குறும்படத்திலிருந்து செல்லுலாய்டுக்கு வந்தேன்! - இயக்குனர் கண்ணன் ரங்கஸ்வாமி

Friday, March 31, 2017

நூற்றாண்டு கால சினிமா, இன்று பல பரிணாமங்களைக் கடந்து, இன்றும் புதுமையாக இளமையாகவே உலா வருகிறது. ஒவ்வொரு படிநிலையிலும், சினிமாவை அடுத்த தளத்துக்கு நகர்த்தும் பொறுப்பு புதிய தலைமுறை இயக்குநர்களையே சேரும். அந்தவகையில், கோலிவுட்டுக்கு லேட்டஸ்ட் அறிமுகம் கண்ணன் ரங்கஸ்வாமி. ஒரே அறையில் நடக்கக் கூடிய கதையை விறுவிறுப்பாக சொல்லி, எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அவர் 'தாயம்' படம் குறித்த சுவாரஸ்யங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

"வாழ்க்கையில புதுசா ஏதாவது, ஒரு விஷயத்தை தொடங்கப் போறோம்னா, அதன்  தொடக்கப்புள்ளி தான் தாயம். நம்ம முன்னோர்கள் விளையாடிய ஒரு விளையாட்டு அது. அந்த விளையாட்டை தொடங்குவதற்கு, தாயம் விழுதல் ரொம்ப அவசியம். தாயம் விழுந்ததும் அதனுள் சென்று நாம் வெற்றி, தோல்விகளை சந்திப்பது வழக்கம். அதேபோல், இயல்பு வாழ்க்கையிலும், தாயம் என்ற ஒரு புள்ளியே நம் எல்லோரையும் இயக்குகிறது. எந்தவொரு விஷயத்தையும் நாம் எப்படி தொடங்குகிறோம் என்பதைப் பொறுத்தே அதன் முடிவு அமைகிறது. இக்கருத்தை மையமாக வைத்து திரையில் கொண்டு வந்ததுதான் ‘தாயம்’. 

எட்டு பேர் நேர்காணலுக்கு போறாங்க. அதுல யாருக்கு தாயம் விழுந்துச்சு, யாருக்கு விழல என்பதை வைத்து, முழுக் கதை¬யும் எழுதினேன். ‘கதை, திரைக்கதை, வசனம் மூலமாக எல்லோருக்கும் அறிமுகமான சந்தோஷ் தான் இந்தப் படத்தோட நாயகன். அவரைத் தவிர்த்து, நாங்க எல்லாருமே புது வரவுகள்தான். எனக்கு சினிமாவில் முன் அனுபவம் கிடையாது. யாருக்கிட்டேயும் உதவி இயக்குனராக நான் வேலைப்பார்க்கல. குறும்படம் மூலமாகத்தான் செல்லுலாய்டுக்கு வந்தேன்.

சினிமாவில் வித்தியாசமாக ஏதாவது முயற்சி செஞ்சே ஆகணும்னு இருந்தேன். அப்படி யோசிச்சு கிடைச்சதுதான் ‘தாயம்' படத்தோட கதைக்கரு. மொத்தப் படத்தையும் ஒரே அறையில எடுத்திருப்போம். அதுக்காக திரைக்கதை எழுதும் பொழுது ரொம்ப மெனக்கெட வேண்டியதாகப்  போச்சு. ஏன்னா இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய படத்தை ஆடியன்ஸுக்கு போரடிக்காம நகர்த்தணும். அதனால, கொஞ்ச நேரம் ஹாரர், திரில்லர், ரொமான்ஸூன்னு எல்லாத்தையும் வெரைட்டியா படத்துல வச்சோம். இப்படி வித்தியாசமா, ரிஸ்க் எடுத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்டை தயாரிப்பாளர் ஏ.ஆர்.எஸ். சுந்தர்  அங்கீகரிச்சாறு. அதுக்கு நான் அவருக்கு நன்றி தெரிவிச்சுக்கிறேன். 

அதோட இந்தப் படத்தோட ஃபர்ஸ்ட் லுக்கே அனைவரையும் ஈர்த்துச்சு, பேசப்பட்டது. இதுக்கு முழு காரணம் எங்க டிசைனர் சிந்து கிராபிக்ஸ் பவன். இந்தப் படத்துல முக்கியமான கேரக்டர்ல மாஸ்க் போட்டு ஒரு உருவம் வரும். அதுக்கு நாங்க ஹாலிவுட்ல உபயோக்கிக்குற ப்ராஸ்த்தெடிக் மாஸ்க்கை பயன் படுத்தி இருக்கோம். இந்தப் படத்துல பணியாற்றிய கேமரா மேன் பாகி பற்றி சொல்லியே ஆகணும். நீரவ் ஷா கிட்டே உதவியாளராக இருந்தவரு. ஒரே இடத்துல ஷூட் பண்ற கான்செப்ட். ஆனால் விஷுவல்ல வித்தியாசப் படுத்தி அசத்திட்டாரு. ஒரு ரூம்ல நிறையா ஆங்கிள் வைக்கணும்னா அதுக்கு மேத்தமேடிக்கல் சிம்மெட்ரி தெரிஞ்சாகணும். இதுலயும் நிறைய மெனக்கெடல் இருக்கு. நானே சில ஷாட்கள் ஒரே இடத்துல வச்சு எடுத்தேன்னா, அவரு கரெக்ட்டா அதை சுட்டிக் காட்டி, வேறு மாதிரி மாத்திடுவாரு.

இந்தப் படத்தோட முதல் ஹீரோவே இசையமைப்பாளர் சதீஷ். படத்துல பின்னணி இசைக்கு பெரிய ஸ்கோப் இருக்கு. இரண்டாம் பாகத்துல செட் உபயோகிச்சிருக்கிறோம். அது படத்தோட ஹீரோவா மாறியிருக்கு. அதுக்கு காரணம் கலை இயக்குனர் வினோத் .

அதேபோல இந்தப் படத்துல முக்கியமான ஒரு அம்சம் எடிட்டிங். ஒரே அறையில எடுக்கிறதால திரைப்படம் நாடகம் போல தெரியக் கூடாது.  எடிட்டர் சுதர்சனுக்கும் எனக்கும் நல்ல வேவ் லென்த் இருந்துச்சு. தேவையில்லாம எபெக்ட் போடாக்கூடாதுங்கிறதுல தெளிவாக இருந்தோம். அதன்படியே படம் வந்திருப்பதில் சந்தோஷம்!. சினிமாவுக்கே புதுசா இருக்குற எங்க டீம் மேல நம்பிக்கை வச்சு 'காஸ்மோ வில்லேஜ்' படத்தை வெளியிட்டிருக்காங்க. நடிகர் விஜய் போன்ற பெரிய ஸ்டார்கள் படத்தை விநியோகிக்கும் அவங்க, எங்களுடைய படத்தை வாங்கியது ஆண்களுக்கு கிடைத்த வெற்றி.” - வெற்றி புன்னகையுடன் முடித்தார் கண்ணன் ரங்கஸ்வாமி!

- பவித்ரா

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles