நடிகர் அல்வா வாசு மரணம் தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

Friday, August 18, 2017

தமிழ் சினிமாவில் சுமார் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும்  நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றி, பின்னர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக மாறினார். ‘அமைதிப்படை’, ‘அருணாச்சலம்’, ‘சிவாஜி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.

கல்லீரல் பாதிப்பால் மதுரை தனியார் மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் அளிக்காததால், நேற்று நள்ளிரவு சுமார் 10.30 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது. நடிகர்  அல்வா வாசுவின் மனைவி அமுதா வாசுதேவன். இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார். அவரின் மரணம், குடும்பத்தாரை மட்டுமின்றி, திரையுலகினரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நடிகர் அல்வா வாசு மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “திரு அல்வா வாசு அவர்கள் உதவி இயக்குனராக திரைப்பட வாழக்கையைத் தொடங்கி பின்னர் நடிகராகி,  புகழ் பெற்றவர். அவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இரண்டு தினங்களுக்கு முன் இனி சிகிச்சை பலன் அளிக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டு நேற்று அவரது இல்லத்தில் காலமானார். மேலும் நடிகர் சமூகம் சார்பாக அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் துக்கத்தில்  தென்னிந்திய நடிகர் சங்கம் பங்கு கொண்டு அன்னாரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிரார்த்திக்கிறோம்" 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles