எல்லா பாடலும் எங்களுக்கு சவால் தான்! மணிரத்னம் - ஏ.ஆர்.ரஹ்மான் சொல்லும் சீக்ரெட்!

Thursday, April 6, 2017

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநரின் படம் அறிவிப்பு வெளியானவுடனே, இந்திய சினிமா உலகமே திரும்பிப் பார்க்கிறது என்றால் அந்த இயக்குநர் மணிரத்னம் தான்!. அந்தவகையில், நாளை வெளியாக உள்ள ''காற்று வெளியிடை'' படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஜோடியாக நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

அண்மையில், இப்படம் குறித்து இயக்குநர் மணிரத்னமும், ஏ.ஆர். ரஹ்மானும்  சந்தித்துப் பேசினர். அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, அவர்கள் அளித்த பதில்கள் இதோ!

தமிழ் சினிமாவில் 25 வருடம் உங்களுக்கும், இயக்குநர் மணிரத்னத்துக்குமான பயணம் குறித்து சொல்லுங்களேன்? 

இசைப்புயல் தனது முகத்திற்கே உரிய எளிமையான புன்முறுவலுடன் பேச ஆரம்பித்தார். "அந்த காலக்கட்டத்தில் இயக்குநர் மணியின் படங்களை அதிகமாக  பார்ப்பேன். முதன் முதலில் அவருக்காக இசையமைக்கும்போது நானே என்னை பல கேள்விகள் கேட்டுக் கொண்டேன். எந்த லெவலுக்கு வேலை செய்ய வேண்டும். ஒரு இரசிகனாக அவரின் படத்திற்கு எவ்வாறு  இசையமைக்கலாம் என எண்ணினேன். அவரும் தன்னோட கருத்துக்களை தெரிவிப்பார்!" என்றவுடன், அவர் விட்ட இடத்திலிருந்து  இயக்குனர் மணிரத்னம் தனது வெள்ளை குறுந்தாடியை தடவிய படியே பேச தொடங்கினார். "முதன் முதலாக அவரைச் சந்தித்த போதே, வேற ஒரு தரத்தில் அவரின் இசை இருந்தது. அப்போதே  நான் முடிவு செய்தேன். மேலும் அவரின் புதிய யோசனை என்னை மிகவும் கவர்ந்தது" 

புதிய யோசனைகள் என்று சொல்லும்போது உங்கள் கூட்டணியில் பல லவ் ஸ்டோரி வந்துள்ளது. நீங்கள் எவ்வாறு அதற்கான முயற்சியை மேற்கொண்டீர்கள்? 

"அதற்கு மூன்று விஷயம் முக்கியம். நேரம், பணம். தரம். இது அனைத்தும் எங்களுக்கு கிடைத்தது. இதுதான் காரணம் என நினைக்கிறன். மேலும் ஒரு கட்டாயம் இருக்காது. 5 நாட்களில் பாடல் வேண்டும் என்று கூறமாட்டார். இலக்கை எவ்வாறு அடையலாம் என்ற எண்ணம் மட்டும் தான் இருக்கும். மணி அவர்கள் என்னிடம் 'ரோஜா' படத்திற்கு முன்பு  சந்திக்கும் போது, 'நீங்கள் ராஜாவுடன்  இசையமைத்தீர்கள். மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகள் கூட உங்களிடம் தரமான இசை உள்ளது' என கூறினார். அப்போது நான் எப்படி இசை போடலாம் என தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். பிறகு 5 வருடம் கழித்து வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதை உணரமுடிந்தது!"

'காற்று வெளியிடை' திரைப்படம்  எப்படி வந்திருக்கிறது?

இருவரும் மிகுந்த சிரிப்புடன் "நாங்கள் எங்களது பெஸ்ட்டை கொடுத்துள்ளோம். இனி மக்கள் தான் படத்தை பற்றிய கருத்தை முடிவு செய்ய வேண்டும்!."

உங்கள் இருவருக்கும் இடையில் சினிமாட்டோகிராஃபி, மியூசிக் போன்ற விஷயங்களில் ஆரோக்கியமான போட்டி உண்டா?

"தனிபட்ட விதத்தில் இருவருக்கும் எந்தப் போட்டியும் பொறாமையும் கிடையாது. இசை என்பது ஒரு கலை. ஒரு சில படங்களில் பாடல் தான் படத்தை முடிவு செய்யும்!"

பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள், 'கடல்' படத்தில் அவரின் பங்களிப்பு இல்லாமல் இருந்த சூழ்நிலையில், அவரின் புத்தகத்தின் வரிகளுக்கு இசையமைத்தீர்களே?

"வைரமுத்து அவர்கள் மிகவும் பொறுமையானவர். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எனவே எங்களுக்கு எவ்வாறு டார்கெட்டை அடைவது என்பது தெரியும். அவருடன் பணியாற்றியது எனக்கு நல்ல அனுபவமாக  இருந்தது. சில நேரங்களில் ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனாலும் சரியானதை கொண்டு வர நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம்."

3 பேருக்கும் எதாவது ஒரு பாடல் சவாலாக இருந்திருக்கிறதா.?

"எல்லா பாடலும் எங்களுக்கு சவால் தான்!" 

நீங்கள் எப்போதும் வித்தியாசமான படங்களையே தருகிறீர்களே?

"ஏதாவது புதிதாக செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும். பல விஷயம் கேட்டு கேட்டு செய்வேன்!"

பல இசையமைப்பாளர்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கிறதா? 

ஏ.ஆர்.ரஹ்மான். தனது மெல்லிய குரலில் "வயசாகிறது என்று நினைக்கிறன்..." என்றதும், ,இயக்குநர் மணிரத்னம் மெல்லியதாக புன்னகைக்கிறார். சந்திப்பு முடிவுக்கு வந்தது. இருவரும் கைக்குலுக்கிக்கொண்டு விடைபெற்றனர்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles