ற தலைப்புகள்தான் பரிசீலனையில் இருந்தது. கபாலி படத்தில் இருந்து அந்தப் பாடல் வெளியானபோது ‘என்னடா இது நம்ம சப்ஜெக்ட்டுக்கு ஏற்றமாதிரி இருக்கே.. என்ன செய்யலாம் தலைப்பை கேட்டு பார்க்கலாமா’ன்னு தோணுச்சு. பிறகு, தாணு சாரை மீட் பண்ணினோம். “தாராளமா எடுத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டார்.

படத்தலைப்பை கேட்டுவிட்டு ரஜினி என்ன சொன்னார்?

“தீயணைப்பு வீரர்களை பற்றிய படம்தான் ‘நெருப்புடா’. எங்களுடைய டாக் லைனே ‘ஃபயர் வித் இன் யு’ தான். உனக்குள்ளே இருக்கிற நெருப்பாலதான் எதையுமே, நீ சாதிக்க முடியும் என்பதுதான் படத்தோட ஒன்லைனே!. ‘நெருப்புடா’ தலைப்பை பார்த்துட்டு ரஜினி சார் கேட்டாங்க. “டிரைலரை பார்த்துட்டு இது பொருத்தமான தலைப்பான்னு, நீங்களே சொல்லுங்க அங்கிள்..” சொன்னேன். அதுபோல படத்தோட டீசர், டிரைலரைப் பார்த்துட்டு முதலில் கைதட்டி பாராட்டியது ரஜினி சார் தான்!. அதேபோல, மக்களோட ஆதரவும் படத்துக்கு கிடைக்கும்னு உறதியாக நம்புறோம்!”

தீயணைப்பு வீரர் பாத்திரத்தில் நடித்தது குறித்து?

“சமூகத்துல ஒரு மனுஷன் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ விரும்புறான்..? என்பதை சொல்கிற படம்தான் ‘நெருப்புடா’. நம்மோட வாழ்க்கையில் தீ என்பது சாதாரண விஷயமில்லை. அதேபோல தீயணைப்பு வீரர்களின் வாழ்க்கையும்தான். சென்னையை சுனாமி, பெருவெள்ளம், வர்தா புயல்னு தாக்கியபோதெல்லாம், அங்கெல்லாம் முதல் ஆளாக வந்து நின்று, நம்மை காப்பாற்றியது அவங்க தான். தன்னுடைய உயிரையும், குடும்பத்தையும் பற்றி கவலைப்படமால் அடுத்தவரின் உயிரை காக்கப் போராடுகிற  தன்னலமற்ற அவர்களோட மனசு, ரொம்பப் பெரியது. படத்தில் நடிக்கும்போது  தீயணைப்பு வீரர்கள் மீதான மதிப்பு, எனக்கு மேலும் கூடியது. நிச்சயம் அவர்களுக்கு மகுடம் சூட்டுகிற படம் தான் நெருப்புடா!”

 

நிக்கி கல்ரானி படத்தின் கதாபாத்திரம் எப்படி?

பொதுவாக ஷுட்டிங்கில் நிக்கி, திருதிரு துருதுருன்னு இருப்பாங்க. படத்துல அவங்களோடது ஒரு பாஸிட்டிவ் பாத்திரம். தன்னோட கேரக்டரை உணர்ந்து, சிறப்பா நடித்திருக்காங்க. ஒரு நேர்மறை பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்காங்கன்னுதான் சொல்லுவேன். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கு. ஃபேமிலியாக வந்து பார்க்கக் கூடிய படமாக ‘நெருப்புடா’ இருக்கும்!

 

படப்பிடிப்பில் மறக்க முடியாத நாள் உண்டா?

“சென்னையில் இருக்கிற கண்ணகி நகரில் சுமார் 65 ஆயிரம் வீடுகள் இருக்கு. அங்கே,  30 நாட்கள் நாங்க படப்பிடிப்பை நடத்தினோம். பெரிய டீமை வைச்சிக்கிட்டு, பெரிய மைக்கில் “ஆக்ஷன், கட்” சொல்லி சத்தம் போடறதை, அனுசரித்துக்கிட்டு போகிறதுக்கு பெரிய மனசு வேணும். அந்த மக்கள் பொறுமையாக எங்களை ஏத்துக்கிட்டாங்க. படத்துல கண்ணகி நகரும் ஒரு கேரக்டராகவே டிராவல் ஆவறதை, நீங்கள் பார்க்கலாம். அங்கே ஒரு மணிக்கூண்டு செட் போட்டோம். அதுவே, இப்போ அந்த நகரினுடைய அடையாளமாக ஆகிப்போயிடுச்சு!”

 

தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளீர்களே?

“ஒரு நடிகனா எனக்கு எதிரே உள்ளதுதான் தயாரிப்பாளர் ரோல். இரண்டையும் எப்படி பேலன்ஸ் பண்ணப்போறோம் என்கிற யோசனை ஆரம்பத்தில் இருந்தது. என்னுடைய அலுவலகத்தில் இருக்கும்போது தயாரிப்பாளராக இருப்பேன். படப்பிடிப்புக்குள் நுழையும்போது அங்கே நான் நடிகன் மட்டும் தான்!. புரொடக்ஷனை கவனிச்சிக்கறதுக்கு தனியாக நான்கு பேரை வைத்திருக்கேன். அவங்க ஒத்துழைப்போடு, எல்லாம் சரியா நடக்குது!

 

பர்ட்ஸ் ஆர்ட்டிஸ்ட்?

“தாத்தா என்கூட பேசும்போதெல்லாம் “என்னை எல்லோரும் பர்ஸ்ட்னு சொல்லுவாங்க.. நீயும் பர்ஸ்ட்டா இருக்க முயற்சி பண்ணேன்..” சொல்லுவாங்க. அதனால, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும்போது அது தாத்தாக்கிட்ட இருந்து தொடங்கினா சரியா இருக்கும்னு நினைச்சேன். அதனாலதான்  ‘பராசக்தி’ எனும் படத்தினுடைய சக்சஸையே லோகோவாக தேர்வு செய்தேன். ‘பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’னு பேரும் வைத்தேன். என்னைப் பொருத்தவரை தமிழ் சினிமாவின் முதல் நாயகன் முதல் நடிகர் யாரு?ன்னு, உலகத்தின் எந்த மூலையிலும் வசிக்கிற தமிழனிடம் கேட்டீர்கள் என்றால், அவர்கள் “சிவாஜி சார்”னுதான் சொல்வாங்க.. நானும் அதைத்தான் உங்ககிட்ட சொல்றேன்!” தன்னம்பிக்கையோடு முடித்தார் விக்ரம் பிரபு.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles