பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!

Monday, August 21, 2017

‘தி ஹெல்ப்’
உலக சினிமா என்கிற வார்த்தை இன்று தமிழ் சினிமா உதவி இயக்குநர்களின் மத்தியில் அதிகம் புழக்கத்தில் உள்ள வார்த்தையாக மாறிவிட்டதற்கு காரணம், நவீன இலக்கிய உலகில் நிகழ்ந்த மாற்றங்கள் தான். குறிப்பாக, ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் (உலக சினிமா பாகம் 1, 2), எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (உலக சினிமா), இயக்குநர் எம். சிவக்குமார் (சினிமா கோட்பாடு), எழுத்தாளர் அஜயன் பாலா (மார்லன் பிராண்டோ) உள்ளிட்ட பலர் தொடர்ச்சியாக பல தரப்பட்ட கோட்பாடுகளையும், திரைக்கதை உத்திகளையும், கதையமைப்புகளையும், தொழில்நுட்பங்களையும் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினர்.

இதன் தொடர்ச்சியாகவே,  உலக சினிமா குறித்த பார்வை விரிவடைந்திருக்கிறது!

அதுமட்டுமா? கூடவே, தமிழ் சினிமாவும் தனக்குள் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. மாறுபட்ட கதைகள், பரிசோதனை முயற்சிகள் என உலக அரங்கில் நாம் கம்பீரமாய் நிற்கவும் வைத்திருக்கிறது. உதாரணத்துக்கு இயக்குநர்கள் மிஷ்கின், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ் போன்றோர் உலக சினிமாவின் பாதிப்புகளில் இருந்து தொடர்ச்சியாக படங்களை இயக்கி, வருகின்றனர். அதுபற்றிய விவாதங்களும் விமர்சனங்களும் ஜரூராக கோலிவுட்டில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. 

ஆரம்பத்தில், உலக சினிமா டி.வி.டி.க்களை சென்னையில் ‘டிக் டாக்’ என்கிற ஒரேயொரு கடையில் மட்டுமே வாடகைக்கு எடுக்க முடியும். வாய்ப்பும் வசதியும் இருந்தவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அந்நாட்டு படங்களைப் பார்த்துவிட்டு வந்து கோடம்பாக்கத்தில் வந்து படங்களை இயக்கி, வெற்றிவாகை சூடி, கல்லா கட்டிய கதைகளும் இங்கே ஏராளம். இப்படியாக இருந்த தமிழ் சினிமாவின் சூழல் தான் இணையம் என்கிற வரத்தின் வாயிலாக எல்லோரும் உலக சினிமாக்களை தேடிப் படிக்கவும், தரவிறக்கம் செய்து பார்க்கவும் வழி பிறந்தது. இதனால் பல நாடுகளின் திரைப்படங்கள் பலரின் பார்வைக்கு வந்தன.

வழக்கம்போல, முதலில் கமர்ஷியல் பக்கம் மட்டுமே திரும்பிய கவனம், பிறகு மெல்ல நவீன யதார்த்த வகை சினிமாக்களின் மீதும் திரும்பியது. அப்படித்தான் திரைப்படக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே கண்டு வந்த ‘பை சைக்கிள் தீவ்ஸ்’, ‘தி சில்ரன் ஆஃப் ஹெவன்’ போன்ற படங்கள் பெரும் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதுபோலவே, சென்னையில் உலக சினிமா ஆர்வலர்களால் பல்வேறு அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளின் உதவியோடு திரைப்படங்கள் பெறப்பட்டு, சினிமா ஆர்வலர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டன. இதில் காலப்போக்கில் பல காணாமல் போய்விட்டாலும், தொடர்ந்து களத்தில் நின்று உலகத் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பௌண்டேஷன்’ என்ற அமைப்பினர். அவர்களால், இணையத்திலும் காணக் கிடைக்காத ‘கான்ஸ்’ உள்ளிட்ட திரைப்பட விருதுகளை பெறும், புதிய படங்களும் உலக சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. 

இப்படியான நீண்ட வரலாற்றை கொண்ட உலக சினிமாவில் இப்போது சிறுவர் சினிமா, அயல் சினிமா போன்ற வார்த்தைகளில் தனித் தனியே படங்கள் பிரிக்கப்பட்டு, எழுதப்படுகின்றன. அந்த அடிப்படையில் உருவானதுதான் ‘பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்’. ஏறக்குறைய 24 படங்களை இதுவரை மனம் இதழில், நாம் அலசி வந்தோம். உண்மையில், இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி. வாசகர்களாகிய உங்களின் ஆதரவால் தான் இது சாத்தியமானது. அதற்காக, இங்கே நான் நன்றி கூற கடமைப்பட்டவனாகிறேன். 25 என்பது எப்போதும் ஒரு நிறைவுக்கான குறியீடு. அப்படியே, இந்த இதழில் ‘தி ஹெல்ப்’ என்கிற படத்தோடு இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். 

படத்தின் தலைப்பே கதையை உங்களுக்கு சொல்லியிருக்கும். அமெரிக்க செல்வந்தர்களிடம் அடிமையாக வாழ்ந்த ஆப்பிரிக்க மத்திய வயதுடைய பெண்களின் துயரக் கதைதான் ‘தி ஹெல்ப்’. அந்தப் பெண்களுக்கு ஒரு நிருபர் வாயிலாக விடியல் பிறக்கிறது. அது எப்படி? என்பதுதான் படத்தின் டீடெய்ல். இப்படத்தை டேட் டெய்லர் என்பவர் இயக்கியுள்ளார். கேத்ரின் ஸ்டாக்கெட்ஸ் என்பவர் எழுதிய ‘தி ஹெல்ப்’ நாவலை அடிப்படையாக வைத்து, இப்படம் உருவாகியுள்ளது. அமெரிக்காவில் 2011 ஆம் ஆண்டில் வெளியான இப்படம்,  ஆஸ்கர் விருது உள்பட 79 சர்வதேச விருதுகளை பெற்றது. மேலும் 116 உலகத் திரைப்பட விழாக்களில் பரிந்துரைக்கப்பட்டது.

இப்படம் பற்றி, வழக்கம்போல, நான் விரிவாக சொல்லப்போவதில்லை. காரணம், இதுவரை நீங்கள் இத்தொடரை தொடர்ச்சியாக வாசித்திருந்தால் அது உங்களுக்கு அவசியமானதாக இருக்காது. ஆகவே, கூடுமானவரை இந்தப் படத்தை தரவிறக்கம் செய்தாவது பார்த்து விடுங்கள். இப்படத்தை எனக்கு பரிந்துரைத்தவரும் ஒரு பெண்தான். ஆகவே, இந்தத் தொடரை அவருக்கே சமர்ப்பிக்கிறேன்! 

(தி என்ட்)

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles