கோடைக்கு ஏற்ற ஆடை காட்டனே! - காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம் 

Friday, April 28, 2017

சுள்ளென்று சுட்டெரிக்கும் இந்தக் கோடையை அழகான பல ஆடைகள் உடுத்தி கொண்டாட வேண்டும் என்று பலரும் ஆசை படுவது இயல்புதான். ஆனால் பர்ஸை கடிக்காமல் எங்கே வாங்குவது, யாரிடம் கேட்கலாம் என்று யோசித்தால், பளீரென்று நம் நினைவிற்கு வருபவர் செலிபிரிட்டிகளின் காஸ்ட்யூம் டிசைனர் அம்ரிதா ராம். கோடைக்கான டிப்ஸ்கள் தந்து கொஞ்சம் அவர் உதவினார்.

“சம்மர் வந்தாலே எனக்கு கொண்டாட்டம் தான். எந்த வகையான ஆடைகளையும் கூட நீங்க உடுத்தலாம். சென்னை, பாந்தியன் சாலைக்கு போனீங்கன்னா, வகை வகையான காட்டன் துணிகள் இருக்கு. விலையும் மலிவுதான். நான் பேஷன் டிசைனிங் படித்துக் கொண்டிருந்த காலத்துலருந்தே, இந்த இடத்துல துணிமணிகள் ரொம்ப சீப்பாகத்தான் கிடைக்கும். அதுனால, நீங்க உங்களுக்கு பிடித்த துணிகளை இங்கே போய் அள்ளிட்டு வரலாம். உங்கள் உடல்வாகுக்கு ஏற்றது மாதிரி டிசைன் செஞ்சு போட்டுக்கலாம். 

காட்டன் வகைகள்னு எடுத்துகிட்டீங்கன்னா, கலம்காரி, இக்கத், வேங்கடகிரி, ப்ளாக் பிரிண்ட்ஸ் இப்படி பல இருக்கு. இதுல எது வேணும்னாலும் வாங்கி, உங்களுக்கு ஏற்ற மாதிரி நீங்க ஸ்டிச் பண்ணிக்கலாம். இந்திய நாட்டோட வெப்ப மண்டலம், ரொம்ப அதிகமா இருக்கும். டில்லி போன்ற மாநிலங்கள்ல, நமக்கு வியர்க்கவே வியற்காது. ரொம்ப சூடா இருக்கும். ஆனால், சென்னை வெயில்ல, நமக்கு வேர்வை அதிகம் எடுக்கும். அதுக்கு பெஸ்ட் காட்டன்தான். உங்க வேர்வையை அது உறிஞ்சுக்கும். ஜூட் காட்டன்ஸ் கூட கொஞ்சம் திக்னஸ் அதிகம், அதனால நம்ம சென்னை வெயிலுக்கு அது அவ்ளோ சரியா வராது. லினன்ஸ் ரொம்ப நல்லா இருக்கும் அதை நீங்க ட்ரை பண்ணலாம். பட்டு, டெரிக்காட்டன்களை அவாய்ட் பண்ணுங்க. 

நீங்க கடைபிடிக்கிற ஃபேஷன் உங்களுக்கு, வசதியா இருக்கணும். நான் ஒர்க் பண்ணுற படங்கள்ல கூட, என்னோட ஹீரோயின்ஸ் நான் கொடுக்குற காஸ்ட்யூம்ல எவ்ளோ கம்போர்ட்டபிளா இருக்காங்கன்னுதான் பார்ப்பேன். பெரிய பெரிய மெட்டல் தோடுகள் போடாதீங்க. வெயில் காலத்துல அது ரொம்ப எரிச்சலைக் கொடுக்கும். அளவான நகைகளை தேர்ந்தெடுத்து போட்டீங்கன்னா பார்க்க நல்லாயிருக்கும். தலை முடியை விரிச்சு போடாதீங்க. அதிகமான, வெப்பத்தால், உங்க முடி வலுவிழக்கும். கழுத்து பகுதிகள்ல அதிகமான அழுக்கு சேரும். நல்ல எஸ்.பி.எப் இருக்குற சன்ஸ்க்ரீனை உபயோகப் படுத்துங்க. 

செருப்புகள் தவிர்த்திட்டு, ஷூஸ் அதிகமா பயன்படுத்துங்க. ஏன்னா, உள்ளுக்குள்ள நீங்க போடுற சாக்ஸ், உங்க பாதத்துல ஏற்படுற வேர்வையை உறிஞ்சுடும். 

சம்மர்ல வரும் அதீத வேர்வையினால, உடல்ல கெட்ட  பாக்டீரியாக்கள் தோன்றும். அதற்கு, வெதுவெதுப்பான வெந்நீர்ல அருமையான குளியல் எடுத்துக்குங்க. என்னடா சம்மர்ல சூடான குளியலான்னு கேட்காதீங்க. ட்ரை செஞ்சு பாருங்க. உங்களுக்கே புரியும். வெயில் காலம் வந்துருச்சேன்னு எரிச்சலாகாம விதவிதமான ஆடைகள் உடுத்தி சம்மரை கொண்டாடுங்க!” என்று விரட்டி அடிக்கும் வெயிலில், பெரு மழை பெய்தது போல தன்னுடைய டிப்ஸ்களை முடித்துக்கொண்டார். வாசகர்களுக்கும் இந்த குறிப்புகள் உதவும் என நம்புகிறோம்!

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles