கல்வியை மையப்படுத்திய, யதார்த்தப் படம் 'திரி'

Tuesday, April 18, 2017

"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா" படத்தைத் தொடர்ந்து அஸ்வின் காகமானு, ஸ்வாதி ரெட்டி மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் 'திரி'. இப்படத்தை 'சீ ஷோர் கோல்டு புரொடக்ஷன்ஸ்' சார்பில் ஆ.பி.பாலகோபி, ஏ.கே.பாலமுருகன் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன் இசைத் தகட்டை வெளியிட தயாரிப்பாளர் ரகுநாதன் பெற்றுக் கொண்டார். 
 

இந்தப் படம் குறித்து நாயகன் அஸ்வின் பேசும்போது, "கல்வியை மையப்படுத்திய, யதார்த்தமான ஒரு கமர்ஷியல் படம் 'திரி'.  எனக்கு டான்ஸ்னாலே கால் உதறும். முடிந்தவரை ஆடியிருக்கிறேன். குடும்பத்தோடு பார்க்க கூடிய படம்"  என்றார். அவரைத் தொடர்ந்து  பேசிய இயக்குநர் அசோக் அமிர்தராஜ், "465 படங்களை பார்த்து விட்டு தான் படம் இயக்கவே வந்தேன். 'துருவங்கள் 16', 'மாநகரம்'  படங்கள் போல வந்து கொண்டிருக்கும் நேரத்தில் யதார்த்தமான கமெர்ஷியல் படமா? என்று நினைக்க வேண்டாம். நிச்சயம் ரசிகர்களை இந்தப் படம் திருப்திப்படுத்தும். என் நண்பர்கள் தான் எனக்கு உறுதுணையாய் இருந்தார்கள். அவர்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்றார்.

தொடர்ந்து நடிகர் ஜெயபிரகாஷ் பேசும்போது, "பொதுவாக நான் பிரிவியூக்களில் படம் பார்ப்பதில்லை. அங்கே உண்மையை நம் கண்கள் காட்டி கொடுத்து விடும். ரசிகர்களோடு அமர்ந்து படம் பார்ப்பது தான் பிடிக்கும். இயக்குனர் அசோக் அமிர்தராஜ் யாரிடமும் வேலை செய்ததில்லை. அவரே தயாரிக்க முடிவெடுத்திருந்தார். அந்த நேரத்தில் தான் பாலகோபி போல சரியான ஆட்கள் படத்துக்குள் வந்தார்கள். நான் கருத்து சொல்வது மாதிரியே நிறைய படங்கள் என்னை தேடி வருகின்றன. கருத்து சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் போதும்" என்றார். 

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகி ஸ்வாதி ரெட்டி, தயாரிப்பாளர் ரகுநாதன், காமன் மேன் கணேஷ், எடிட்டர் ராஜா சேதுபதி, இசையமைப்பாளர் அஜீஷ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பேசினர். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles