தமிழ் சினிமாவின் மையமாக திகழும் ஜி ஸ்டுடியோ! நடிகர் கமல்ஹாசன்

Monday, April 17, 2017

தமிழ் சினிமாவுக்கு பல விதங்களில் உதவி வந்த பிரபல ஸ்டுடியோக்கள் இன்று இல்லை. பெரும்பாலும் அவை வணிக மையங்களாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும், மருத்துவமனைகளாகவும் மாறிவிட்டன. விதிவிலக்காக சில ஸ்டுடியோக்களில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே நடக்கின்றன. நிலைமை இப்படியிருக்க, சினிமாவுக்கு புத்துயிர் அளிக்கும் பொருட்டு, நவீன வசதிகளுடன் உருவாகியுள்ளது 'ஜி ஸ்டுடியோ'. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள வேலப்பன் சாவடியில், இந்த ஸ்டுடியோ நிறுவப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா நேற்று நடைபெற்றது. பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொண்ட இவ்விழாவில், இசையமைப்பாளர் இளையராஜா குத்து விளக்கு ஏற்றி, துவக்கி வைத்தார். இந்த ஸ்டுடியோவை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, 

"எனது இல்லத்திற்கு பிறகு நான் அதிகமாக வாழ்ந்த இடம் ஸ்டுடியோக்கள் தான். தென்னிந்தியாவில் பெருமைக்குரிய பல ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதை கேள்விப்பட்டு, நான் மிகவும் மன வேதனை அடைந்தேன். திரையுலகிற்கு திரு. கோபாலன் செய்திருக்கும் இத்தகைய அர்ப்பணிப்பை 'தர்மா' என்று தான் நான் சொல்லுவேன். ஒரு காலத்தில் எப்படி ஆற்காடு சாலை ஸ்டுடியோக்களின் அடையாளமாக திகழ்ந்ததோ, அதே போல் இந்த 'ஜி ஸ்டுடியோ' மூலம் விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையும் தமிழ் சினிமாவின் மையமாக திகழும். வர்த்தகம் என்பதை தாண்டி சினிமா மீது காதல் இருந்தால் தான், இத்தகைய பிரம்மாண்ட ஸ்டுடியோவை திரையுலகிற்கு அர்ப்பணிக்க முடியும்" என்றார்.

''தரத்திலும், அதி நவீன வசதிகளிலும் ஜி ஸ்டுடியோஸ் சிறந்து விளங்கும்'' என்று உறுதியளித்தார் கோகுலம் குழுமத்தின் நிறுவனரான கோபாலன். மிகவும் கோலாகலமாக நடைபெற்ற இவ்விழாவில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, சிறப்பித்தனர். ஸ்டுடியோக்கள் அழிந்துவரும் நிலையில், இதுபோன்ற முயற்சிகள் வரவேற்கத்தக்கதே!

 - கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles