திறமையை விட, ஆர்வம்தான் முக்கியம்! சிலாகிக்கும் ‘ரெமோ’ எடிட்டர் ரூபன் 

Friday, September 30, 2016

"ஒரு திரைப்படத்துக்கு இயக்குனர் எவ்ளோ முக்கியமோ, அதே அளவு எடிட்டரும் ரொம்ப முக்கியம். பார்வையாளர்களுக்கு இயக்குனர் என்ன சொல்ல விரும்புகிறாரோ, அதை எடிட்டர்தான் கரெக்டா புரிஞ்சுக்கிட்டு சரியான ஷாட்களை கோர்க்கணும். அதுக்கு ஒரு எடிட்டருக்கும் இயக்குனருக்கும் இடையே வேவ்லென்த் ரொம்ப முக்கியம்" என்று கோர்வையாக வார்த்தைகளை பார்த்துப் பார்த்து கோர்க்கிறார் எடிட்டர் ரூபன். புதிய திசையில் பயணிக்கும் இளம் இயக்குனர்களுக்குப் பிடித்த படத்தொகுப்பாளர் இவர்.

பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கும் ‘ரெமோ’ படம், இவரது கத்தரிப்பில் தகதகத்துக் கொண்டிருக்கிறது. 

 

‘ரெமோ’ பற்றி..

“ஒரு நடிகனா ஆகணும்கிற  இலட்சியத்தைத் தேடிப் போறவன், இடையில ஒரு பெண்ணைச் சந்திக்கிறான். அவளை விரும்புறான். அந்தப் பெண்ணை அடைய, அவனே பெண் வேஷம் போட நேரிடுது. அதுக்கப்புறம் அவன் இலட்சியம் எப்படி நிறைவேறுது, அந்தப் பெண்ணோட காதல் எப்படி கைகூடுதுங்கிற படம்தான் ‘ரெமோ’.”

 

இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?

“ரெமோ ஒரு வித்தியாசமான படம். அதோட, சிவகார்த்திகேயன்  பெண் வேடத்துல  நடிக்குறார். அவரோட எக்ஸ்பிரஷன்ஸை, பல ஆங்கிள்ல ஷூட் செஞ்சிருப்பாங்க. இந்த சிச்சுவேஷனுக்கு இப்படி ஒரு ஆங்கிள் எடுத்துப் போட்டா நல்லயிருக்கும்னு, நாங்க ரொம்ப மெனக்கெட்டு தேர்ந்தெடுத்திருப்போம். இது எங்களுக்கு சவாலாக கூட இருந்ததுன்னும் சொல்லலாம்.”

 

இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் பற்றி..

“பாக்கியராஜ் கண்ணன், எனக்கு ரொம்ப நல்ல நண்பர். அவர், இயக்குனர் அட்லீகிட்டே ‘ராஜா ராணி’ படத்துல அஸோசியேட் டைரக்டராக வேலை செஞ்சுட்டிருந்தாரு. அந்தப் படத்தோட எடிட் நடக்கும்போது, எடிட் ரூம்ல என்னோட பாக்கியராஜ்  இருப்பாரு. ரொம்ப ஜாலியா இருப்போம். சமயத்துல அட்லீ கூட வந்து கேப்பாரு, “என்ன இவ்ளோ கூத்தடிக்கிறீங்க, வேலை நடக்குதா இல்லியா?”ன்னு. ஆனா, வேலை பாட்டுக்கு அமைதியா நடந்திட்டுதான் இருக்கும். எனக்கும் அவர்கூட ஒர்க் பண்ண கம்பர்ட்டபிளா இருக்கும். அப்படித்தான் ‘ரெமோ’ படத்தொகுப்பும் இருந்தது. ஏற்கனே நாங்க பழகி இருந்ததால, எங்களுக்குள்ள வேவ்லென்த் நல்லா செட் ஆகி இருந்தது. அவர் நினைச்ச அவுட்புட்டையும், என்னால பெஸ்ட்டா கொடுக்க முடிஞ்சுது.”

 

இன்றைய எடிட்டிங் உலகத்துல, கட்டிங் சென்ஸ் முக்கியமா அல்லது காமன் சென்ஸ் முக்கியமா?

“ரெண்டுமே முக்கியம். ஏன்னா யதார்த்தம்தான் சினிமா; சினிமான்னா யதார்த்தம். ஒரு சினிமா யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கணும்; அதாவது, கேரக்டர் அழுகிற இடத்துல ஆடியன்ஸையும் அழ வைக்கணும். அதோட, ஒரு ஷாட்டோட நீளத்தை நல்லா புரிஞ்சு வச்சிருக்கணும். ஒரு ஷாட் எவ்ளோ நேரம் இருக்கணும், இவ்ளோ டைம்லைன் அவசியமான்னு யோசிக்கிறதை கட்டிங் சென்ஸுன்னும் சொல்லலாம், காமன் சென்ஸுன்னும் சொல்லாம். என்னைப் பொறுத்தவரை, ஒரு எடிட்டருக்கு ரெண்டு சென்ஸுமே சரிசமமாகத்தான் இருக்கணும்.”

 

விருது பெற்றால் மட்டுமே, படத்தொகுப்பாளர்களின் மீது வெளிச்சம் படிகிறதே?

“ஒரு எடிட்டரோட வெற்றியே,  சினிமாத்திரைக்கும் பார்வையாளர்களுக்கும் ஆரோக்கியமான பாலமாக இருக்குறதுதான். ஏற்கனவே சொன்ன மாதிரி, திரையில தென்படுற உணர்வுகளை ஆடியன்ஸ் பிரதிபலிக்கணும். பார்வையாளர்கள் தன்னை மறந்து லயித்து ஒரு படத்தைப் பார்ப்பதில்தான், ஒரு எடிட்டரோட வெற்றி அடங்கியிருக்குன்னு நான் ஆணித்தரமா நம்புறேன். ஏனோ, சில பெரிய படங்களோட எடிட்டர் தான் வெளியில தெரியுறாங்க. இந்த நிலை மாறும்னு நம்புறேன்.”

 

உங்களோட சினிமா பயணம் எவ்வாறு தொடங்கியது? 

“நான் லயோலா கல்லூரியில விஸ்காம் படிச்சேன். 2006ல எடிட்டர் ஆன்டனிகிட்ட அசிஸ்டண்டா சேர்ந்தேன். அப்போ ‘வேட்டையாடு விளையாடு’ படத்துல ஒர்க் பண்ண ஆரம்பிச்சு, 2011 ல ‘விண்ணைத்  தாண்டி வருவாயா’ படம் வரைக்கும் இருந்தேன். ‘கண்டேன்’ படத்துல, முதன்முதலா ஒரு எடிட்டராக அறிமுகமானேன். அதுக்கப்புறம் ‘சமர்’, ‘ராஜா ராணி’ன்னு வரிசையா பதினைந்து படங்கள்ல பணியாற்றிவிட்டேன்.”

 

உங்களது குழுவை, நீங்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள் ?

“திறமையை விட, எனக்கு ஆர்வம்தான் முக்கியம். இந்தத் துறையில பணிபுரியும் ஆர்வமும் ஆவலும் எவ்ளோ இருக்குன்னு பார்ப்பேன். என்கிட்ட சேர்றவங்க, விஸ்காம் இல்லேன்னா டி.எப்.டி. படிச்சுட்டுதான் வந்திருப்பாங்க. அவங்களுக்கு பல எடிட்டிங் டெக்னிக்ஸ் தெரிஞ்சிருக்காது. இங்கே வந்துதான் கத்துப்பாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும், எடிட்டிங் பண்ண பேஷன் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். அதோட, அவங்ககிட்ட நான் என்ன கத்துக்க முடியுமோ, அதையும் கத்துக்குவேன்.”

 

மன அழுத்தம் தாக்காமல் இருக்க, நீங்களும் உங்க உதவியாளர்களும் என்ன பண்றீங்க? 

“சினிமாத்துறையில இருக்கிறவங்களுக்கு ஸ்ட்ரெஸ் நிறையா இருக்கும். அதுவும் எடிட்டிங் பண்ணும்போது, தொடர்ச்சியா மானிடர் முன்னாடி உட்கார்வோம். அதனால கண் எரிச்சல் வரும். மெஷின்ல இருந்து வர்ற சூடுனால, உடல் சூடாக வாய்ப்பு நிறைய உண்டு. அதனால, என்னோட உதவியாளர்களை சாலிட் ஃபுட் எடுக்கிறதுக்குப் பதிலாக லிக்விட் நிறைய எடுக்கச் சொல்லுவேன். அப்பப்ப பிரேக் எடுத்துக்கிட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர் மனம்விட்டு பேசுவோம், கலாய்ச்சிப்போம். இந்த மாதிரி ஏதாவது செஞ்சா, எங்க மனசும் லேசாகுது. வேலை பிரஷரையும் மறக்க முடியுது.”

 

உங்கள் குருநாதர் ஆண்டனி போல, படம் இயக்கும் ஆசை இருக்கிறதா?

“கண்டிப்பா இருக்குங்க. கல்லூரியில படிக்கும்போது, நிறைய குறும்படங்கள் எடுத்திருக்கேன். ஆனா, இப்போ படம் இயக்க எந்த ஸ்டெப்பும் எடுக்கலை. இனி அதுக்கான முயற்சிகளை தொடங்கலாம்னு இருக்கேன். சீக்கிரமே படம் இயக்கவும் வருவேன்.” ரூபனின் குரலில் நம்பிக்கை கொப்பளிக்கிறது. உழைப்பும் முயற்சியும் இப்போதிருக்கும் இடத்தைத் தந்தது போல, எதிர்காலமும் அவரது விருப்பத்தை நிறைவேற்றும்!

- பவித்ரா 

மேலும் படிக்க:
விஜய்தான் பாவம்! ‘தேவி’ அனுபவம் சொல்லும் பிரபுதேவா!
என் தகுதியைப் பார்த்துதான், நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டாங்க!  மனம் திறக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் 
சிம்பு என் அண்ணா! உணர்ச்சிவசப்படும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles