ரத்தத்தை சிந்தி உழைக்கிறார்கள் சண்டைக் கலைஞர்கள் - நடிகர் ரஜினிகாந்த்

Monday, August 28, 2017

தென்னிந்திய சினி, டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா, அண்மையில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடந்தது. 

இவ்விழாவில் கலந்துகொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, 

“நான் சின்ன வயதில் படம் பார்க்கும் போது, படத்தில் எத்தனை பைட் இருக்கு? எத்தனை ரீல் படம்? என்று தான் பார்ப்பேன். ஒரு படத்துக்கு தயாரிப்பாளர், இயக்குநர் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானவர்கள் சண்டைக் கலைஞர்கள். எம்.ஜி.ஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த யூனியனின் பொன் விழாவை அவரது நூற்றாண்டின் போது கொண்டாடுவது எவ்வளவு பொருத்தம். எம்.ஜி.ஆர். அவர்கள் சினிமாவை விட்டு விலகியபோது கூட சண்டை கலைஞர்கள், பல பேருக்கு மாத சம்பளம் கொடுத்து உதவினார்.

சினிமாவில் எல்லோரும் வியர்வை சிந்தி உழைக்கிறார்கள். ஆனால் சண்டைக் கலைஞர்கள் தான் வியர்வையுடன் ரத்தத்தையும் சிந்தி உழைக்கிறார்கள்; உயிரை பணயம் வைக்கிறார்கள். உலகம் முழுவதும் ஆக்‌ஷன் படத்துக்கு பெரிய வரவேற்பும், வசூலும் இருக்கு. நீங்கள் சண்டைக்காட்சி படப்பிடிப்பின் போது காட்டும் அக்கறையை, உங்கள் குழந்தைகளை வளர்ப்பதிலும் படிக்க வைப்பதிலும் காட்டுங்கள்.
உங்களுக்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் வந்து கேளுங்கள். என் வீட்டு கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும்” என்றார்.

நிகழ்ச்சியில், நடிகர்கள் மோகன்லால், சிவக்குமார், பாலகிருஷ்ணா,  சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம் ரவி, தியாகராஜன், பிரசாந்த்,  சிவகார்த்திகேயன்,  ஜீவா, விக்ரம் பிரபு, விவேக், விஜய் சேதுபதி, ஆர்யா, ஆரி, சிபிராஜ், ஜெகன், மயில்சாமி, விஷ்ணு மற்றும் நடிகைகள் காஜல் அகர்வால், ஸ்ரேயா, டாப்சி, நிக்கி கல்ராணி, ரம்யா நம்பீசன்,  இனியா, சுஹாசினி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles