பெண்களைப் பற்றிய உலகத் திரைப்படங்கள்!  எங்கேயெல்லாம் பெண் தலைமையேற்கிறாளோ அங்கே எப்போதும் வெற்றி!

Friday, March 31, 2017

தி ஷாலோஸ்! (The Shallows)
உலகின் வலிமையான உயிரினம் பெண் தான். அது உடல் வலிமையானாலும் மன வலிமையானாலும் அவளுக்கு நிகர் இவ்வுலகில் வேறு யாருமில்லை.

ஆகவேதான் வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் பாத்திரம் மதிப்பு மிக்கதாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரமோ, அலுவலகப் பொறுப்போ, வீட்டு நிர்வாகமோ எங்கேயெல்லாம் பெண் தலைமையேற்கிறாளோ அங்கே எப்போதும் வெற்றியே!

எத்தகைய இக்கட்டான சூழல்களையும், பிரச்சினைகளையும் எதிர்கொண்டு, கடந்து செல்லும் துணிவு, இயற்கை பெண்ணுக்கு அளித்த கொடை. ஆகவேதான், "இவ்வுலகம் தாய்வழிச் சமூகமாக இருந்தது, பின்னர் அது ஆண்களின் கைக்கு மாறியது. மீண்டும் இந்த  வாழ்க்கை அத்தகைய சமூகத்தை நோக்கியே செல்லும்!" என்று மானுட அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க பெண்ணின் மகத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் நாம் ஒவ்வொருவரும் 'தி ஷாலோஸ்' படத்தை காண வேண்டும்!

'ஒரு தீவின் ஓரமுள்ள கடற்கரையில் வாட்டர் சர்பிங் செல்லும் பெண், சுறாவோடு மல்லுக்கட்டி, ஜெயிப்பது' என்கிற ஒன்லைன் தான் கதை என்றாலும், அதை சொல்லிய முறையும், காட்சிப்படுத்திய விதமும் படத்தின் தரத்தை பல மடங்கு கூட்டிவிட்டது. 

அமைதியாக காட்சியளிக்கும் கடலை பார்த்துக்கொண்டே கடலோரம் ஒரு சிறுவன் நிற்கிறான் என்பதில் இருந்து படம் தொடங்குகிறது. அந்த சிறுவன் கடற்கரையை நோக்கி மெதுவாக நடக்கிறான். விடாமல் கடற்கரையில் வந்து அலைகள் மோதியபடி இருக்கிறது. அந்த அலைகளினூடே ஒரு மர்மமானப் பொருள் ஒன்று வந்து ஒதுங்குகிறது. முதலில் அதைப் பார்த்து மிரளும், அந்தச் சிறுவன் பின் தன்னுடைய பயத்தை விலக்கிவிட்டு, அருகில் சென்று அந்தப் பொருளை கையில் எடுத்துப் பார்க்கிறான். அது உடைந்து போன ஒரு ஹெல்மெட். அதன் தலைப்பகுதியில் ஒரு சிறிய வகையிலான வீடியோ கேமிரா இருக்கிறது. அதில் உள்ள வீடியோவை ஆன் செய்து பார்க்கும் சிறுவன், தலைதெறித்து வீட்டை நோக்கி ஓடுகிறான்.

இப்போது காட்சி மாறுகிறது. மருத்துவக் கல்லூரியில் பாதியிலேயே திரும்பிய நான்சி ஆடம்ஸ், தன் தாயை இழந்த பிறகு, வாட்டர் சர்பிங் ஆர்வம் கொள்கிறாள். வட அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ தீவு ஒன்றில் தன்னுடைய கைடு கேர்லோஸ் உதவியுடன் தனியே செல்கிறாள். அதிகமாக ஆள் நடமாற்றம் இல்லாத அந்த கடற்கரை, பெரும் அமைதியுடன் காணப்படுகிறது. பரந்த விரிந்த நீல நிறக் கடலின் மேலே ஏராளமான பறவைகள் பறந்துகொண்டிருக்கின்றன. ஒரு பெருங்காட்டை ஜீப்பில் கடந்துதான் அந்த தீவுக்கு போக வேண்டியிருக்கிறது. அந்த கடற்கரையில் நான்சி இறக்கிவிட்டுவிட்டு செல்கிறான். அவனுடைய உதவிக்காக டாலர்களை அவனிடம் நீட்டுகிறாள் நான்சி. அதை வாங்க மறுக்கும் கைடு, பாதுகாப்பாக வாட்டர் சர்பிங் செய்யுமாறு சொல்லிவிட்டு செல்கிறான். 

வெள்ளை வெளேர் என பரந்துவிரிந்த மணற் பரப்பின் அழகை பார்த்துக்கொண்டே நான்சி, சர்பிங் செய்வதற்கான ஆடைகளை அணிந்துகொண்டு, உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு கடலை நோக்கிச் செல்கிறாள். அவளின் கையில் ஒரு நவீன தொழில்நுட்ப வசதி கொண்ட அலைபேசி இருக்கிறது. அதில் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவு செய்துள்ள புகைப்படங்களை எல்லாம் பார்த்துக்கொண்டே அந்த கடற்கரையில் தான் வந்துவிட்டதற்கான செல்பியையும் எடுத்து, பதிவிடுகிறாள். மேலும் வீட்டில் தனித்திருக்கும் தன்னுடைய மகளுக்கும், தந்தைக்கும் தகவல் தெரிவிக்கிறாள். அவர்கள் அவளின் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றனர். அலைபேசியை தன்னுடைய பேக்கில் வைத்துவிட்டு, கையில் வாட்டர் ப்ரூஃப் உள்ள கடிகாரத்தை கட்டிக்கொண்டு, மிகுந்த நேசிப்போடு கடலை நோக்கி ஓடுகிறாள் நான்சி, எதிர்வரும் ஆபத்தை உணராமல்!.

ஏற்கனவே, அந்த கடற்கரையோரம் இரண்டு ஆண்கள் வாட்டர் சர்பிங்கில் ஈடுபட்டிருக்கின்றனர். அதில் ஒருத்தன் மட்டும் தலையில் ஹெல்மெட் அணிந்து, அதன் மீது கோ&ப்ரோ எனும் மிகச் சிறிய வீடியோ கேமிராவை பொருத்தி, தன்னுடைய ஒவ்வொரு செய்கையும் பதிவு செய்துகொண்டிருக்கிறான். வேகமாக வரும் அலையில் சறுக்கிக்கொண்டே போய் டைவ் அடிப்பது போன்றவற்றை அவன் செய்கிறான். அந்த இருவரை காணும் நான்சி, மிகுந்த உற்சாகத்தோடு கடலில் தனது சர்பிங் கருவியோடு தாவி, நீந்தி உள்ளே செல்கிறாள். பின்னர் அவள் திரும்பி கடற்கரைக்கு வந்து சேர்ந்தாளா? அங்கே இருக்கும் ஆபத்துக்களை எப்படி துணிவோடு எதிர்கொள்கிறாள்? கடலினுள் வாட்டர் சர்பிங் செய்த மூன்று பேரில் எத்தனை பேர் உயிருடன் திரும்பினர்? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் கூடிய திரைக்கதை முடிச்சுகளோடு படம் முடிவுக்கு வருகிறது!

86 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தின் தொண்ணூறு சதவீத காட்சிகள் கடலுக்குள் படம் பிடிக்கப்பட்டவை. அதுவும் ஒளிப்பதிவாளர் பிலேவியோ லெபியானோ உழைப்பு, மிரள வைக்கக் கூடியது. 'அண்டர் வாட்டர் போட்டோகிராஃபி'யில் பெரிய நிபுணுத்துவம் இருந்தால் மட்டுமே, இது சாத்தியம். படத்தின் பெரிய வெற்றிக்கு ஒளிப்பதிவின் பங்கு மகத்தானது. கதையின் நாயகி நான்சியோடு நாமும் கடல் அலைகளுடனும் கலந்து விடுவோம். அந்தளவிற்கு பார்வையாளனோடு ஒன்றிவிடக்கூடிய அளவுக்கு ஒளியை, அவர் கையாண்டுள்ள விதம் அருமை. இந்தத் துறைக்குள் நுழைய விரும்பும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டியவை. இயக்குநர் ஜாம் கொலேசெர்ரா இயக்கிய 'தி ஷாலோஸ்' திரைப்படம், கடந்த ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக் குவித்தது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles