பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!

Friday, April 28, 2017

தி வே ஹோம்!
உலக அளவில் இப்போது கொரியப் படங்களுக்கு தனி மவுசு ஏற்பட்டு உள்ளது. அதற்கு காரணம், அவர்கள் அன்றாடம் நாம் கவனிக்கத் தவறுகிற சம்பவங்களில் இருந்து கதைகளை உருவாக்கி, அனைவரின் மனதையும் கொள்யைடிப்பது தான்.

அவ்வகையில் அவர்களின் ஒவ்வொரு படங்களும் ஈரான் திரைப்படங்களுக்கு அடுத்தப்படியாக உலக திரைப்பட விழாக்களில் கடும் போட்டியை உருவாக்குகின்றன. அந்தவகையில் கொரிய மொழியில் உருவான 'மெமரீஸ் ஆஃப் மர்டர்', 'மை ஸாஸி கேர்ள்' போன்ற படங்களை மையமாக வைத்து தமிழில், இருபதுக்கும் அதிகமாக படங்கள் உருவாகியிருக்கின்றன என்றால், நீங்கள் வாய் பிளப்பீர்கள். இவ்விரு படங்களை மட்டுமே காப்பியடித்து, கோலிவுட்டில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்ட இயக்குநர்களும் அடங்குவர். அப்படியான மகத்துவம் கொண்ட கொரிய படங்களில் முக்கியமானது 'தி வே ஹோம்'. 

'தலைமுறை இடைவெளி' என்பதே படத்தின் அவுட்லைனாக இருந்தாலும், அந்தப் படத்தின் திரைக்கதை உத்தி, நம்மை கட்டிப்போட்டு விடும். கோடை விடுமுறையில் இருக்கிறான் யூ சாயிங் ஹு (சிறுவன்), வேலையில்லாமல் இருக்கும் யூ சாயிங்கின் அம்மா டாங் ஹியூ ஹீ, மலைக்கிராமம் ஒன்றில் வசிக்கும் தன்னுடைய அம்மா கிம் யூல் பூனிடம் (பாட்டி) விட்டுவிட்டு வர கிளம்புகிறாள். பல பேருந்து பயணங்களுக்குப் பிறகு, அம்மாவும் பையனும் அந்த இடத்தை அடைகின்றனர். அந்த ஊருக்கு செல்லும் பேருந்திலேயே கிராமத்து மனிதர்களின் இயல்புகள் சிறுவனுக்கு பிடிப்பதில்லை. யூ சாயிங் ஹு பிடிவாதமாக திரும்பி, நகரத்துக்கு செல்ல அவனது அம்மாவிடம் அடம் பிடிக்கிறான். அவனை ரெண்டு சாத்து முதுகில் சாத்தி, பாட்டியோடு தங்கவைத்துவிட்டு திரும்புகிறாள் டாங் ஹியூ ஹீ. இதற்குப் பிறகுதான் படத்தின் கதையே துவங்குகிறது. 

கிராமத்தின் வாழ்க்கை எப்படியானது.? அங்குள்ள மனிதர்கள் எவ்வாறு ஒவ்வொரு நாளையும் கடந்து போகிறார்கள்? முழுக்க முழுக்க நகரத்தில் வளர்ந்த ஒரு சிறுவன் (பீட்ஸா, பர்கர், வீடியோ கேம்ஸ், கார்ட்டூன் சேனல்) எந்த வசதியும் இல்லாத கிராமத்தோடு எப்படி ஒத்துப்போகிறான்? பேச இயலாத, வயது முதிர்ந்த பாட்டிக்கும் மழலை மனம் மாறாத பேரனுக்குமான வாழ்வு எத்தகையதாக இருக்கும்? இப்படியான பல நூறு கேள்விகளுக்கு கவித்துமான பதில்கள் படம் நெடுக, கொட்டி கிடக்கின்றன. இதைப் பற்றியெல்லாம் விரிவாக சொன்னால், உங்களுக்கு படம் பார்க்கும்போது சுவாரஸ்யம் போய்விடும் என்பதால், இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். ஆனால், படத்தின் துவக்கம் மற்றும் இறுதிக்காட்சி பற்றி சொல்லியாக வேண்டும்.

தன்னுடைய தாயை திருப்பி அனுப்பிவிட்டு  யூ சாயிங் ஹு பேச்சற்று நின்றுகொண்டிருப்பான். அப்போது அவன் கையை பிடித்து, வீட்டுக்கு அழைத்து செல்ல பாட்டி முற்படுவாள். அப்போது, அவளின் கையை உதறிவிட்டு, கோபமாக பார்ப்பான். இப்போது அவள், தன் நெஞ்சில் கைவைத்து ஒரு வட்டம் போடுவாள் (இப்படி செய்தால் 'தன்னை மன்னித்துவிடு' என்று அர்த்தம்). ஆனால், இதை தாமதமாக புரிந்துகொள்ளும் பேரன், கடைசியாக அந்தக் கிராமத்தை விட்டு செல்ல மனமில்லாமல் பேருந்தில் ஏறுவான். அப்போது அவன் பாட்டியிடம் தன்னை மன்னித்துவிடு என்று சொல்லும்விதமாக கலங்கிய கண்களுடன் தன் நெஞ்சில் கை வைத்து வட்டமிடுவான். அத்தகைய காட்சியை பார்க்கும் எத்தகைய கல்நெஞ்சமும் கலங்கிவிடும்!. முதுமையிலும் கூட வாழ்வை அன்பால் நிரப்புவது பெண்கள்தான் என்பதை இப்படம் அழுத்தமாக உங்களுக்கு சொல்லும். கோடை விடுமுறைக்கு தாத்தா, பாட்டியை பார்க்க செல்ல உள்ள ஒவ்வொருவரும் வயது வித்தியாசம் இன்றி இப்படத்தை பார்க்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்!

தென் கொரியாவில் 2002ல் எடுக்கப்பட்ட இப்படம், கொரிய மொழியில் உருவானது. அந்த நாட்டுக்கே உரிய கலாச்சார பின்னணியில் படம் எடுக்கப்பட்டிருப்பது இதன் இன்னொரு கூடுதல் அம்சம். ஒரு பாட்டி, பேரன் ஆகிய இரண்டு பாத்திரங்களை வைத்துக்கொண்டு மொத்தக் கதையையும் நகர்த்திய இயக்குநர் லீ ஜியாங் கியாங்கை பாராட்டியே ஆக வேண்டும். இந்தப் படம் டொரண்டோ உலகத் திரைப்பட விழாவில் 'சிறந்த படம்', 'சிறந்த திரைக்கதை'க்கான விருதை தட்டிச் சென்றது. தமிழில் இப்படத்தின் தாக்கத்தில் வெளியான 'தலைமுறைகள்' தேசிய விருதை பெற்றதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். மறைந்த இயக்குநர் பாலுமகேந்திரா கடைசியாக இயக்கிய இப்படம். முழுக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவானதும் முக்கியமானது. அப்படியாக, பலரின் தூக்கத்தை கெடுத்த இப்படம், இப்போதும் உலகில் எங்கோ யாரோ ஒருவரை பாதித்த வண்ணம் இருக்கிறது. அதுவே இந்தப் படத்தின் வெற்றி!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles