விமர்சனங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும்! - தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

Thursday, April 13, 2017

தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடத் திரையுலகிலும் கூட அனைவருக்கும் நன்கு பரிச்சயமான பெயர் தனஞ்ஜெயன். திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், விமர்சகர், திரைப்படக் கல்லூரி நிறுவனர் என பன்முகம் கொண்டவர். தற்போது இரண்டாவது முறையாக தேசிய விருதை வென்றிருக்கிறார். சிறந்த திரைப்பட ஆய்வாளருக்கான விருது, இப்போது அவரை அலங்கரித்துள்ளது.

விடாமல் துரத்தும் வாழ்த்து அழைப்புகளுக்கு மத்தியில் நம்மிடம் பேசினார்!

"சினிமா நல்லபடியாக உருவாக, என்னவெல்லாம் தேவை என்பது குறித்து எழுதப்படும் விமர்சனங்களுக்காகத்தான் தேசிய விருதை பெற்றுள்ளேன். இது சினிமா விமர்சனத்துக்கு அளிக்கப்படும் விருது அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 'தி இந்து', 'டைம்ஸ் ஆஃப் இன்டியா', 'தினத்தந்தி நெக்ஸ்ட்' போன்ற இதழ்களிலும் மற்றும் 'உயிர்மை' உள்ளிட்ட மாத இதழ்களிலும் சினிமாவின் வளர்ச்சிக்காக என்னவெல்லாம் செய்யலாம்; செய்ய வேண்டும் என்பது குறித்து எழுதி, வந்திருக்கிறேன். இப்படியாக நான் எழுதிய கட்டுரைகளில் இருந்து பத்தை தேர்வு செய்து, விருது குழுவுக்கு அனுப்பியிருந்தேன். அதை அவர்கள் பரிசீலித்து திரைப்பட ஆய்வாளர் விருதை எனக்கு அளித்துள்ளனர். இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது!

அனைத்து மொழிகளிலும் இருந்து இந்த விருதுக்காக ஏராளமான பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். 33 பேரில் இருந்து, என்னை தேர்ந்தெடுத்தார்கள் என்பது ஆச்சர்யமானது. ஏனெனில், இந்தப் பட்டியலில் பிரபல எழுத்தாளர்களும் இருந்தார்கள். இப்போது எனக்கு இன்னும் நிறைய எழுத வேண்டும் என்ற வேட்கையை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய விருது அறிவிக்கப்பட்ட உடனேயே, எனக்கு அழைப்பு வந்தது இயக்குநர் பாலா சாரிடம் இருந்துதான். அது எனக்கு வியப்பாக இருந்தது. "பாஃப்டா என்கிற திரைப்படக் கல்லூரியை நடத்தி வருகிறீர்கள். அப்படியிருக்கும்போது, எழுத்துக்காக உங்களுக்கு விருது என்பது முக்கியமானது. ஒரு நல்ல ஆசிரியர் தான், நல்ல எழுத்தாளனாகவும் இருக்க முடியும். இது உங்களுக்கு இரண்டாவது இது. இது உங்க நிறுவனத்துக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம்!" என்றார். தேசிய விருது பெற்ற ஒரு மாபெரும் இயக்குநர், என்னை பாராட்டியது நெகிழ்ச்சியாகவும் இருந்தது. 

என்னைப் பொருத்தவரை, சினிமா விமர்சகர் என்பவர் பிரச்சினைகளை மட்டுமே, சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு திரைப்படத்தை எடுத்துக்கொண்டு விமர்சிக்கும்போது அதில் உள்ள நல்ல விஷயங்கள் குறித்தும் பேச வேண்டும். அதேபோன்று குறைகளையும் சுட்டிக் காட்டணும். அவர் ஒரு தராசு போல நின்று, நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருக்கு. தனக்குப் பிடித்தவர்கள் என்றால் அவரை, மேலே தூக்கி வைத்து, ஒரேயடியாக புகழ்வதும், பிடிக்கவில்லை என்றால் கண்ணை மூடிக்கொண்டு விமர்சிப்பதும் நடக்கிறது. இது சில நேரங்களில் எனக்கு, தமிழ் சினிமா விமர்சகர்கள் தவறான பாதையில் செல்கிறார்களோ என்று கூட யோசிப்பது உண்டு. படம் பார்க்க தியேட்டருக்கு செல்லும்போது, எந்த எதிர்பார்ப்பும் இன்றிதான் செல்வேன். அதேபோல, படம் பிடிக்கவில்லை என்றால், அமைதியாக திரும்பி விடுவேன். ஆகவே, விமர்சனங்கள் நடுநிலையோடு இருக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும், வேண்டுகோளும் கூட!. 

ஒரு கட்டுரையை எழுதி, முடித்த உடனே அதை என்னுடைய மகளிடம் தான் காட்டுவேன். அவர் ஒரு தேர்ந்த வாசகர். சில விஷயங்களை அவர் திருத்தச் சொல்லுவார். அப்படியாக திருத்தி, எழுதும்போது அந்த கட்டுரை இன்னும் மேம்பட்டிருக்கும். அப்படித்தான் என்னுடைய எல்லா கட்டுரைகளும் வெளியாகும். என்னுடைய முதல் வாசகரும் என் மகள்தான். இந்த விருதில் அவருக்கும் பங்கு உண்டு!" என்று புன்னகைத்தவாறே முடித்தார் தனஞ்ஜெயன். அவரது மகளையும் ஒரு பேட்டி எடுக்க வேண்டும் என்று தோன்றியது!

- கிராபியென் ப்ளாக்

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles