பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்! சமூகத்தின் போலி முகத்தை தோலுரிப்பது பெண்களே!

Thursday, April 13, 2017

டாக்ஸி (Taxi)

உலக சினிமா என்றாலே பலரும் தமிழ் சினிமாச் சூழலில் நினைத்துக்கொள்வது அது ஈரானிய சினிமா தான். உண்மையில் உலக சினிமா என்பது நம்மூர் சினிமாவாகவும் இருக்க முடியும். சமூக மாற்றத்திற்கான விதையை தூவிச் செல்லும் தரமான படங்கள் யாவும் உலக சினிமாக்களே!.

அதேபோல, அவ்வகையான சினிமாக்கள் என்றதுமே, குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் படங்கள் என்றொரு தோற்றமும் நம்மிடையே உள்ளது. உண்மை அதுவல்ல; பெரும் முதலீட்டிலும் உலக சினிமாக்கள் எடுக்கப்படுவது உண்டு. 

ஒவ்வொரு படமும் எந்த அளவுக்கு மக்களின் வாழ்வை பிரதிபலிக்கிறது என்பதை பொருத்தே அவற்றின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த உலக சினிமாக்களின் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வு சார்ந்த பிரச்சினைகளே அதிகமாக அலசப்படுகின்றன. மேலும், இன்றைய உலகமயமாக்கலால் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களும் கதைக் கருக்களாக எடுத்துக்கொள்ளப்படுகின்ற. இவை எல்லாவற்றையும் தாண்டி பெண்களின் உலகை படம் பிடிப்பதில், அண்மைக் கால சினிமாக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன!

பெண்களின் உலகை புரிந்துகொள்வது, அவர்களின் மனதை அறிவது என்பது இன்றுவரை ஒரு புரியாத புதிராகவே இருந்து வருகிறது. அவர்களின் அக உலகம் என்னவிதமாய் இயங்குகிறது என்பதும், எதை நோக்கி அவர்களது வாழ்வு செல்கிறது என்பதும் இன்று விவாதங்களுக்கு உட்பட்டிருக்கின்றன. பொருளாதார மாற்றங்களால், வீட்டிலிருந்து வெளியேறி பெண்களும் ஆணுக்கு நிகராய் அனைத்து துறைகளிலும் நுழைந்துவிட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் உருவான வாழ்க்கையும் இன்றைய உலக சினிமா ஆர்வலர்களுக்கு மிகச் சரியான கதைக் களமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆகவேதான், உலகத் திரைப்பட விழாக்களில் அதிகமாக, பெண்களை மையமாக வைத்து உருவான படங்களின் வருகை என்பது கூடிக்கொண்டே போகிறது!

உண்மையில், பெண்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும்? அவர்களின் வாழ்வியல் சூழல் என்னவிதமாக இயங்கிக்கொண்டிருக்கிறது? இப்படியான நிறைய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஈரானில் தான் அதிகமான படங்கள் உருவாக்கப்படுகின்றன. குழந்தைகளின் உலகத்தில் நிகழும் சின்ன சின்ன மாற்றங்கள், அவர்களின் ஆசைகள், விருப்பங்கள், ஏக்கங்களையும் பதிவு செய்ததில் ஈரானிய சினிமாக்களே முன்னோடியாக இருக்கின்றன. அத்தகைய சினிமாக்கள் அங்கே உருவாகக் காரணம், அந்த நாட்டில் உள்ள கடுமையான சட்டங்களும் விதிகளும் தான்!

அமெரிக்க, ஐரோப்பிய சினிமாக்களைப் போலவோ அல்லது நம்மூர் சினிமாக்கள் மாதிரியோ அங்கே, படங்களை உருவாக்கி விட முடியாது.  அப்படியே எடுத்துவிட்டால், கடுமையான தண்டனையில் இருந்து அந்த இயக்குநர் தப்ப முடியாது. சில நேரங்களில் உயிரிழப்பு கூட, அவருக்கு நேரிடலாம். இப்படியாக உள்ள ஈரான் நாட்டில்தான் கவித்துமான படங்கள் உருவாகிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? வேறு வழியே இல்லை, நீங்கள் நம்பத்தான் வேண்டும்!

ஈரானிய சினிமாக்களின் மீது உங்களுக்கு ஆர்வம் ஏற்பட வேண்டுமானால், முதலில் நீங்கள் 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தில் இருந்து துவங்க வேண்டும். பிறகு, நீங்களும் ஈரானிய சினிமாக்களை புகழ்பாடும் நபராக மாறிவிடுவீர்கள். காரணம், நம்மூர் படங்கள் பலவற்றில் காணக் கிடைக்காத அழுத்தமான பாத்திரங்களும், அவர்களது வலி நிறைந்த வாழ்க்கையும், அவர்கள் அதை எதிர்கொள்ளும் விதம்தான். மேலும், அந்த ஊருக்கே உரிய கட்டுப்பாடுகளை அவர்கள் எப்படி பகடியாக எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான்!

மேற்கண்டவற்றை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல முடியுமா? என்றால் முடியும் என்று நிரூபித்துள்ளார் ஈரானிய இயக்குநர் ஜாபர் அனாகி. அதற்காக அவர் எடுத்துக்கொண்டது ஒரேயொரு டாக்ஸியைத்தான். என்னது? ஒரு டாக்ஸியை வைத்துக்கொண்டு இவ்வளவு பிரச்சினைகளையும் எப்படி சொல்ல முடியும்? என்றுதானே உங்களது புருவங்கள் ஆச்சர்யத்தில் உயருகிறது!. ஆமாம். 'டாக்ஸி' படத்தின் சிறப்பே அதுதான்.

ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரான் மாகாணத்தில் வாடகை டாக்ஸி ஓட்டுநர் ஜாபர் அனாகி (கதையில் காரும் அவரும் ஒரு பாத்திரமாகவே வருகிறார்கள்). நகரத்தின் ஓரிடத்தில் தொடங்கி, மற்றொரு எல்லைக்கு அவர் சென்று சேருகிறார். இதற்கு இடையே அந்தக் காரில் ஏறும் வெவ்வேறு பெண்களைக் கொண்டே, அந்த நாட்டில் நிலவும் வறுமை,  பாகுபாடு, கட்டுப்பாடுகள், விதி மீறல்கள், யதார்த்த நிலை என பலவற்றை தொட்டுச் செல்கிறார். குறிப்பாக, அந்த நாட்டில் குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள பெண்களின் நிலையை பற்றி, பெண்களே உரையாடுவதின் வழியே, உண்மை முகத்தை அடையாளம் காட்டுகிறார். சமூகத்தில் போலி முகத்தை தோலுரிப்பதில் பெண்களே எப்போதும் முதலில் இருக்கின்றனர் என்பதை 'டாக்ஸி' பார்க்கும் யாவரும் உணர முடியும். 

அதற்கு இரண்டு உதாரணங்களை படத்தில் அடிக்கோடிட்டு காட்ட முடியும். விபத்தில் சிக்கிய தன் கணவனை அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என கூறி, கணவனோடு, அந்தப் பெண்ணும் வருகிறாள். டாக்ஸி நகரத் தொடங்கியதும், அவள் அவனுடைய நிலைமையை தன்னுடைய அலைபேசியில் பதிவு செய்தபடியே வருகிறாள். ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், நான் மறுமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்கிறாள். கணவனோ, "இல்லை. இறந்தாலும், நீ என் நினைவாகவே இருக்க வேண்டும்" என்று கூறுகிறான். இதன்வழியே தொடர்ந்து பெண்கள் மீது ஆண்களின் ஆதிக்கம் என்பதும் அவர்களின் இறப்புக்கு பின்னும் தொடருகிறது என்பதை நம் பின்மண்டையில் அடித்து சொல்கிறார் இயக்குநர் ஜாபர் அனாகி!

படத்தில் பள்ளிச் சிறுமி (ஹெனா சைதி) ஒருத்தி, கையில் சின்ன கேமிரா ஒன்றுடன் ஏறுகிறாள். அப்போது, டாக்ஸி ஓட்டுநரான ஜாபர் அனாகி, கேமிராவை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய்? என்று கேட்கிறார். சினிமா எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று அந்தக் குழந்தையிடம் இருந்து பதில் வருகிறது. பிறகு, அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதன் வழியே, அந்த நாட்டில் படங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளும், அந்த ஊரிலும் கூட திரைப்பட விநியோகம் என்பது புதுமுக இயக்குநர்களுக்கு எட்டாக் கனிதான் என்பதும் நமக்கு உணர்த்தப்படுகிறது. 

இப்படி காருக்குள்ளே நடக்கும் சம்பவங்களை தனக்கு முன்னால் உள்ள ஒரு கேமிராவையும் காருக்கு முன்னால் கேமிராவையும் கொண்டு முழுக்க படம் பிடித்துள்ளார் இயக்குநர். படத்தின் சிறப்புகளில் அதுவும் ஒன்று!. எந்தப் பாத்திரம் பேசுகிறதோ, அதைநோக்கி காரை ஓட்டிக்கொண்டே அவரே திருப்புகிறார். சினிமாட்டோகிராபியின் விதிகளை மீறுவதன் வழியே புதிய யதார்த்தத்துக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். இதுதான் உலகம் முழுக்க உள்ள திரை ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்த அம்சம். ஒரு திரைப்படம் எடுக்க வேண்டுமெனில், பெரும் பொருட்செலவும் திட்டமிடலும் அவசியம் என்கிற சூழலில், அவற்றை தனது டாக்ஸி படம் மூலமாக இயக்குநர்
ஒரே தாவலில் தாண்டி விட்டார்!

2015 ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் 82 நிமிடங்கள் ஓடக் கூடியது. பெர்லின் உலகத் திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டது 'டாக்ஸி'. ஆனால், இந்தப் படத்தில் நாட்டை விமர்சித்ததற்காக இயக்குநர் ஜாபர் அனாகி படம் எடுக்கவும், பயணிக்கவும் தடை விதித்தது அந்நாட்டு அரசு. ஆகவே, அவரது சார்பாக படத்தில் நடித்த ஹெனா சைதியே படத்துக்கான விருதை பெற்றார். இந்தச் சிறுமி வேறு யாருமில்லை; ஜாபர் அனாகியின் மகள்தான்! 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles