விஜய் சேதுபதி - 25!

Monday, April 17, 2017

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் வளர்ச்சி, ஒரே நாளில் ஒரே பாட்டில் உயர்ந்தது அல்ல; அது பல வருடங்களாக செதுக்கிய உழைப்பினால் நடந்தது. ஒரு காசாளராக தொடங்கிய தன்னுடைய பயணத்தில் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு இவற்றினால் இன்று ஒரு சினிமா நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். இதில் அவர், ஏற்றங்களையும் இறக்கங்களையும் கண்டார்.  அதனால் எந்தவிதமான சலனத்தையும் அடைந்ததில்லை. தன் முன்னால் உள்ள கதையும், பாத்திரமும் அதற்கு தன்னை எப்படி ஒப்புக் கொடுக்கலாம் என்கிற சிந்தனையும் மட்டுமே அவரிடம் இருந்து வருகிறது. அதுதான் அவரின் பலம்! 

விஜய் சேதுபதியின் 25-வது படத்தை இயக்குபவர் "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன். இருவரும் இணையும் இரண்டாவது படம். அதற்கு "சீதக்காதி" என பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை 'பேஷன்   ஸ்டுடியோஸ்' என்கிற பட நிறுவனத்தின் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம், அருண் வைத்தியநாதன் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் பேசும்போது,
 
"கதை அமைப்பில் மிக வித்தியாசமானது "சீதக்காதி". இந்தப் படத்தின் கதைக்கு விஜய் சேதுபதி மிக மிக பொருத்தமானவர். நாங்கள் இணையும் இரண்டாவது படம் இது, என்பதையும் தாண்டி, இந்த கதாப்பாத்திரத்துக்கு அவர், உயிர் வடிவம் கொடுக்க போகிறார் என்பதே எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாங்கள் மீண்டும் இணைய இருக்கும் இந்தப் படம் பெரும் எதிர்ப்பார்ப்பை கூட்டும் என்பதில் சந்தேகம் இல்லை!" என்றார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

மிக குறுகிய காலத்தில், தமிழ் சினிமாவில் 25-வது படத்தை தொட்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இன்றைய சூழலில் இது பெரிய எண்ணிக்கை. கோலிவுட்டில் நிலவும் கடுமையான போட்டியில் ஒருவர் இவ்வளவு பெரிய உயரத்துக்கு செல்வது அசாத்தியமானது!. அவரின் வெற்றிக்கு மற்றொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது, திரை உலகில் எல்லோரையும் அனுசரித்து, அரவணைத்து போகிறவர் என்கிற பிம்பம். ஆக, எதுவாயினும் இனி விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். இனி அவருக்கான இடம் அவரிடமே!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles