இன்றும் நான் லெனின் சார் மாணவன்தான்!  - படத்தொகுப்பாளர் எல்.வி.கே. தாஸ்

Thursday, April 13, 2017

சினிமாவிலும், பத்திரிகைத் துறையிலும் இருவர் மிகவும் முக்கியமானவர்கள். ஒருவர் படத்தொகுப்பாளர், மற்றொருவர் உதவி ஆசிரியர். சினிமாவில் ஒழுங்கற்ற காட்சிகளை வெட்டி, ஒட்டி அதற்கொரு வடிவம் கொடுத்து, இயக்குநர் சொல்ல வந்த கருத்தை இன்னும் அழுத்தமாக்கி பார்வையாளனை கதைக்குள் அழைத்து வருவார். உதவி ஆசியரியரும் வார்த்தைகளை இன்னும் மெருகூட்டி, தேவைப்படும் இடங்களில் நீக்கியும், சேர்த்தும் அந்தப் படைப்பை செழுமைப்படுத்துவர்.

மீடியாவில், சிறந்த உதவி ஆசிரியர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. ஆனால், சினிமாவில் படத்தொகுப்பாளர்கள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே உள்ளனர். அதில் குறிப்பிடத்தகுந்தவர் எல்.வி.கே.தாஸ். 'மைனா', 'கும்கி','தொடரி' என கவித்துமான படங்களின் வழியே அடையாளம் காணப்பட்டவர். அவரிடம் உரையாடியபோது, 

இயக்குநர் பிரபுசாலமன் உடன் தொடர்ந்து, பணியாற்றியது குறித்து? 

“என்னுடைய சினிமா பயணத்தின் தொடக்க காலங்களில் பிரபு சாலமன் இயக்கும் படங்களுக்கு, நான் ட்ரைலர் கட் பண்ணி கொடுத்திட்டு இருந்தேன். அப்போதே, என்னோட வேலை, அவருக்கு ரொம்ப பிடிக்கும். ‘லாடம்’ திரைப்படத்திலேயே அவருகூட நான் பணியாற்றி இருக்கணும். அந்தச் சமயத்துல எனக்கு வேற கமிட்மென்ட் இருந்ததால, வொர்க் பண்ண முடியல. அதுக்குப் பிறகு ‘மைனா' திரைப்படத்துல தான் அவரோட முதன்முதலாக பணியாற்ற வாய்ப்பு அமைஞ்சது. நேரம் காலம் பார்க்காம நாங்க ரெண்டு பேரும் எடிட்டிங் ஸ்டூடியோவுலதான் இருப்போம். ஆடியன்ஸ் கதையை யூகிக்க விடாமல், ட்விஸ்ட் கொடுத்து, விஷுவலா எப்படி கதையை நகர்த்தலாம்னு யோசிச்சு, வேலை பார்ப்போம். எனக்கு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்ச அனுபவம் இல்லை. அதுனால பிரபு சாலமன் எனக்கு படத்தொகுப்புல  நிறைய டிப்ஸ் கொடுத்து உதவி செய்வாரு. அதோட நானும் ஒரு பார்வையாளனாக இருந்து படத்தை எடிட் செய்வேன். இப்படி ‘மைனா' திரைப்படத்துல ஆரம்பித்த எங்க பயணம் ‘தொடரி’ வரைக்கும் வந்திருக்கு!"

பிரபு சாலமனுடன் பணியாற்றும் பொழுது மறக்க முடியாத சம்பவம்? 

“அவருடன் சேர்ந்த பிறகுதான் எனக்கு ஒழுக்கம்னா என்னன்னு தெரிஞ்சுது. அவருக்கு இறை பக்தி கொஞ்சம் அதிகம், எனக்கும் அப்படித்தான். அந்த விஷயத்துல எனக்கும், பிரபு சாலமனுக்கும் ஒரு ஒற்றுமை இருந்துச்சு. படத்தோட முதல் காபி தயார் ஆகுற வரைக்கும் யார் கூடயும் பேச மாட்டாரு. அவர் குடும்பமே வந்தால் கூட, காத்திருந்து தான் அவரை சந்திக்க முடியும். வேலைக்காக,  தன்னையே ஒப்படைச்சுப்பாரு. இந்த மாதிரியான குணங்களைத்தான் அவருக்கிட்டே கத்துக்கிட்டேன்!”

இலக்கணத்தை மீறிய படத்தொகுப்பு சரியென்று நினைக்கிறீர்களா?

“நான் இன்னிவரைக்கும், படத்தொகுப்பாளர் லெனின் சாரோட மாணவன். இப்போதும் அவரோட வகுப்புகளுக்கு சென்று நான் அவர் சொல்லிக் கொடுக்குற பாடங்களை கவனிப்பேன். படத்தொகுப்பு இலக்கணத்தை முழுமையாக கத்துக்கிட்டு, "தேவைப்பட்ட இடத்தில் இலக்கணத்தை மீறுவது தப்பில்லை"ன்னு லெனின் சார் சொல்லுவார். ஆரம்பத்துல நானும், தேவையில்லாத எஃபக்ட்டுகளை போட்டுட்டு இருந்தேன். அனுபவத்தின் மூலமாகத்தான், எனக்கு எது தேவை, தேவையில்லைனு புரிஞ்சிக்க முடிஞ்சுது!”

தற்பொழுது படத்தொகுப்பு என்பது குடிசைத் தொழிலாக மாறிவிட்டதே?

“இது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கு. நான் சமீபத்துல ஒரு எடிட் ஸ்டூடியோவுக்கு போயிருந்தேன், அங்கே வரிசையா சலூன் கடை போல நாற்காலி போட்டு காதுல ஹெட்செட் மாட்டிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. கேட்டதுக்கு, "படத்தொகுப்பு செஞ்சிட்டு இருக்கோம்"னு சொன்னாங்க. படத்தொகுப்பு நல்லா வரணும்னா, இயக்குநரோட உட்காரணும். அவங்க ஸ்க்ரிப்டை உள்வாங்கணும். அழகியலோடு எப்படி இந்த ஸ்க்ரிப்டை மேலும் மெருகேற்றலாம்னு தொடர்ந்து பார்க்கணும். அப்போதான் இதனை முழுசா கத்துக்க முடியும். சும்மா ஒரு கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர் இருந்தா மட்டும், படத்தொகுப்பு செஞ்சிட முடியாது!”

தேர்ந்தெடுத்து படங்கள் செய்கிறீர்களே? ஏன்?

“பெருசா காரணம் இல்லை. நண்பர்கள், தெரிந்தவர்கள் படத்துல மட்டும் தான் வேலை செய்யுறேன். ஒரு படம் செய்தாலும், அதைப் பற்றி நூறு வருடங்கள் பேசணும்னு நினைக்கிறேன்!”

‘அட்டு’ திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து?

“ ‘அட்டு’ திரைப்படத்துல பணியாற்றிய எல்லாருமே புது முகங்கள்தான். எந்த ஒரு இயக்குநருக்கும், தன்னோட முதல் படம் வெற்றி பெறணும்னு, ஆசை இருப்பது இயற்கைதான். நாம என்ன ஆலோசனை சொன்னாலும், அதனை அவங்க ஏத்துக்கிற மனநிலையில் இருக்க மாட்டாங்க. திரைப்படத்தை பார்த்துட்டு, ஆடியன்ஸ் தர்ற கருத்துக்களை ஒப்பிட்டு, இரண்டாவது படத்தில் இருந்து எடிட்டர் சொல்றதை கேட்டுப்பாங்க. ‘அட்டு’ படமும் அப்படித்தான் அமைஞ்சது!”

உங்கள் குழுவை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

“என்கூட பணியாற்றும் எல்லாரும் எடிட்டர்ஸ் தான். உதவியாளர்கள்ன்னு யாரும் இல்லை. நான் இல்லேன்னா கூட அவங்களே எடுத்து, வேலை செய்யணும். அப்படி ஒரு டீம் தான் என்கூட இயங்கிட்டு இருக்கு!” நறுக்கென்று முடித்தார் எல்.வி.கே.தாஸ். 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles